தடுப்புச் சுவரில் மோதி காவல் துறையிடம் சிக்கிய செயின் பறிப்பு இளைஞர்கள்

author img

By

Published : Feb 22, 2021, 12:10 PM IST

chain robbery accused caught in police at chennai

சென்னை: விமான நிலையத்தில் சங்கிலி பறித்துவிட்டு தப்பிச் செல்ல வழி தெரியாமல் தடுப்புச் சுவரின் மீது மோதி விழுந்த இளைஞர்களைக் காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஆண்ட்ரூஸ் (29). பாரிமுனையில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்துவரும் இவர், தாம்பரத்தில் உள்ள தனது நண்பரைப் பார்த்துவிட்டு நள்ளிரவு, சைக்கிளில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது அவரைப் பின்தொடர்ந்து வந்த மூன்று இளைஞர்கள் திடீரென ஆண்ட்ரூசின் அருகில் வேகமாக வரத் தொடங்கினர்.

இதனால் அச்சமடைந்த ஆண்ட்ரூஸ், ஜி.எஸ்.டி. சாலையில் இருந்து விமான நிலையத்தில் உள்ள சர்வீஸ் சாலைக்கு வேகமாக வந்தார். திடீரென அந்த இளைஞர்கள் ஆண்ட்ரூஸின் கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க சங்கிலியைப் பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ஆண்ட்ரூஸ் திருடன், திருடன் எனக் கத்தியதை அறிந்த விமான நிலைய காவலர்கள், போக்குவரத்து காவலர்கள் இளைஞர்களை விரட்டிச் சென்றனர்.

காவலர்கள் விரட்டிவருவதைக் கண்டதும் விமான நிலைய ஆணையக கட்டடங்கள் இருக்கும் பகுதிக்குச் சென்ற இளைஞர்கள் தப்பிச் செல்ல வழி தெரியாமல் தடுப்புச் சுவரில் மோதி மழைநீர் கால்வாயில் விழுந்தனர்.

செயின் பறிப்பில் சிக்கிய இளைஞர்கள்

பின்னர் அவர்களை மீட்டு விசாரணை நடத்தியதில், அவர்கள் அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (29), தேவன் (25), இம்ரான் (28) என்பது தெரியவந்தது. தொடர்ந்து இவர்களைக் கைதுசெய்து வழக்குப்பதிவு செய்த விமான நிலைய காவல் துறையினர் நீதிபதி முன் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.