’அரசு ஊழியர்கள் தங்களை சூப்பர் ஹீரோவாக நினைக்கக் கூடாது...!’ - சென்னை உயர்நீதிமன்றம்

author img

By

Published : Oct 1, 2022, 8:42 AM IST

’அரசு ஊழியர்கள் தங்களை சூப்பர் ஹீரோவாக நினைக்கக் கூடாது...!’ - சென்னை உயர்நீதிமன்றம்

அரசு ஊழியர்களுக்கு அதிகாரம் கொடுப்பது மக்கள் நலனைக் காப்பதற்காகவே தவிர, அதை தவறாக பயன்படுத்த அல்ல என்றும், தன்னிடம் அதிகாரம் உள்ளதால் தன்னை சூப்பர் ஹீரோவாக நினைத்து கொள்ள கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹோட்டல்களின் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் அதன் செயலாளர் ஆர்.ராஜ்குமார் தாக்கல் செய்துள்ள மனுவில், மாநில உணவு பாதுகாப்பு துறை அதிகாரியான சதிஷ்குமார், உணவுப் பொருட்களின் மாதிரியை ஆய்வுக்கு எடுத்துக் செல்லும்போது விதிகளை பின்பற்றாமல், ஆய்வு செய்யும் நடைமுறையை அவருடைய விளம்பரத்திற்காக ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் நேரலை செய்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

சோதனைக்கு எடுத்துச் சென்று அதில் தரக்குறைவு என நிரூபணம் ஆகும் வரை, தங்கள் உணவகங்களின் வணிக பெயர்கள் கெடுவதுடன், கடின உழைப்பால் சம்பாதித்த நற்பெயரையும், மக்கள் மத்தியில் நல்லெண்ணத்தை் களங்கப்படுத்துவதாகும் அம்மனுவில் தெரிவித்துள்ளார்.

எனவே உணவு பாதுகாப்பு மற்றும் தரகட்டுபாட்டு சட்டத்திற்கு உட்பட்டு சோதனைகளை மேற்கொள்ள உத்தரவிடவேண்டும் என அதிகாரி சதீஷ்குமாருக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. எஸ்.ராமன், மற்றும் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் விளம்பரத்திற்காக சதீஷ்குமார் தொடர்ந்து இப்படி செய்வதாகவும், உணவு பாதுகாப்பு அதிகாரி சதீஷ்குமார் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி பல்வேறு உணவகங்களில் பணம் கேட்டு மிரட்டியதால் உணவக உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளதாகவும் வாதிட்டார்.

அப்போது நீதிபதி, ”அரசாங்கம் அதன் ஊழியர்களுக்கு அதிகாரம் கொடுப்பது மக்கள் நலனை காப்பதற்காகவே தவிர, அதை தவறாக பயன்படுத்த அல்ல. தன்னிடம் அதிகாரம் உள்ளதால் தன்னை சூப்பர் ஹீரோவாக நினைத்து கொள்ள கூடாது” என தெரிவித்தார்.

மேலும், கெட்டுப்போன பொருள் தான் என்று ஆய்வகத்தில் உறுதிப்படுத்தபட்ட பின் சம்பந்தபட்ட இடத்தில் அவர் நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளதாகவும், ஆனால் ஊடகங்களை ஏன் அழைத்து செல்கிறார் எனவும், விளம்பரம் வேண்டும் என்றால் திரைத்துறையில் சென்று நடிக்கலாமே என்றும் கேள்வி எழுப்பினார்.

இனி உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சோதனைக்கு செல்லும்போது துறை தொடர்புடைய புகைப்பட கலைஞர் அல்லது வீடியோ பதிவாளரை அழைத்து செல்லலாம் என்றும், அதன் பதிவுகளை விசாரணை முடிவில் தான் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், அதுவரை ஊடகங்களுக்கு கொடுக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் உணவகங்களில் நடத்தப்படும் திடீர் சோதனைகளை ஊடகங்களில் வெளியிட தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதிஷ்குமாருக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிபதி, தமிழக அரசு, உணவு பாதுகாப்பு துறை, மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அக்டோபர் 17ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க: ‘சிறிய மருத்துவ நிறுவனங்களை முறைப்படுத்தும் கட்டணத்தை குறைக்க வேண்டும்’ - மருத்துவர்கள் சங்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.