சென்னை : கடந்த இரண்டு மாதங்களில் சைபர் குற்ற வழக்குகளை சிறப்பாக புலனாய்வு செய்து குற்றவாளிகளை கைது செய்த 27 காவலர்களுக்கு வெகுமதி வழங்கி காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பாராட்டு தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “கடந்த 2 மாதங்களில் ஓடிபி மோசடி, மேட்ரிமோனி மோசடி, நடிகர் ஆர்யா மோசடி வழக்கு உள்ளிட்ட பல சைபர் குற்ற வழக்குகளை சிறப்பாக புலனாய்வு செய்து குற்றவாளிகளை கைது செய்த 27 காவலர்களை பாராட்டும் விதமாக வெகுமதி வழங்கப்பட்டது.
ஜெர்மனி பெண் அளித்த புகாரின் அடிப்படையில் நடிகர் ஆர்யா, அவரது தாயார் மீது வழக்குப்பதிவு செய்ப்பட்டது. அதன் பின்னர் செல்போன் எண் டவரை வைத்து விசாரணை நடத்திய போது நடிகர் ஆர்யாவிற்கும் இந்த மோசடி வழக்கிற்கும் தொடர்பில்லை எனத் தெரியவந்தது.
காவல்துறைக்கு நன்றி செலுத்திய ஆர்யா
நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் போது ஆர்யாவின் பெயர் நீக்கப்படும். 10 நாள்களில் உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்த சென்னை காவல்துறைக்கு நன்றி செலுத்துவதற்காக நடிகர் ஆர்யா தன்னை சந்தித்தார்.
வீடியோ கால் மூலமாக நடிகர் ஆர்யா ஜெர்மனி பெண்ணிடம் பேசியதாகவும் அதற்கான ஆதாரங்கள் இருப்பதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர் கூறியது தொடர்பாக கேள்வி எழுப்பிய போது, அது தொடர்பாக புகாரில் குறிப்பிடவில்லை. வழக்கறிஞரை நேரில் வரவழைத்து ஆதாரங்களை வைத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
விநாயகர் சதுர்த்தியன்று பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படியே சென்னை காவல்துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் அமைக்கவுள்ளன.
அரசு அறிவிப்பை மீறி செயல்படும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கபடும்.
அதி நவீன சைபர் லேப்
சைபர் குற்றங்கள் தொடர்பாக புகார்கள் அதிகளவில் வருவதால் அதனை தடுப்பதற்காக கூடுதலாக நான்கு சைபர் கிரைம் காவல் நிலையங்கள் சென்னையில் அமைக்க உள்ளனர்.
இது மட்டுமின்றி காவல் ஆணையர் அலுவலகத்தில் அதி நவீன சைபர் லேப் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றனர். இன்னும் 15 நாள்களுக்குள் பணியானது நிறைவடையும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க : மதுரை மேம்பால விபத்து - என்ஐடி வல்லுநர் குழு ஆய்வு