9 ஆண்டுகளுக்குப்பிறகு 955 உதவிப்பேராசிரியர்கள் பணி நிரந்தரம்

author img

By

Published : Sep 23, 2022, 7:57 PM IST

9 ஆண்டுகளுக்கு பிறகு  உதவிப் பேராசிரியர்கள் பணி நிரந்தரம்

9 ஆண்டுகளுக்குப் பிறகு 955 உதவிப்பேராசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.

சென்னை: தலைமைச்செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது, அரசு கல்லூரிகளில் பணியாற்றி வருகின்ற உதவிப்பேராசிரியர்கள் பணியை வரைமுறைபடுத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்து இருந்தனர்.

கடந்து 2012ஆம் ஆண்டு பணிக்கு நியமிக்கப்பட்ட 955 உதவிப்பேராசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவதாகவும், அவர்களை அப்போதே பணி நிரந்தரம் செய்வோம் என்று கடந்த அதிமுக ஆட்சி அறிவித்தது. ஆனால், அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாத காரணத்தினால் இன்று கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்குப்பிறகு பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும் பேசிய அவர், பல்கலைக்கழகங்களுக்குக்கீழ் செயல்படுகின்ற 41 கல்லூரிகளின் ரூ.152 கோடி செலவை அரசே ஏற்கும் என்று முந்தைய அதிமுக அரசு அறிவித்தது. ஆனால், கல்லூரிகளுக்கு பணமும் ஒதுக்கவில்லை. அரசும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று விமர்சனம் செய்த அமைச்சர் அந்த கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

அந்த அடிப்படையில் 41 கல்லூரிகளும் அரசு உடைமை ஆக்கப்பட்டது. அதற்கான ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் அந்தக் கல்லூரிகளில் பணியாற்றிய சிறப்பு விரிவுரையாளர் ஆசிரியர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 1030 ஆசிரியர்களுக்கு அடுத்த வாரம் பணி ஆணையை முதலமைச்சர் வழங்க உள்ளதாகக்கூறிய அமைச்சர், பொறியியல் கலந்தாய்வு முதற்கட்டம் முடிந்துள்ளது என்றும்; இதில் 10,351 மாணவர்கள் கலந்துகொண்டுள்ளனர் என்றும்; அதில் 6009 பேர் கல்லூரிகளில் சேர்ந்துவிட்டனர் எனவும் தெரிவித்தார்.

’தமிழ்நாடு முதலமைச்சர் மிகத் தெளிவாக சொல்லி இருக்கிறார். புதிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்காது, தமிழ்நாட்டு கல்விக்கு என்ற ஒரு கல்விக்குழுவை உருவாக்குதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் தான் தமிழ்நாட்டின் கல்வித் திட்டம் இருக்கும் அதற்கு எதிராக வேறுபட்ட கருத்து இல்லை’ என்றும் கூறினார்.

மேலும் பேசிய அவர் புதிய கல்வி கொள்கைக்கும் காலை சிற்றுண்டி திட்டத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறிய அமைச்சர் பள்ளிப்போதை பழக்கம் குறித்து முதலமைச்சர் சிறப்புக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்து வருகிறார் என்று கூறினார்.

இதையும் படிங்க: பெருங்களத்தூர் மேம்பால பணிகள்...காலதாமதம் ஏன்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.