ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக விருப்பமனு அளிக்கலாம் - ஈபிஎஸ்

author img

By

Published : Jan 23, 2023, 11:01 AM IST

ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக விருப்பமனு அளிக்கலாம் - ஈபிஎஸ்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் விருப்ப மனு அளிக்கலாம் என்று அக்கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினர் திருமகன் ஈவெரா உடல் நலக்குறைவால் கடந்த 4ஆம் தேதி உயிரிழந்தார். அதனடிப்படையில் அத்தொகுதிக்குப் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால், தொகுதியைத் தக்க வைக்க திமுக - காங்கிரஸ் கூட்டணியும், தொகுதியைக் கைப்பற்றப் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் வியூகம் வகுத்து வருகின்றன.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணிக் கட்சியான காங்கிரஸே மீண்டும் போட்டியிடும் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது. அதோடு, வேட்பாளர் அறிவிப்புக்கு முன்னரே அமைச்சர்கள் முத்துசாமி, கே.என். நேரு இருவரும் தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட தொடங்கிவிட்டார்.

மறுபுறம் அதிமுக இடைத்தேர்தல் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதி முன்னதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் அதிமுக களமிறங்கியுள்ளது. இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் விருப்ப மனு பெறுதல் தொடர்பாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் வருகிற 27ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு அதிமுக சார்பில் போட்டியிட விருப்புகின்ற கழக உறுப்பினர்கள் அதிமுக தலைமைக் கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் ஜன.23 முதல் 26 ஆம் தேதி வரை நாள்தோறும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, விண்ணப்பக் கட்டணத் தொகையாக ரூ.15,000 செலுத்தி, விருப்ப மனு விண்ணப்பப் படிவங்களை பெற்று, கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து உடனடியாக வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காலில் விழாமல் ஓட்டு எப்படி கிடைக்கும்.? - முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.