விநாயகர் சதுர்த்திக்காக பூப்பறிக்கச் சென்ற சிறுவன் சேற்றில் சிக்கி உயிரிழப்பு!

விநாயகர் சதுர்த்திக்காக பூப்பறிக்கச் சென்ற சிறுவன் சேற்றில் சிக்கி உயிரிழப்பு!
Boy stuck in mud and dies: தாம்பரம் அருகே விநாயகர் சதுர்த்திக்காக எருக்கம் பூ பறிக்கச் சென்ற சிறுவன், மழைநீர் தேங்கி நின்ற பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: தாம்பரம் அடுத்த சானடோரியம் சத்யா தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மகன் விஷ்வா (11). இவர், ராமகிருஷ்ணபுரம் அரசுப் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று சனிக்கிழமை விடுமுறை என்பதால் மாலை வேளையில் சானடோரியம் மேம்பாலம் அருகே, தனியார் பள்ளிக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள ரயில்வே இடத்தில் விஷ்வா நண்பர்களுடன் விநாயகர் சதூர்த்தியை கொண்டாடுவதற்கு எருக்கம் பூ பறிக்கச் சென்றுள்ளார்.
அப்போது அங்கு மழை நீர் தேங்கி நின்ற பள்ளத்தில் மீன்கள் இருக்கிறதா என்று எட்டி பார்த்தபோது சிறுவன் தவறி விழுந்துள்ளார். நீரில் விழுந்த அவர் சேற்றில் சிக்கியதால், அதிர்ச்சியடைந்த சக நண்பர்கள் கூச்சலிட்டபடி அப்பகுதியில் இருந்தவர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சிடலப்பாக்கம் காவல் நிலையத்தில் தகவல் அளிக்கபட்டதை அடுத்து, தீயணைப்புத் துறையினருடன் வந்த போலீசார், ஒரு மணி நேரம் போராட்டத்திற்குப் பின்னர், சேற்றில் சிக்கிய விஷ்வாவை இறந்த நிலையில் மீட்டனர். இதனைத் தொடர்ந்து சிறுவனது உடல், உடற்கூறு ஆய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு பூப்பறிக்கச் சென்ற சிறுவன் சேற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: சென்னை மாநகர குற்றங்கள்: வடபழனி கோயில் உண்டியலில் நூதன திருட்டு!
