புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் அதிமுக பங்கேற்பு!
Published: May 24, 2023, 10:55 PM


புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் அதிமுக பங்கேற்பு!
Published: May 24, 2023, 10:55 PM
டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் அதிமுக பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டடம் (New Parliament Building Inauguration), வருகிற 28ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் திறந்து வைக்க உள்ளனர். இதற்காக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் மற்றும் சில முக்கிய திரைப்பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஒரு நாடாளுமன்றம் என்பது மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு வகைகளைக் கொண்டது எனவும், இந்த இரு அவைகளின் தலைவராக நாட்டின் குடியரசுத் தலைவர் செயல்படுகிறார் எனவும், எனவே குடியரசுத் தலைவரே புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறக்க வேண்டும் என எதிர்கட்சிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் காங்கிரஸ், திமுக உட்பட 19 எதிர்க்கட்சிகள் இந்த நிகழ்வை புறக்கணிப்பதாக ஒன்றிணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளன.
இதையும் படிங்க: புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா: திமுக, விசிக புறக்கணிப்பு
ஒரு பழங்குடியின பெண்ணாகிய திரௌபதி முர்முவை நாட்டின் குடியரசுத் தலைவராக (President of India Droupadi Murmu) அமர வைத்தாக பறைசாற்றிய பாஜக, அவருக்கான அரசியல் சாசன உரிமை மற்றும் மரியாதையை அளிக்க வேண்டும். ஆனால், அது இங்கு நிராகரிக்கப்படுவதாக இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் பாஜக அரசை கடுமையாக சாடினர். மேலும், சாவர்க்கரின் பிறந்தநாள் அன்று புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகிறது.
இதனிடையே, புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி புறக்கணிப்பதாக, மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்தார். இந்த நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் அதிமுக கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அதிமுக பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், மாநிலங்களவை உறுப்பினர்கள் தம்பிதுரை மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோர் அதிமுக சார்பாக கலந்து கொள்ளவுள்ளனர்.
புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில், தமிழகத்தின் மன்னர் கால நடைமுறைப்படி செய்யப்பட்ட செங்கோல் முக்கிய இடம் பிடிக்கப் போகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவாவடுதுறை ஆதீனத்தால் செய்யப்பட்ட தங்க செங்கோல், ஆதீன கர்த்தரால் பிரதமர் நரேந்திர மோடியின் கையில் வழங்கப்பட்டது. 1947ம் ஆண்டு நாடு சுதந்திரம் பெற்ற போது இதே செங்கோல், நேருவின் கையில் ஆதீன பிரதிநிதிகளால் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா; திமுக புறக்கணிப்பது ஏன்? திருச்சி சிவா எம்.பி. விளக்கம்
