செஞ்சிலுவைச் சங்க நிர்வாகிகளின் ரூ.3.37 கோடி சொத்துகள் முடக்கம்!

author img

By

Published : Nov 21, 2022, 10:40 PM IST

Etv Bharat

இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் நிதி முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பாக அதன் நிர்வாகிகள் மூன்று பேரின் ரூ.3.37 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

சென்னை: முதலாவது உலகப்போரின்போது இந்தியாவில் பிரத்யேக முதலுதவி மற்றும் மீட்பு அமைப்பு எதுவும் கிடையாது. இதனால், செஞ்சிலுவைச் சங்கத்தின் ஒரு அங்கமான செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் முதலுதவி சேவை அமைப்பின் வாயிலாகவே ராணுவ வீரா்களை மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதன் பின்னா், 1920ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் தனியாக 'செஞ்சிலுவைச் சங்கம்' தோற்றுவிக்கப்பட்டது. இதன் தமிழ்நாடு பிரிவு அதே ஆண்டு நவம்பா் மாதம் முதல் செயல்படத் தொடங்கியது. குடியரசு தலைவரின் கீழ் செயல்படும் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் மாநில ஆளுநர்தான், அதன் மாநில தலைவர்.

இந்த நிலையில், செஞ்சிலுவைச் சங்கத்தின் மாநில தலைவராகவும், அப்போதைய தமிழ்நாடு ஆளுநராகவும் இருந்த பன்வாரிலால் சார்பில், ஆளுநர் மாளிகையின் துணைச் செயலாளர் செங்கோட்டையன் சிபிஐ லஞ்ச ஒழிப்புப் பிரிவில் கடந்த 2020ஆம் ஆண்டு புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், 2011-லிருந்து இச்சங்கத்தில் நடந்த பல்வேறு முறைகேடுகள் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் சங்கத்தின் பணம் மோசடி செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

செஞ்சிலுவை சங்கத்தின் தமிழ்நாடு கிளை, பல கோடி ரூபாய் பணத்தை கையாளுவதாகவும், அதன் நிர்வாகி ஒருவர், சங்க நிதியை தனது வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளதாகவும் அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சங்க நிர்வாகத்துக்கும், விளம்பரத்துக்கும், பிரசாரத்துக்கும் என 70% நிதியைப் பயன்படுத்திவிட்டு, வெறும் 30% நிதி மட்டும் சமூகப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஹரிஷ் எல்.மேத்தா
ஹரிஷ் எல்.மேத்தா

ரத்த தான முகாம் மூலம் பெறப்படும் ரத்தத்தை அரசு மருத்துவமனைகளுக்கு இலவசமாக வழங்குவதற்குப் பதில், தனியார் மருத்துவமனைகளுக்கு விற்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டது. மேலும், கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2019 வரையிலான ஆண்டுகளில் நடந்த வரவு, செலவு கணக்குகளை தணிக்கை செய்தபோது, பல முறைகேடுகள் நடந்தது தெரியவந்துள்ளதாக கூறப்பட்டது.

மேலும் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், கடந்த டிசம்பர் 2020ஆம் ஆண்டு இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தமிழ்நாடு சேர்மன் ஹரிஷ் மேத்தா, சங்கத்தின் பொதுச் செயலாளர் நஷ்ருதீன், பொருளாளர் இந்திரநாத், முன்னாள் பொருளாளர் செந்தில்நாதன் மற்றும் மணிஷ் சவுத்ரி, வடிவேல் முகுந்தன் என 6 பேர் மீதும் மோசடி, கூட்டுச் சதி உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்று இருப்பதாக தெரியவந்தது. இதன் அடிப்படையில் வழக்குப்பதிந்த அமலாக்கத்துறையினரின், விசாரணையில் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தமிழ்நாடு கிளையின் நிதியை தவறாக பயன்படுத்தியது உறுதியானது.

முறைகேட்டில் ஈடுபட்ட நிர்வாகிகள் ஹரிஷ் எல்.மேத்தா, செந்தில்நாதன், நஸ்ருதீன் ஆகியோர் அசையும் மற்றும் அசையா சொத்துகளை இதன் மூலம் சேர்த்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சட்டவிரோத பணப்பரிமாற்றத்தின் மூலம் சேர்க்கப்பட்ட இந்த மூவரின் ரூ.3.37 கோடி அசை மற்றும் அசையா சொத்துகளை இன்று (நவ.21) அமலாக்கத் துறையினர் முடக்கியுள்ளனர்.

இதையும் படிங்க: நடைப்பயணம் செய்வோருக்கு நிலக்கடலைக்கும் பருத்தி விதைக்கும் வித்தியாசம் தெரியாது - பிரதமர் மோடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.