சமூக வலைத்தளவாசிகள் உஷார்.. அவதூறு போஸ்டுகளை விசாரிக்க தனிப்பிரிவு!

author img

By

Published : Nov 15, 2022, 4:30 PM IST

சைபர் கிரைம்

சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைதளங்களில் கருத்து மற்றும் வீடியோக்கள் பதிவிடுபவர்களை கண்காணிக்க சென்னை காவல்துறையில் தனிப்பிரிவு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை: தமிழகத்தில் அண்மைக் காலமாக சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக பண மோசடி அல்லாத சர்ச்சைகளை ஏற்படுத்தக் கூடிய கருத்துகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. காலத்திற்கு ஏற்ப சைபர் குற்றங்கள் மாறுபட்டு, நவீனமாகி வந்தாலும் பொதுமக்களிடம் இருந்து பணத்தை பறிக்க நூதன முறைகளை மோசடி கும்பல்கள் கையாண்டு வருகின்றன.

மோசடி கும்பல்கள் ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதள பதிவுகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. சைபர் குற்றம் மற்றும் சட்டவிரோத செயல்கள் குறித்து புகார் அளிப்பது தொடர்பாக பொது மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததால், குற்றங்கள் அதிகரிக்க காரணமாக கருதப்படுகிறது.

சமூக வலைதளங்கள் மூலம் புகார்:

அதேநேரம் நேரடி புகார்களை காட்டிலும் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் நடக்கும் சட்டவிரோத மது விற்பனை, போதைப்பொருள் விற்பனை, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்கள், மாணவர்களின் வன்முறை செயல்கள், பெண் வன்கொடுமை, போக்குவரத்து விதிமீறல், சட்டவிரோதமாக வாகனத்தை நிறுத்துதல், முறையில்லாமல் நம்பர் பிளேட்டுகள் பயன்படுத்துதல், நடைபாதை ஆக்கிரமிப்பு, உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை டுவிட்டர், பேஸ்புக் மற்றும் ஈ-மெயில் மூலம் தெரியப்படுத்துவதால் புகார்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை உடனடியாக சென்றடைந்து விசாரணைக்கு உத்தரவிடப்படுகிறது.

சமீபகாலமாக சமூக வலைதளத்தில் பிரபலமாகவும், லைக்குகளை வாங்கவும் மாணவர்கள், இளைஞர்கள் பலர் அபாயகரமான வீடியோக்களை பதிவிட்டு தவறான முன் உதாரணமாக மாறி வருகின்றனர். இது தவிர்த்து ஒருவர் மற்றும் ஒரு அமைப்பின் மீது கொண்ட கருத்து வேறுபாடுகளை தீர்க்க அவதூறு கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதும், வீடியோக்களை வெளியிடுவதுமான செயல்களும் அதிகரித்துள்ளன.

அவதூறு பரப்புவோர்க்கு ஆபத்து - சமூக வலைதள புகார்களை விசாரிக்க தனிப்பிரிவு..!

அவதூறு பரப்ப உதவும் சமூக வலைதளம்

மேலும் தங்களுக்கு எதிரானவர்கள் மீதான பகையை வெளிப்படுத்த ஒரு சிலர் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பும் வகையில் மீம்ஸ்கள், ஆபாச வார்த்தைகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுகின்றனர். குறிப்பாக அரசியல், மதம், ஜாதி மற்றும் குறிப்பிட்ட பிரிவினரை இழிவுபடுத்தும் வகையிலான சில வீடியோக்கள், பேச்சுகள் சமூக வலைதளத்தில் வெளியாகி குற்றச் செயல்களை அதிகரிக்கும் தூண்டிலாக மாறுகின்றன.

சமூக வலைதள கண்காணிப்பு தனிப்பிரிவு

இதுபோன்ற புகார்களை மத்திய குற்றப் பிரிவில் உள்ள சைபர் கிரைம் உதவி ஆணையருக்கு அனுப்பப்பட்டு, சென்னை காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து வந்தது. சைபர் குற்றங்களின் அதிகரிப்பிற்கு ஏற்ப மத்திய குற்ற பிரிவில் துணை ஆணையர் அளவில் அதிகாரி நியமிக்கப்பட்டு தற்போது சைபர் குற்றங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பண மோசடி தொடர்பான சைபர் குற்றங்களை தவிர, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் சர்ச்சை கருத்துகள், பதிவுகள், புகைப்படங்கள் மற்றும் ஆடியோ, வீடியோக்களை விசாரிக்க சமூகவலைதள காண்காணிப்பு தனிப்பிரிவு உருவாக்க சென்னை காவல்துறை முடிவு செய்துள்ளது.

தனிப்பிரிவின் செயல்பாடுகள்

உதவி ஆணையர் தலைமையில் அமைக்கப்படும் இந்த தனிப்பிரிவு சமூக வலைதளங்களை முன்கூட்டியே கண்காணித்து, சர்ச்சை கருத்துகள், வீடியோக்கள் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சமூக வலைதளத்தின் மூலம் அளிக்கும் புகார்களைத் தவிர, வாட்ஸ்அப், பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், போன்ற சமூக வலைதளங்களில் பிரச்சனை ஏற்படுத்தும் வகையில் பதிவிடப்படும் பதிவுகளை இந்த தனிப்பிரிவு நேரடியாக கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக சமூக வலைதளங்களில் பரவும் சர்ச்சைக்குரிய பதிவுகளை ஆரம்ப நிலையிலேயே கண்காணித்து அதனை நீக்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளப்படும் என்றும், தொடர்ந்து சர்ச்சை கருத்துகளை பதிவிடும் நபர்களை கண்காணித்து வழக்குப்பதிவு உள்ளிட்ட நடவடிக்கைகளை தனிப்பிரிவு மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தமிழகத்திற்கு 7 மருத்துவ கல்லூரி வேண்டும் - மத்திய அரசிடம் ராமதாஸ் கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.