நிதி அமைச்சரின் கருத்து குறித்து முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும் - ஜாக்டோ-ஜியோ

author img

By

Published : May 12, 2022, 7:32 AM IST

நிதி அமைச்சரின் கருத்து குறித்து முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும் - ஜாக்டோ-ஜியோ அமைப்பு

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த முடியாது என்ற நிதி அமைச்சரின் பேச்சு குறித்து தமிழக முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும் என ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சென்னை: ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ தங்களின் கோரிக்கைக்காக தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது. அதிமுக ஆட்சிகாலத்தில் ஜாக்டோ-ஜியோ தொடர் வேலைநிறுத்தப் போராட்டங்களை நடத்தியது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக தலைவர் மு க ஸ்டாலின் போராட்டக் களத்திற்கு வந்து ஆதரவு தெரிவித்ததுடன் அவர்களின் கோரிக்கை ஆட்சி அமைந்தவுடன் நிறைவேற்றப்படும் என அறிவித்து வந்தார். மேலும் திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட ஆசிரியர் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்திருந்தனர்.

திமுக ஆட்சி அமைந்தவுடன் கரோனா தொற்றை சமாளிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானார்கள். இதனால் ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் திமுக ஆட்சியில் தங்களுக்குரிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.

இந்நிலையில் சட்டமன்றத்தில் கடந்த 7ஆம் தேதி நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த முடியாது என விளக்கத்துடன் எடுத்துக் கூறினார். இது ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

நிதி அமைச்சரின் கருத்து குறித்து முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும் - ஜாக்டோ-ஜியோ

இந்நிலையில் மீண்டும் ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு கூட்டம் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதன் ஒருங்கிணைப்பாளர்கள் செல்வம், சேகர், காந்திராஜன்,இரா.தாஸ்,மாயவன், அன்பரசு, தியாகராஜன் உள்ளிட்ட 19 சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதன் ஒருங்கிணைப்பாளர் செல்வம் , “ தமிழ்நாடு அரசு மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. அதனை நாங்கள் வரவேற்கிறோம் ஆனால் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று கூறிவிட்டு தற்போது முடியாது என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசு எங்களை அழைத்து பேச வேண்டும். இம்மாத இறுதிக்குள் அரசு எங்களை அழைத்து பேசினால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை கூறுவதற்கு தயாராக உள்ளோம். முதலமைச்சர் தங்களை அழைத்து பேசவேண்டும் என்ற கடிதத்தை அளிக்க உள்ளோம்.

பழைய ஓய்வூதியத் திட்டம் நிறைவேற்றப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும் கடந்த ஆட்சியில் நாங்கள் போராடிய பொழுது நேரில் வந்து தற்போதைய முதலமைச்சரும் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மு க ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வாய்ப்பில்லை என நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியது குறித்து முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தவில்லை என்றால் தங்களுக்கு போராடுவதை தவிர வேறு வழியில்லை” என தெரிவித்தனர்.

இதையும் படிங்க : அப்போ ஒரு பேச்சு.. இப்போ ஒரு பேச்சா..?- கேள்வி கேட்கும் அரசு ஊழியர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.