கொளத்தூர் தொகுதியில் ரூ.48 கோடியில் நலத்திட்டப் பணிகள்

author img

By

Published : Nov 23, 2022, 4:00 PM IST

Etv Bharat

கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்டப் பகுதியில் ரூ.9.02 கோடி செலவிலான முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, ரூ.38.98 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.23) கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தீட்டி தோட்டம் மற்றும் வீனஸ் நகரில் ரூ.9.02 கோடி செலவில் கட்டப்பட்ட விளையாட்டுத் திடல் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி கட்டடம் ஆகியவற்றைத் திறந்து வைத்து, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் ரூ.38.98 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

புதிய திட்டப் பணிகள்: கொளத்தூர், தீட்டி தோட்டம் முதல் தெருவில் ரூ.1.27 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு, நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இறகுபந்து உள்விளையாட்டு அரங்கத்தை முதலமைச்சர் திறந்து வைத்து, மாணவ, மாணவியர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். மேலும், வீனஸ் நகரில் ரூ.7.75 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதிக் கட்டடத்தையும் திறந்து வைத்தார்.

ரூ.9.02 கோடி செலவிலான உள்விளையாட்டு அரங்கில் குஷியாக விளையாடிய முதலமைச்சர் ஸ்டாலின்
ரூ.9.02 கோடி செலவிலான உள்விளையாட்டு அரங்கில் குஷியாக விளையாடிய முதலமைச்சர் ஸ்டாலின்
  • சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் வீனஸ் நகர், ஜெயந்தி நகர் பகுதிகளில் விடுபட்ட தெருக்களுக்கு ரூ.19.56 கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் அகற்றும் திட்டம் மற்றும் உந்து நிலையம் அமைக்கும் பணி,
  • ஜம்புலிங்கம் பிரதான வீதியில் இருந்து குமாரப்பா சாலை வரை ரூ.37 லட்சம் மதிப்பீட்டில் புதிய குடிநீர் குழாய் மாற்றி அமைக்கும் பணி,
  • ஜி.கே. எம். காலனி 24வது தெருவில் இருந்து பெரியார் நகர் நீரூற்று நிலையம் வரை ரூ.97 லட்சம் மதிப்பீட்டில் புதிய கழிவுநீர் குழாய் அமைக்கும் பணி,
  • ஜகன்நாதன் தெருவில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் கூடுதல் அறைகள் கட்டும் பணி மற்றும் மின்வசதிகள் ஏற்படுத்தும் பணி,
  • கோட்டம் 64, 65-க்கு உட்பட்ட பல்வேறு தெருக்களில் மின்விளக்குகள் அமைக்கும் பணி,
  • கோட்டம் 65, 69-க்கு உட்பட்ட பல்வேறு தெருக்களில் மின்விளக்குகள் அமைக்கும் பணி ஆகிய 37 பணிகள் என மொத்தம் ரூ.38.98 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டினார்.
    பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி கட்டட திறப்பு விழா
    பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி கட்டட திறப்பு விழா

முன்னதாக, பந்தர் கார்டன் மற்றும் பள்ளி சாலை ஆகிய இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் ஆசிரியர்களுக்கு பரிசுப் பொருட்களையும், மாணவ மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்களையும் முதலமைச்சர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி, ஆர். கிரிராஜன், சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, துணை மேயர் மு.மகேஷ் குமார், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: ரேஷன் அட்டைகளுக்கு ரூ.1000 - அரசாணை வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.