ரூ.2 ஆயிரம் நோட்டுக்களை இன்று முதல் வங்கிகளில் மாற்றலாம்! வழிமுறைகள் என்னென்ன?

author img

By

Published : May 23, 2023, 9:25 AM IST

Etv Bharat

மக்கள் தங்களிடம் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை இன்று முதல் வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்து உள்ளார்.

சென்னை: கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி நாட்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் மதிப்பிழப்பு செய்யப்பட்டு புதிதாக 500, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

திடீரென்று மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையால் கையில் இருந்த பணத்தை மாற்ற முடியாமலும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட நோட்டுக்கள் கிடைக்காமலும் மக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். மேலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டதற்கு கடும் விமர்சனங்களும் எழுந்தன.

இந்நிலையில் மக்களிடம் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக கடந்த 19ஆம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. மக்கள் இன்று முதல் (மே 23) செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை தங்கள் கையில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்லலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.

மக்கள் நாள் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் வரையிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மட்டுமே வங்கிகளில் மாற்ற முடியும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது. மேலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றுவதற்கு பிரத்யேகமான விண்னப்ப படிவங்களும் வெளியிடப்பட்டன.

அந்த படிவத்தில் பணத்தை மாற்ற செல்லும் வங்கியின் பெயர், அந்த வங்கியில் கணக்கு வைத்து இருந்தால் அதன் எண், போன்ற விவரங்களும், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்ற அடையாள அட்டைகளில் ஒன்றின் அசலைக் காட்ட வேண்டும். மேலும் வங்கியில் காட்டும் அடையாள அட்டையின் எண்ணையும் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.

மேலும் வங்கியில் எத்தனை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை செலுத்துகிறோம் என்பதையும் குறிப்பிட்டு, வாடிக்கையாளர் கையொப்பம் இட்டு விண்ணப்ப படிவத்தை அளித்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்லலாம். மேலும் வங்கியில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை ஒரு நாளில் 20 ஆயிரம் தான் மாற்ற முடியும் என்ற கட்டுபாடுகள் உள்ள நிலையில், வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கு எந்த கட்டுபாடுகளும் விதிக்கப்படவில்லை.

வங்கி கணக்குகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை செலுத்துவதற்கு 50 ஆயிரத்திற்கு மேல் செலுத்தும் நபர்கள் வருமான வரிக் கணக்கு காட்ட வழங்கும் பான் எண்ணை குறிப்பிட வேண்டும் என்கிற வழக்கமான நடவடிக்கைகளே தொடர்கின்றன. செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அதுவரை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லும் எனவும் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்து உள்ளார்.

2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவது குறித்த அறிவிப்பு வெளியான உடனே பொதுமக்கள் பதற்றம் அடைந்து தாங்கள் சேமிப்பில் வைத்து இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை கடைகளில் கொடுத்து மாற்ற முயற்சித்தனர். கடைகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்ததால் மக்கள் பதற்றமடைந்தனர்.

மேலும் டாஸ்மாக்கில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வாங்க கூடாது என அறிவிப்பு வெளியானதாகவும் தகவல்கள் பரவத் துவங்கியது. இதனையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி டாஸ்மாக்கில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வாங்க கூடாது என பரவும் தகவல் போலியானது என விளக்கம் அளித்தார். அதேபோல் பேருந்துகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மக்கள் வழங்குவதற்கு எந்த தடையும் இல்லை என தமிழக போக்குவரத்துத் துறை விளக்கம் அளித்து உள்ளது.

இதையும் படிங்க: எவரெஸ்ட் சிகரம் தொட்ட தமிழன்: இளைஞர்களுக்கு கூறும் அட்வைஸ் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.