ETV Bharat / state

விலக்கு கேட்பதை விட்டு நீட் தேர்வு நடத்த அரசு ஒத்துழைக்க வேண்டும் - அண்ணாமலை

author img

By

Published : Sep 4, 2021, 7:45 AM IST

நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்பதை விட்டுவிட்டு, தமிழ்நாடு அரசு மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு, தேர்வு நடத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை
அண்ணாமலை

சென்னை: விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், "தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திட டெல்லி சென்றுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடக்காது எனத் தெரிவித்துவந்தார்.

கடந்த ஆண்டு (2020) நீட் தேர்வினைப் பார்க்கும்போது, தமிழ்நாட்டைச் சேர்ந்த பல மாணவர்கள் தேர்ச்சிப் பெற்று அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்திருக்கிறார்கள். 57 விழுக்காடு மாணவர்கள் அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்திருக்கிறார்கள். முதல் நூறு இடங்களுக்குள் தமிழ்நாட்டு மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த அடிப்படையில் நீட் தேர்வு என்பது ஏழை, எளிய மாணவர்களுக்கு எதிரானது கிடையாது.

அதேபோல அவர்கள் அமைத்திருக்கும் நீதியரசர் கமிட்டிகூட, 2016 லிருந்து எடுத்திருக்கும் புள்ளிவிவரங்கள், 2016, 2017ஆம் ஆண்டுகளின் தேர்வுகளில் சில குளறுபடிகள் நடந்திருக்கின்றன; இது நாடறிந்த உண்மை. சிபிஎஸ்இ போர்டும்கூட, நீதிமன்றத்தில் தாக்கல்செய்துள்ள பிரமாண பத்திரத்தில், மொழிபெயர்ப்பில் சிக்கல் இருந்ததாகத் தெரிவித்துள்ளது.

நீட் தேர்வு நடத்த அரசு ஒத்துழைக்க வேண்டும்

உண்மையான நீட் வரலாறு என்பது 2020ஆம் ஆண்டிலிருந்துதான் பார்க்க வேண்டும். அந்த வகையில், நமது பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தேர்வில் 180 கேள்விகளில், 173 கேள்விகள் தமிழ்நாடு பாடத்திட்டத்திலிருந்து கேட்கப்பட்டுள்ளன.

அதே போலவே இந்த ஆண்டும் நீட் தேர்வு இருக்கும். எனவே நீட் தேர்விலிருந்து விலக்கு கோருவதை விட்டுவிட்டு, இன்னும் 10 நாள்களில் நடக்க இருக்கிற நீட் தேர்வினை நல்லமுறையில் நடத்திட, மாணவர்களுக்கு எந்தவிதப் பிரச்சினையும் தராமல் தமிழ்நாடு அரசு துணைநிற்க வேண்டும்.

செங்கல் அரசியல்

ஒரு செங்கலை வைத்து அரசியலை ஆரம்பித்தவர்கள் தற்போது காம்பவுண்ட் சுவரை வைத்து அரசியல் செய்கிறார்கள். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் நடப்பு ஆண்டு முதல் மாணவர்கள் சேர்க்கை தொடங்க மத்திய அரசு கூறியுள்ளது. எய்ம்ஸ் முழுமையாக கட்டி முடித்த பின்னர்தான் மாணவர் சேர்க்கை தொடங்க முடியும் எனக் கூறி மருத்துவம் படிக்க நினைக்கும் மாணவர்களுக்கு எதிராக இருக்கிறது திமுக அரசு.

மாணவர் சேர்க்கையைத் தொடங்காமல், ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்குத் தடை வாங்குவது என்பது கிராமப்புற மாணவர்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்பு மறுப்பதுபோலாகும். இதில் அரசியல் செய்யாமல் மாணவர் சேர்க்கையைத் தொடங்க வேண்டும்.

விநாயகர் சதுர்த்தி விழா அனுமதி

விநாயகர் சதுர்த்தி விழாவில், பாஜகவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. கட்டுப்பாடுகளைப் போடுவதற்கு அரசுக்கு உரிமை உள்ளது. தமிழ்நாட்டில், இரண்டாவது அலை கட்டுக்குள் வந்துள்ளது. மூன்றாவது அலைக்கான எந்தச் சாத்தியக் கூறுகளும் தென்படவில்லை. அப்படி இருக்கும்போது விநாயகர் சதுர்த்தியை அனுமதிக்க மாட்டோம் எனக் கூறுவது ஏற்புடையது கிடையாது.

சிலை செய்யும் தொழிலாளர்கள், அமைப்பாளர்கள், அமைப்புகள் என யாரையும் அழைத்துப் பேசாமல், ஏசி அறையில் அமர்ந்து போடும் உத்தரவை ஏற்க முடியாது. கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தி நடத்த அனுமதிக்க வேண்டும்.

கட்டுப்பாட்டை மீறினால் அமைப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். தமிழ்நாட்டைவிட மராட்டியத்தில் பாதிப்புகள் அதிகமாக இருந்தாலும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கும்போது, தமிழ்நாட்டில் மட்டும் அனுமதி மறுப்பது ஏன் என்று தெரியவில்லை. இன்னும் காலம் இருக்கிறது தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'பொதுச்சொத்துகளைத் தனியார்மயமாக்கும் முடிவை மறுபரிசீலனை செய்க'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.