ETV Bharat / state

கனமழை எச்சரிக்கை: 'பேரிடர் மீட்புப் படை குழுக்கள் தயார்'

author img

By

Published : Dec 6, 2022, 2:01 PM IST

மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், பேரிடர் மீட்புப் படை குழுக்கள் தயார் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன்
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன்

சென்னை: டிசம்பர் 7, 8, 9 ஆகிய தேதிகளில் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 10 குழுக்கள் இம்மாவட்டங்களுக்கு விரைந்துள்ளன என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதன் அருகில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 06-12-2022 அன்று மாலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும்.

பிறகு இது வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவடைந்து 08-12-2022 அன்று காலை வடதமிழக கடலோரப் பகுதியின் அருகில் வந்தடையக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று (டிச.5) எச்சரிக்கை விடுத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதி மற்றும் மாவட்டங்களுக்கென நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் தொடர்புடைய பகுதிகளில் முகாமிட்டு முன்னெச்சரிக்கை, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

சென்னையில் 169 நிவாரண மையங்களும், தாழ்வானப் பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற 805 நீர் இறைப்பான்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என கூறியுள்ளார்.

மேலும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை முன்கூட்டியே மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தென்காசிக்கு ரயில் பயணம் மேற்கொள்கிறார் முதலமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.