SMS மூலம் இந்தியா முழுவதும் சைபர் மோசடி செய்த கும்பல் கூண்டோடு கைது - அழைத்து பாராட்டிய டிஜிபி!

author img

By

Published : Mar 16, 2023, 9:57 PM IST

Etv Bharat

செல்போன் குறுஞ்செய்தி மூலம் இந்தியா முழுவதும் சைபர் மோசடி செய்தது தொடர்பாக புது டில்லியைச் சேர்ந்த சையது ரஹிப் குர்ஷித் உள்ளிட்டோர் அடங்கிய நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

செல்போன் குறுஞ்செய்தி மூலம் இந்தியா முழுவதும் சைபர் மோசடி செய்த கும்பல் கூண்டோடு கைது

சென்னை: சிவகங்கை மாவட்டத்தில் பொதுமக்களிடம் செல்போன் மூலமாக எஸ்.எம்.எஸ் அனுப்பி பண மோசடி செய்தது தொடர்பாக கடந்த 2022ஆம் ஆண்டில் 14 புகார்கள் மற்றும் 2023ஆம் ஆண்டில் 11 புகார்கள் பெறப்பட்டு, அது தொடர்பாக மொத்தம் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. செல்போன் குறுஞ்செய்தி மூலம் பணமோசடியில் ஈடுபடும் நபர்களைத் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் வசிக்கும் முத்துக்கருப்பன் என்பவரின் தொலைபேசி எண்ணுக்கு 25.02.2020ஆம் தேதி அறிமுகமில்லாத எண்ணிலிருந்து தங்களது வங்கி கணக்கு பிளாக் செய்யப்படப்போவதாகவும், அதனால் PAN CARD இணைக்குமாறும் ஒரு குறுஞ்செய்தி வருகிறது.

அந்த குறுஞ்செய்தியில் வந்த Linkஐ கிளிக் செய்து அவரது ID, PASSWORD, MOBILE NUMBER ஆகிய தகவல்களை பதிவு செய்தவுடன் அவருக்கு ஒரு OTP வருகிறது. அந்த OTP எண்ணை பதிவு செய்தவுடன் அவரது கணக்கில் இருந்து ரூ.99,887 பணம் மோசடியாக திருடப்பட்டது.

இதுதொடர்பாக சிவகங்கை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வராஜ் மேற்பார்வையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

குறுஞ்செய்தி அனுப்பிய சிம்மின் முகவரி மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட MOBILE PHONE பற்றி தகவல் சேகரிக்கப்பட்டதில், அதே மொபைல் போனில் ஒரே நாளில் 40 சிம் கார்டுகள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. அதனுடைய டவர் லொக்கேஷன் ஆய்வு செய்யப்பட்டு கோயம்புத்தூர், பீளமேடு பகுதி சென்று விசாரித்ததில் ’சிக்கா மார்க்கெட்டிங்’ என்ற பெயரில் கோயம்புத்தூரைச் சேர்ந்த சரவணன் (வயது 52) மற்றும் அவரது மனைவி பாரதி (வயது 44) இருவரும் பல வருடங்களாக மோசடி குறுஞ்செய்தி அனுப்பும் தொழிலை செய்தது தெரியவந்தது.

இவர்கள் நாச்சிபாளையத்தைச் சேர்ந்த ஏஜெண்டுகள் ராம் குமார் (வயது 29) மற்றும் காரமடையைச் சேர்ந்த வினோத் குமார் (வயது 31) ஆகியோர் மூலமாக கோயம்புத்தூரைச் சேர்ந்த சானவாஸ் (வயது 22), உமர்முகமது (வயது 19), பரத் பாலாஜி (வயது 30), திருச்சியைச் சேர்ந்த ஜெயராம் (வயது 39), தூத்துக்குடியைச் சேர்ந்த மாரீஸ்வரன் (வயது 23), பொள்ளாச்சியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (வயது 32), தென்காசியைச் சேர்ந்த மூர்த்தி (வயது 48) ஆகியோர்களிடமிருந்து சுமார் 6,000 போலி சிம்கார்டுகளை விலைக்கு வாங்கியுள்ளனர்.

மேலும் டெல்லியைச் சேர்ந்த சையது ரஹீப் குர்ஷித் என்பவரிடம் இருந்து பெறப்படும் லிங்கை, 5 பெண்களை வேலைக்கு அமர்த்தி அவர்கள் மூலமாக, போலி சிம் கார்டுகளை வைத்து, ஒரு நாளைக்கு ஒரு பெண் சராசரி 40,000 முதல் 50,000 வரை SMS அனுப்புவதின் மூலமாக சுமார் 3,00,000 SMS அனுப்பி அதற்காக அதிக அளவிலான பணத்தை சையது ரஹீப் குர்ஷித் என்பவரிடமிருந்து, சரவணன் பெற்றுக்கொண்டு, பொதுமக்களிடம் நூதனத் திருட்டில் இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது விசாரணையில் தெரியவருகிறது.

காரைக்குடி உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையிலான தனிப்படையினர் புதுடெல்லியைச் சேர்ந்த சையது ரஹீப் குர்ஷித் (வயது 23) என்பவரை கைது செய்தது. சிவகங்கை உட்கோட்ட காவல் துணைக்கண்காணிப்பாளர் சிபி சாய் சௌந்தர்யன் தலைமையிலான தனிப்படையினர், சரவணனுக்கு போலி சிம்கார்டுகளை கொடுத்த ராம் குமார் மற்றும் வினோத் குமார் ஆகியோரை கைது செய்தது.

மேற்படி மோசடியில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து இத்தொழிலுக்கு பயன்படுத்திய லேப்டாப்கள், Desk Top Computer 19, Phone 292, JIO Sim Card - 22735, Airtel Sim Modem Box 24, ATM Card 8, Bajaj finance EMI Card - 1 Table - 20. Cheque Book - 09, Chair - 05 ஆகியவைகள் கைப்பற்றப்பட்டு கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான போலி சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்படுவது இந்திய அளவில் இதுவே முதல் முறையாகும். இந்த மோசடி கும்பலை கூண்டோடு கைது செய்ததின் மூலம் இந்தியா முழுவதும் இத்தகைய மோசடி நடைபெறுவது பெரிய அளவில் தடுக்கப்பட்டுள்ளது.

சிறப்பாக செயல்பட்டு இந்த மோசடி கும்பலை கூண்டோடு பிடித்த தனிப்படை போலீசாரை தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு அழைத்து பண வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் வேகமாக பரவும் கரோனா… மத்திய அரசு எச்சரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.