ரெப்கோ வங்கி நிர்வாக குழுவிற்கு தேர்தல் நடத்தாத கூட்டுறவுச் சங்கம் - அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்

author img

By

Published : May 13, 2022, 3:27 PM IST

ரெப்கோ வங்கி நிர்வாக குழுவிற்கு தேர்தல் நடத்தாத கூட்டுறவு சங்கம் - அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்

நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்தபடி ரெப்கோ வங்கி நிர்வாக குழுவிற்கு தேர்தல் நடத்தாததால் கூட்டுறவு சங்கங்களின் இணைச்செயலாளர் மற்றும் நிர்வாக இயக்குநர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: ரெப்கோ வங்கியின் நிர்வாக குழுவிற்கு தேர்தல் நடத்த உத்தரவிடக்கோரி தனபால் என்பவர் 2019ஆம் ஆண்டு மனுதாக்கல் செய்திருந்தார். அதில் மத்திய மற்றும் மாநில அரசுகளால் 51 விழுக்காட்டிற்கு மேல் பங்கு மூலதனத்தை வைத்திருக்கும் பட்சத்தில் அந்த நிறுவனத்தின் நிர்வாக குழுவில் முன்மொழியப்பட்ட உறுப்பினர்களாக 3 பேர் மட்டுமே இருக்க வேண்டுமெனவும்,

ஆனால், ரெப்கோ வங்கியில் அலுவலர்களால் முன்மொழியப்பட்ட உறுப்பினர்களே அதிகளவில் உள்ளதாகத் தெரிவித்திருந்தார். எனவே, ரெப்கோ வங்கி நிர்வாக குழுவிற்கு முறைப்படி தேர்தல் நடத்த வேண்டுமென குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசிப்பதற்காக நிர்வாக குழுவை கூட்டுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ரெப்கோ வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து வழக்கு முடித்துவைக்கப்பட்டது. இந்நிலையில், உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தபடி நடவடிக்கை எடுக்கவில்லை எனவும்; 2021ஆம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தார்.

அதற்கு ரெப்கோ வங்கி அளித்த பதிலில், ரெப்கோ வங்கி சட்டத்தில் விதிமுறைகளை திருத்தம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்த நடவடிக்கை 6 முதல் 8 மாதங்களில் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்துவைக்கப்பட்டது.

இந்நிலையில் நீதிமன்றத்தில் உறுதியளித்தபடி தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், முடிக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்கக்கோரி தனபால் மீண்டும் மனுதாக்கல் செய்துள்ளார்.

இதனை விசாரித்த நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன், உயர் நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தை வேண்டுமென்றே அவமதித்தது நிரூபணமாவதாக கூறி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மீண்டும் விசாரணைக்கு ஏற்றுள்ளார்.

அதன்படி கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் விவேக் அகர்வால் மற்றும் ரெப்கோ வங்கி நிர்வாக இயக்குநர் ஆர்.எஸ். இஸபெல்லா ஆகியோர் ஜூன் 17ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஆறு வாரங்களுக்கு கோவில் நிதி பயன்படுத்தப்படமாட்டாது- நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.