இறால் பண்ணை, வேளாண் பண்ணைகளுக்கு உரமாகும் மீன்கழிவுகள்

author img

By

Published : Oct 13, 2021, 2:18 PM IST

v

மீன் கழிவுகளை நன்கு அரைத்து அதனை உரமாக மாற்றி இறால் வளர்ப்போருக்கும், வேளாண்மை செய்வோருக்கும், மாடித்தோட்டம் வைத்திருப்போருக்கும் தருவதாக அகில இந்திய மீனவர் சங்க தேசிய செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் வீணாகும் மீன் கழிவுகளை அரைத்து இறால் பண்ணைகளில் இறால் வளர்க்கப் பயன்படும் பாசி உற்பத்தி செய்யும் உரமாகவும், வேளாண் பண்ணைகளில் செடிகளுக்கு பூச்சி மருந்தாகப் பயன்படும் உரமாகவும் தயாரிக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

மத்திய உப்புநீர் மீன் வளர்ப்பு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டு நம்பிக்கை மீனவர்கள் குழு என்ற பெயரில் முதலில் சுய உதவி குழுக்கள் மூலமாகத் தொடங்கப்பட்ட இந்த தொழில் தற்போது நிறுவனமாக உருவெடுத்துள்ளது. அந்நிறுவனத்தின் தொடக்க விழா நிகழ்ச்சி காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்றது.

v
உரமாகும் மீன்கழிவுகள்

அகில இந்திய மீனவர் சங்க தேசிய செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் ரவி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உப்புநீர் மீன் வளர்ப்பு நிறுவன இயக்குநர் ஜித்தேந்திரன், ஆராய்ச்சியாளர் டாக்டர் முத்துலட்சுமி, சந்தீப், சாய்ராம், காசிமேடு பகுதியைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மத்திய உப்புநீர் மீன் வளர்ப்பு நிறுவன மூத்த ஆராய்ச்சியாளர் மகாலட்சுமி கூறியதாவது, "கழிவிலிருந்து செல்வம் என்ற திட்டத்தின்படி மீன் கழிவுகளிலிருந்து இந்தப் பொருள்கள் தயார்செய்யப்பட்டு-வருகின்றன. இந்தத் திட்டம் 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தேசிய தூய்மைத் திட்டத்தினைத் தொடர்ந்து பல இடங்களில் செயல்படுத்தப்பட்டுவருகிறது.

இங்கு மீன் கழிவுகளிலிருந்து பிளாங்டான் பிளஸ், ஹார்டி பிளஸ் ஆகிய இரண்டு உர பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. இது சுமார் ரூ.80 முதல் ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இவை தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, குஜராத், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்பட்டுவருகின்றன.

உரமாகும் மீன்கழிவுகள்

இதுவரை சுமார் 25 டன் மீன் கழிவுகள் அரைக்கப்பட்டு உரமாக மாற்றப்பட்டுள்ளன. இந்த உரத் தயாரிப்பில் பொருள்கள் வீணாவது பூஜ்ய அளவிலேயே உள்ளது. இதனால் அனைத்துக் கழிவுகளும் செல்வமாக மாறும் நிலையே உள்ளது" என அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து நாஞ்சில் ரவி கூறியதாவது, "காசிமேடு மீன் சந்தை உள்பட சென்னை முழுவதும் உள்ள 40-க்கும் மேற்பட்ட இடங்களிலிருந்து மீன் கழிவுகளைக் கொண்டு காசிமேடு பகுதியில் விற்பனை செய்கின்றனர்.

அதனை நாங்கள் பணம் கொடுத்து வாங்கி மத்திய உப்புநீர் மீன் வளர்ப்பு நிறுவனத்தின் திட்டமுறையைப் பயன்படுத்தி கழிவுகளை நன்கு அரைத்து அதனை இறால் வளர்ப்போருக்கும், வேளாண், மாடித்தோட்டம் வைப்போருக்கும் உரமாகத் தருகிறோம்.

மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டம் மிகவும் சிறப்பானதாகும். இதன்மூலம் இறால் வளர்ப்போர் மிகுந்த பயன்பெறலாம். நாங்கள் இந்தத் தயாரிப்புகளை இங்குத் தயாரித்து இந்தியா முழுவதும் விற்பனை செய்துவருகிறோம்" என்றார்.

இதையும் படிங்க: காசிமேட்டில் மீன் விலை குறைவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.