ஆருத்ரா, ஹிஜாவு நிதி மோசடி: 'குற்றவாளிகளை நெருங்குவதில் சில சிரமம் உள்ளது' - ஐஜி கூறிய காரணம் என்ன?

author img

By

Published : May 27, 2023, 7:48 AM IST

Updated : May 27, 2023, 4:06 PM IST

crime

ஆருத்ரா, ஹிஜாவு போன்ற முக்கிய வழக்கு குற்றவாளிகள் வெளிநாட்டில் பதுங்கி இருப்பதாலும், விபிஎன் போன்ற செயலிகளை உபயோகிப்பதாலும் அவர்களை நெருங்குவது சவாலாக இருக்கிறது என பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசியம்மாள் தெரிவித்துள்ளார்.

Press Meet...ஆருத்ரா, ஹிஜாவு நிதி மோசடி வழக்கு

சென்னை: தமிழ்நாட்டில் பொருளாதார குற்றப்பிரிவு வழக்குகள் தொடர்பாக விசாரணையின் நகர்வுகள் குறித்து ஐஜி ஆசியம்மாள் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்த ஆண்டு ஜனவரி முதல் மே 15ஆம் தேதி வரை 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் மோசடி செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு 350 கோடி ரூபாய் ஆகும். கடந்த 2 நாட்களில் ஆருத்ரா, ஹிஜாவு மற்றும் எல்பின் ஆகிய வழக்குகளில் சுமார் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐஎஃப்எஸ் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சகோதரர்களான வெங்கடேஷ் மற்றும் பிரபு ஆகியோரை காவலில் எடுத்து விசாரணை செய்ததில், 25 அசையா சொத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளது. அதில் வெங்கடேசன் என்பவர் 826 முதலீட்டாளர்கள் மூலமாக 171 கோடி ரூபாய் வசூல் செய்து மோசடி செய்துள்ளதாகவும், பிரபு 1,397 முதலீட்டாளர்களிடமிருந்து 129 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் ஐஎஃப்எஸ் வழக்கில் ஜானகிராமன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் 7,000 முதலீட்டாளர்களிடம் இருந்து சுமார் 240 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆருத்ரா கோல்ட் டிரேடிங் விவகாரம் தொடர்பாக மேலும் 3 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதுவரை மொத்தம் 61 இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதில் ராஜசேகர் மற்றும் உஷா போன்ற முக்கிய குற்றவாளிகளுக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு விட்டது. நேற்றைய முன்தினம் மட்டும் 8 பேர் கிளை பொறுப்பாளர்கள் ஆருத்ரா கோல்ட் டிரேடிங் வழக்கில் திருவள்ளுூரைச் சேர்ந்த சசிகுமார், ராணிப்பேட்டையைச் சேர்ந்த உதயகுமார், சதீஷ் நெமிலி, அசோக் குமார், செல்வராஜ், நவீன், முனுசாமி, மாலதி ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹிஜாவு வழக்கில், முரளிதரன் மற்றும் ஜெயக்குமார் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே 54 சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மேலும் 6 சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் மே 17ஆம் தேதி முதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட கோயம்புத்தூரில் யூனிவர்சல் டிரேடிங் சொல்யூஷன் என்ற வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவுப்படி, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டிருந்தது. அதே நீதிமன்ற உத்தரவுப்படி காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் வளாகத்தில் அலுவலகம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் அங்கு சென்று புகார் அளிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். தற்போது வரை 3 கார்கள், 6 கம்ப்யூட்டர்கள் மற்றும் 9.82 கோடி ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 27 வங்கிக் கணக்கில் முடக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எல்பின் நிறுவன மோசடி விவகாரத்தில் 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 41 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. திருச்சி 17வது வார்டு கவுன்சிலர் பிரபாகர், இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹிஜாவு மற்றும் ஐஎஃப்எஸ் என்ற இந்த இரு வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்னும் 2 வாரங்களுக்குள் ஆருத்ரா வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும். அதேபோல், ஏ.ஆர்.டி கோல்டு நிறுவன மோசடி வழக்கில் குற்றவாளிகள் வெளிநாட்டிற்கு தப்பி சென்று விட்டனர்.

மேலும் பொருளாதார குற்றப்பிரிவின் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் முக்கிய குற்றவாளிகள் வாட்ஸ் அப் மற்றும் வி.பி.என் செயலி (vpn) மூலமாக தொடர்பு கொண்டு தங்கள் உறவினர்கள், நண்பர்களிடம் பேசுவதால் அவர்களை பிடிப்பது சிறிது சவாலாக இருக்கிறது” என கூறினார்.

இதையும் படிங்க: 5 ஆயிரம் கோடியே இடியுது.. 14 கோடி இடியாதா? .. அமைச்சரின் பேச்சால் சர்ச்சை..

Last Updated :May 27, 2023, 4:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.