ETV Bharat / state

அரும்பாக்கம் வங்கி கொள்ளை.. காவல் ஆய்வாளருக்கு சொந்தமான இடத்தில் மேலும் 2.5 கிலோ தங்கம் பறிமுதல்

author img

By

Published : Aug 19, 2022, 6:56 AM IST

Updated : Aug 19, 2022, 11:55 AM IST

அரும்பாக்கம் வங்கி கொள்ளை சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளருக்கு சொந்தமான இடத்தில் மேலும் 2.5 கிலோ தங்கத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

அரும்பாக்கம் வங்கி கொள்ளை சம்பவம்.. ஆறு பேரிடம் தீவிர விசாரணை
அரும்பாக்கம் வங்கி கொள்ளை சம்பவம்.. ஆறு பேரிடம் தீவிர விசாரணை

சென்னை: அரும்பாக்கம் தனியார் தங்க நகை கடன் வங்கியில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக முக்கிய நபரான முருகன் மற்றும் அவரது கூட்டாளி சூர்யா ஆகியோர் சரணடைந்த நிலையில், கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதேநேரம் இவர்களுக்கு வாகன உதவி செய்து, தங்கத்தை விற்க உடந்தையாக இருந்த செந்தில் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

இதில் தனியார் கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் செந்தில், தங்கத்தை உருக்குவதற்கு உதவி செய்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஏற்கனவே பாலாஜி மற்றும் சந்தோஷ் ஆகிய கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டு ஐந்து நாள் காவலில் எடுக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தக் கொள்ளைச் சம்பவத்தை பொறுத்தவரையில் இதுவரை ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சந்தோஷிடம் நடத்தப்பட்ட விசாரணை மூலம் அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ்க்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் அம்பலமானது.

இதனையடுத்து காவல் ஆய்வாளரின் வீட்டில் இருந்து 3.7 கிலோ தங்கம் மீட்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட சூர்யா, முருகன் மற்றும் செந்தில் ஆகியோரை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, வரும் 1 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டது.

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ்
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ்

இதனைத்தொடர்ந்து மூவரையும் காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். இதனிடையே அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் மனைவி மெர்ஸி இந்திரா மற்றும் குற்றவாளி சந்தோஷ் மனைவி ஆகிய இருவரும் உறவினர் என்பதால் கொள்ளை சம்பவத்தில் தங்க நகைகளை மறைக்க உதவியாக இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நகைக்கடையைச் சேர்ந்த ஸ்ரீ வட்சன் என்பவரும் நகையை விற்க உதவி செய்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு கைது செய்யப்பட்ட ஐந்து பேரை தவிர மேலும் ஆறு பேரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பாலாஜி, சந்தோஷ் ஆகிய இருவரிடம் போலீஸ் காவலில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. அதேநேரம் இக்கொள்ளை சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜை பணியிடை நீக்கம் செய்து காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்தியபிரியா உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் ஏற்கனவே நேற்று மேல்மருவத்தூரில் உள்ள காவல் ஆய்வாளர் அமல்ராஜின் வீட்டில் 3.7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், காவல் ஆய்வாளருக்குச் சொந்தமான இடத்தில் மேலும் 2.5 கிலோ தங்கத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

ஆனால், வங்கியின் சார்பாக தெரிவிக்கப்பட்ட புகாரில் 32 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கொள்ளையர்களிடம் இருந்து 28 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ்-க்கு சொந்தமான இடத்தில் இதுவரை 6.2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அரும்பாக்கம் நகைகள் திருட்டு விவகாரத்தில் வெளியான சிசிடிவி மூலம் போலீஸ் விசாரணை

Last Updated : Aug 19, 2022, 11:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.