333 பேருக்கு 'முன் வேலைவாய்ப்பு' சென்னை ஐஐடி அசத்தல்!

author img

By

Published : Nov 14, 2022, 4:39 PM IST

students

சென்னை ஐஐடியில் 2022-23ஆம் கல்வி ஆண்டில், முன் வேலைவாய்ப்புகளைப் பெறும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நடப்பு கல்வியாண்டில் நவம்பர் 13ஆம் தேதி வரை 333 பேர் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர்.

சென்னை: சென்னை ஐஐடியில் மாணவர்கள் முன் வேலைவாய்ப்புகளை (Pre-Placement offers) பெற ஊக்குவிக்கும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், ஆண்டுதோறும் ஏராளமான மாணவர்கள் படிக்கும்போது தங்களது வேலையை உறுதி செய்து கொள்கின்றனர்.

அதன்படி, 2022-23ஆம் கல்வி ஆண்டுக்கான பயிற்சி கடந்த கோடைகாலத்தில் ஆஃப்லைன் முறையில் நடத்தப்பட்டது. இதன் எதிரொலியாக முன் வேலைவாய்ப்பை பெறும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

2021-22ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் வரையில், மொத்தம் 231 மாணவர்கள் மட்டுமே முன்வேலைவாய்ப்புகளை பெற்றிருந்தனர். ஆனால், 2022-23ஆம் கல்வியாண்டில் நவம்பர் 13ஆம் தேதி வரையில் 333 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. முதல்கட்ட வளாக வேலைவாய்ப்பு, டிசம்பர் 1ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதால், அதுவரை முன்வேலைவாய்ப்புக்கான பணிகள் தொடர்ந்து நடைபெறும் என தெரிகிறது.

இதுகுறித்து சென்னை ஐஐடி வேலைவாய்ப்பு ஆலோசகர் சத்யன் கூறும்போது, "இந்த ஆண்டு முன்வேலைவாய்ப்பு அதிகரித்திருக்கிறது. மாணவர்களுக்கு பயிற்சியை அளித்து அவர்களின் திறனை மதிப்பிடும் வகையில், நீண்டகால நேர்காணல் நடைமுறையை மேற்கொள்ளவும், முன்வேலைவாய்ப்புகளை வழங்கவும், நிறுவனங்களை ஊக்குவித்து வருகிறோம்.

மாணவர் ஒருவருக்கு நிறுவனம் அளிக்கும் முன்வேலைவாய்ப்பை அவர் ஏற்றுக் கொள்ளும்போது, அந்த நிறுவனத்துடன் நீண்ட காலத்திற்கு நல்லதொரு தொடர்பு ஏற்பட வழிவகுக்கும். நடப்பு கல்வியாண்டில் தற்போதுவரை, கோர் என்ஜினியரிங், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறைகளில்தான் பெரும்பாலான முன்வேலைவாய்ப்பு இடங்கள் பெறப்பட்டுள்ளன. நடப்பாண்டில் குவால்காம், மைக்ரோசாப்ட், ஹனிவெல், டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமெண்ட்ஸ், கோல்ட்மேன் சாக்ஸ் ஆகிய நிறுவனங்களில் அதிகளவில் மாணவர்கள் தேர்வாகியுள்ளனர்" என்று கூறினார்.

இதையும் படிங்க: சிஎம்சி கல்லூரி ராகிங்: நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்ய ஆணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.