ஒரு மாத குழந்தைக்கு இன்சுலின் செலுத்திய தாய் - இரட்டை குழந்தைகள் கவலைக்கிடம்

author img

By

Published : Sep 20, 2022, 6:48 AM IST

ஒரு மாத குழந்தைக்கு இன்சுலின் செலுத்திய தாய் - இரட்டை குழந்தைகள் கவலைக்கிடம்

சென்னையில் தாய், தான் பயன்படுத்தி வந்த இன்சுலின் ஊசியை தனது ஒரு மாத இரட்டை குழந்தைகளுக்கும் செலுத்தியதால், இரண்டு குழந்தைகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை: வங்க தேசத்தைச் சேர்ந்தவர் அமுல்சந்திரபிவாஸ் (40). இவர் சென்னையில் அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி காஜல்பிவாஸ், மகப்பேறுக்காக சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சில மாதங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு ஒரே பிரசவத்தில் ஆண், பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தன. அதன்பின் மருத்துவனை சிகிச்சை முடிவடைந்ததால், குழந்தைகளுடன் சென்னை அரும்பாக்கம் காந்தி நகரில் உள்ள வீட்டிற்கு சென்றார்.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள காஜல், தொடர்ச்சியாக இன்சுலின் பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் செப் 18ஆம் தேதி இரவு காஜல், தான் பயன்படுத்தி வந்த இன்சுலின் ஊசியை பிறந்து ஒரு மாதமே ஆன தனது ஆண் குழந்தைக்கு செலுத்தியுள்ளார். இதனால் குழந்தை மயக்க நிலைக்குச் சென்றுள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அமுல் சந்திரபிவாஸ், உடனே குழந்தையை சேத்துப்பட்டில் உள்ள அதே தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். குழந்தை கவலைக்கிடமாக உள்ளதால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதனிடையே நேற்று காலை மற்றொரு பெண் குழந்தைக்கும் திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. அந்த குழந்தையும் தீவிர சிகிச்சை பிரிவில் அமுல் சேர்த்தார். இதனைத்தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம், சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் இரு குழந்தைகள் அனுமதிக்கப்பட்டது குறித்து தகவல் தெரிவித்தது. அதன் பேரில் சேத்துப்பட்டு காவல்துறையினர் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு குழந்தைகளும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் பிரபல ரவுடி தீக்குளித்து தற்கொலை - மனைவியின் ஓராண்டு நினைவுதினம் முடிந்தவுடன் துயரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.