அம்பேத்கர், சிவாஜி கணேசன் மணிமண்டபங்களில் முதலமைச்சர் ஆய்வு!

அம்பேத்கர், சிவாஜி கணேசன் மணிமண்டபங்களில் முதலமைச்சர் ஆய்வு!
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபம் மற்றும் அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபம் உள்ளிட்ட இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (14.5.2022) ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபத்திற்கு நேரில் சென்று, பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, நடிகர் சிவாஜி கணேசனுக்கு சென்னை காமராஜர் சாலை மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் 8 அடி உயரமுள்ள முழு உருவச் சிலையை நிறுவி 21.07.2006 அன்று திறந்து வைத்தார்.
வழக்கின் காரணமாக அச்சிலை அகற்றப்பட்டு அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் தற்போது நிறுவப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திருவுருவச் சிலையை, சிவாஜி கணேசன் அவர்களின் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று, மணிமண்டபத்தின் வெளிப்புறத்தில் நிறுவுவதற்கான இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் 14.4.2022 அன்று பாரத ரத்னா, பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 132ஆவது பிறந்த நாளன்று வழங்கப்பட்ட அண்ணல் அம்பேத்கரின் முழு திருவுருவச் சிலையினை மணிமண்டபத்தில் நிறுவுவதற்கான இடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்வின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
