'எல்லோர்க்கும் எல்லாம்' என்ற சமூக நீதித்தத்துவம் தான் திராவிட மாடல் - முதலமைச்சர் ஸ்டாலின்

author img

By

Published : Sep 20, 2022, 9:41 PM IST

’’எல்லோர்க்கும் எல்லாம்' என்ற சமூகநீதித் தத்துவம் தான் திராவிட மாடல்..!’ - முதலமைச்சர் ஸ்டாலின்

'எல்லோர்க்கும் எல்லாம்' என்ற சமூக நீதித்தத்துவத்தை உள்ளடக்கிய திராவிட மாடல் அரசை நடத்தி வருகிறோம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக வெள்ளி விழாவில் முதன்மை விருந்தினராக முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், "1997ஆம் ஆண்டு அன்றைக்கு முதலமைச்சராக இருந்த மறைந்த முதலமைச்சர் கருணாநிதியால், சட்டக்கல்விக்காக தெற்காசியாவிலேயே முதன்முதலாக ஒரு சட்டப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.

இந்தப் பல்கலைக்கழகத்தினுடைய வெள்ளிவிழாவில் கலந்துகொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன், பெருமைப்படுகிறேன். 1997ஆம் ஆண்டு சென்னையில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் உருவாக்கியவரும் கருணாநிதிதான்.

அத்தகைய பல்கலைக்கழகத்திற்குத்தான், இன்றைக்கு நாம் வெள்ளிவிழாவை எழுச்சியோடு, ஏற்றத்தோடு கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம். இந்தப் பல்கலைக்கழகம் அரசினுடைய சமூக நீதிக் கொள்கையின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கையினை மேற்கொள்வது உள்ளபடியே நமக்கெல்லாம் மகிழ்ச்சி அளிக்கிறது.

அரசு சட்டக்கல்லூரிகளின் மூலமாக இந்தியாவிலேயே மிகச்சீரிய முறையில் சட்டக்கல்வியைக் கிராமப்புற மாணவர்களுக்கும் எளிதில் சென்றடைந்திடும் வகையில் சுமார் இருபதாயிரம் மாணவர்களுக்கு பயிற்றுவித்து வருகிறது.

அனைத்து மாணவர்களையும் தகுதிப்படுத்தக்கூடிய வகையிலேதான் ‘நான் முதல்வன்’ திட்டத்தை தொடங்கி இருக்கிறோம். மகளிருக்கு வழங்கப்பட்டுள்ள இலவசப்பேருந்து சலுகை மாணவியருக்கு பெருமளவு உதவிகரமாக அமைந்துள்ளது.

அரசுப்பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் கல்வி உதவித்தொகையாக மாதந்தோறும் 1000 ரூபாயை நமது அரசு இந்தக் கல்வியாண்டு முதல் சட்டம் பயிலும் மாணவர்களுக்கும் வழங்கி வருகிறது.

அரசுப்பள்ளியில் பயின்ற கிராமப்புற மாணவர்களுக்குக் கல்வியில் உள்ஒதுக்கீடாக 7.5 விழுக்காடு அளித்து, கல்வி மற்றும் உறைவிடக் கட்டணத்தை சட்டம் பயிலும் மாணவர்களுக்கு அமல்படுத்தி அரசே முழுவதுமாக ஏற்கும் ஆணையை நமது அரசு வெளியிட்டுள்ளது.

உங்களது சட்ட அறிவை, வாதத்திறனை, ஏழை எளிய - ஒடுக்கப்பட்ட மக்களின் நீதிக்காக பயன்படுத்த வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன். “சட்டம் ஒரு இருட்டறை; அதில் வக்கீலின் வாதமே விளக்கு. அந்த விளக்கை ஏழைகளால் பெற முடியவில்லை” என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் வருந்தினார்கள்.

அப்படி அமைந்துவிடக்கூடாது. இந்திய அரசியலமைப்புச்சட்டம் உருவாக்கிக்கொடுத்துள்ள அடிப்படை உரிமைகளைக்காக்க உங்களது கல்வியை நீங்கள் பயன்படுத்த வேண்டும். சமத்துவ உரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை, எண்ணங்களை வெளியிடும் உரிமை, ஒன்று கூடும் உரிமை, பணிகள் செய்யும் உரிமை, மத சுதந்திரம், கல்வி உரிமை, சொத்துரிமை, பாதிக்கப்பட்டால் அதற்குத்தீர்வு காணக்கூடிய உரிமை ஆகிய பல்வேறு உரிமைகளை அரசியலமைப்புச்சட்டம் சொல்கிறது.

அதனைக்காக்கும் வழக்கறிஞர்களாக நீங்கள் திகழ வேண்டும். சட்டநீதியை மட்டுமல்ல, சமூக நீதியையும் நிலைநாட்டக்கூடியவர்களாக நீங்கள் விளங்க வேண்டும். சட்டத்தின் அரசாக, நீதியின் அரசாக அதுவும் சமூக நீதியின் அரசாக 'எல்லோர்க்கும் எல்லாம்' என்ற சமூகநீதித் தத்துவத்தை உள்ளடக்கிய திராவிட மாடல் அரசை நாம் நடத்தி வருகிறோம்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: பள்ளிக்கூடங்களில் சாதிப் பாகுபாடு காட்டப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்...அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.