கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் ரூ.641 கோடி மதிப்பீட்டில் பயோ-மைனிங்

author img

By

Published : Jan 21, 2023, 7:03 PM IST

Etv Bharat

கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் ரூ.641 கோடி மதிப்பீட்டில் பயோ-மைனிங் முறையில் பிரித்தெடுத்து நிலத்தை மீட்டெடுக்கும் பணிகள் மேற்கொள்ள மாநகராட்சி அரசின் நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது.

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு சராசரியாக 5,100 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. இந்தத் திடக்கழிவுகள் மக்கும், மக்காத கழிவுகளாக பிரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யும் வகையில் பதனிடும் மையங்களுக்கு அனுப்பப்படுகிறது. மீதமுள்ள கழிவுகள் பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் உள்ள குப்பை கொட்டும் வளாகங்களில் கொட்டப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், சென்னையை தூய்மையான நகரமாகப் பராமரிக்கவும், கொடுங்கையூர் மற்றும் பெருங்குடியில் நீண்ட நாட்களாக தேங்கியுள்ள குப்பைகளை அகற்றி நிலத்தை மீட்டெடுக்கவும். உர மையங்களை வலுப்படுத்தி திடக்கழிவு மேலாண்மை விதிகளை அமல்படுத்தவும், கட்டுமானம் மற்றும் இடிபாட்டு கழிவுகளை விஞ்ஞான முறையில் மறுசுழற்சி செய்யவும் அறிவுறுத்தியுள்ளார்.

அதனடிப்படையில் பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் ரூ.354 கோடி மதிப்பீட்டில் சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் பல ஆண்டுகளாக கொட்டப்பட்டு வரும் குப்பைகளை பயோ மைனிங் முறையில் பிரித்தெடுத்து நிலத்தை மீட்டெடுக்க ஏற்கனவே பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் டிசம்பர் 2023க்குள் நிறைவு பெறவுள்ளது.

இந்நிலையில் சுமார் 343 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள கொடுங்கையூர் குப்பைக் கொட்டும் வளாகத்தில் சுமார் 252 ஏக்கர் நிலப்பரப்பில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக கொட்டப்பட்டு வரும் சுமார் 66.52 லட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் ஆறு சிப்பங்களாக பிரிக்கப்பட்டு, தூய்மை இந்தியா திட்ட நிதி, மாநில அரசு நிதி மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி நிதி பங்களிப்பின் மூலம் பயோ மைனிங் முறையில் ரூ.641 கோடி மதிப்பீட்டில் பயோ-மைனிங் முறையில் பிரித்தெடுத்து நிலத்தை மீட்டெடுக்கும் பணிகள் மேற்கொள்ள மாநகராட்சி அரசின் நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது. இந்தப் பணிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப வல்லுநர்களை உள்ளடக்கிய திட்ட கண்காணிப்புக் குழுவின் (Project Monitoring Committee) மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. இப்பணிகள் இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவு பெற்று நிலம் மீட்டெடுக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: பழனி முருகன் கோயிலில் நவபாஷாண மூலவர் சிலையை தரிசனம் செய்ய அனுமதி இல்லை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.