'திமுக, பாஜக கூட்டணி ஒருபோதும் அமையாது' - அண்ணாமலை

author img

By

Published : Aug 2, 2022, 8:38 PM IST

திமுக, பாஜக கூட்டணி ஒருபோதும் அமையாது - அண்ணாமலை

'பாஜகவிற்கு நேர் எதிரான டிஎன்ஏ கொண்ட திமுகவுடன் ஒருபோதும் கூட்டணி அமையாது' என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை கமலாலயத்தில் உள்ள பாஜக அலுவலகத்தில் நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை விமரிசையாக கொண்டாடும் வகையில் நிர்வாகிகள் மூலம் பொதுமக்களுக்கு தேசியக்கொடியை வழங்க மாநிலத்தலைவர் அண்ணாமலை நிர்வாகிகளுக்கு வலியுறுத்தினார். பின் அவர்களிடம் தேசியக்கொடிகளை வழங்கினார்.

நிகழ்சிக்குப்பின் செய்தியாளர்களைச்சந்தித்த பாஜகவின் மாநிலத்தலைவர் அண்ணாமலை, "தமிழ்நாட்டில் பாஜக சார்பில் 53 லட்சம் வீடுகளில் தேசியக்கொடியை பறக்க விடத் திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆவின் பால் பாக்கெட்டுகளில் அளவு குறைந்தது தொடர்பாக தமிழ்நாடு அரசின் சார்பிலோ, துறை அமைச்சர் சார்பிலோ இதுவரை எவ்வித விளக்கமும் கொடுக்காதது தமிழ்நாடு அரசின் மீது ஓர் நம்பிக்கையின்மை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. இந்த பால் எடை குறைப்பு தொடர்பாக பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று இருக்கிறது.

'திமுக எம்.பிக்கள் மக்களிடம் மன்னிப்புக்கேட்கவேண்டும்': செந்தில் பாலாஜி மீதான விசாரணையில் அமலாக்கதுறையினர் தற்போது பிஸியாக இருக்கிறார்கள். காத்திருங்கள் மீண்டும் அவரிடம் விசாரணை நடக்கும். நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் விலைவாசி உயர்வு தொடர்பாக தமிழ்நாடு எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விக்குப்பதில் அளித்துக்கொண்டிருக்கும்போது திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தது மூலம் தமிழ்நாட்டிற்கும் ஜனநாயக அவமரியாதை செய்து விட்டனர். எனவே, திமுக எம்.பி.க்கள் தமிழ்நாடு மக்களிடம் மன்னிப்புக்கேட்க வேண்டும்.

பாஜகவைப் பொறுத்தவரை அனைவரும் சமம். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறையினர் ஒப்புதல் பெற்று அவர் விசாரணைக்கு வரக்கூடிய நேரத்தை அவரது விருப்பத்தின் பேரில் அழைத்த நிலையில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது கண்டனத்திற்குரியது. கடந்த காலங்களில் பாஜக தலைவர்கள் கூட அமலாக்கத்துறை விசாரணையின்போது எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்திருக்கின்றனர்.

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக பாஜக தலைமையிலான குழு முதல் கட்ட விசாரணையை முடித்திருக்கிறது. தற்போது மாணவியின் இரண்டாவது உடல்கூராய்வு அறிக்கைக்காக காத்திருக்கின்றனர். அந்த அறிக்கை விரைவில் கிடைத்த பின் அடுத்த கட்ட நடவடிக்கை அந்த விசாரணையில் நடைபெறும். கட்சி கொள்கையைப் பொறுத்தவரை திமுக, பாஜக ஆகிய இரண்டும் எதிரெதிரான கொள்கைகளை உடையது.

திமுகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை: திமுக சுயாட்சி பிரிவினை வாதத்தை தூண்டக்கூடிய வகையில் அந்த கட்சியின் கொள்கைகள் இருக்கின்றன. எனவே பாஜக, திமுக கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை. தமிழ்நாட்டில் யாரோடேனும் கூட்டணி வைத்துதான் கட்சியை வளர்க்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை.

தமிழ்நாடு நாள் ஜூலை 18 மற்றும் நவம்பர் ஒன்றாம் தேதி என இரண்டு நாட்களாக உள்ளதற்கு, திமுக தான் காரணம். பெரும்பாலானோர் நவம்பர் ஒன்றாம் தேதி தான் தமிழ்நாடு நாளாக கருதுகின்றனர். எனவே, இதனை வரும் காலங்களில் திமுக அரசு சரி செய்ய வேண்டும்.

மின்சாரத்துறையில் ஊழல் புகார் தொடர்பாக தான் தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் நீதிமன்றத்தில் சென்று தீர்வு காணலாம் எனக்கூறி இருப்பதன் மூலம் அந்தத்துறையில் ஊழல் நடைபெற்றுள்ளது என்பதை அந்த துறை அமைச்சரே ஒப்புக்கொண்டுள்ளார். தனது துறையில் ஊழல் நடந்துள்ளது, அதே நேரத்தில் அதற்கு எவ்வித விளக்கமும் அளிக்க முடியாது எனவும் இதற்கு லஞ்ச ஒழிப்புத்துறையிடமும் எந்தவித விளக்கமும் பெற முடியாது என்பதை எடுத்துக்காட்டும் விதமாகவே அமைச்சர் நீதிமன்றத்தை நாடுங்கள் என்று கூறி இருப்பதாகவே தான் கருதுகிறேன்.

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் நடைபெற்று வரும் ஊழல் புகார்கள் குறித்து தமிழ்நாடு ஆளுநர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் தமிழ்நாடு பாஜக சார்பில் அளிக்கப்பட்டுள்ள புகார்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து அதனைக் கண்காணித்து வருகிறோம். அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி புதிய கல்விக்கொள்கை குறித்த பேச உரிமை உள்ளது.

திமுக, பாஜக கூட்டணி ஒருபோதும் அமையாது - அண்ணாமலை

இந்திய அரசியலமைப்புச்சட்டப்படி கல்வி மத்திய, மாநில அரசுகள் பொதுப்பட்டியலில் இருக்கிறது. இதுகுறித்து மத்திய அரசுக்கு பேச உரிமை உள்ளது. இதனை பொதுபட்டியில் கொண்டு வந்ததே கடந்த காங்கிரஸ் ஆட்சியில் தான். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவரான கே.எஸ்.அழகிரி திமுகவிற்கு ஒரு ராஜ்யசபா எம்.பி. சீட்டுக்காக பல்வேறு தியாகங்களை செய்த காங்கிரஸ் கட்சியை அறிவாலயத்தின் வாசலில் அடகு வைக்கக்கூடிய செயல் மிகவும் கேவலமானது.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித்தலைவரான கே.எஸ்.அழகிரி மனதளவிலும், மூளை அளவிலும் அரசியலுக்கு தகுதியானவராக உள்ளாரா என்பது குறித்து அவர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்" என கடுமையாக சாடினார்.

இதையும் படிங்க: கார் நிறைய கட்டுக்கட்டாக பணம் - காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.