விஷச்சாராயம் விவகாரம் - கொலை வழக்காக மாற்றிய சிபிசிஐடி அதிகாரிகள்

author img

By

Published : May 24, 2023, 10:21 PM IST

Updated : May 25, 2023, 1:23 PM IST

Etv Bharat

செங்கல்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள், விஷச்சாராயம் விவகாரம் தொடர்பான வழக்குகளில் 2 வழக்குகளை கொலை வழக்காக மாற்றியுள்ளனர். மேலும் மீதமுள்ள 4 வழக்குகளையும் கொலை வழக்காக மாற்ற வேண்டி தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபுவிடம் அனுமதி கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செங்கல்பட்டு: விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் விஷச்சாராயம் குடித்து 22 நபர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உயிரிழந்த குடும்பத்தினரை நேரடியாக சென்று ஆறுதல் தெரிவித்ததுடன் தலா 10 லட்சம் ரூபாய் நிதி உதவி அறிவித்திருந்தார்.

இதனை அடுத்து விஷச்சாராயம் விற்பனை தொடர்பாக 17 நபர்கள் கைது செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்காத காவல் துறை அதிகாரிகளும் தற்காலிக பணியிடை நீக்கம் மற்றும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். மேலும், விஷச்சாராயமாக விற்கப்பட்டது மெத்தனால் என்கிற வேதிப்பொருள் என்பது தெரியவந்தது.

இந்த வழக்கின் தீவிர தன்மையை கருதி விஷச்சாராய வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்தார். மேலும் இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக செங்கல்பட்டு மாவட்டத்திற்கு சிபிசிஐடி ஏடிஎஸ்பி மகேஷ்வரியும் விழுப்புரம் மாவட்டத்திற்கு ஏடிஎஸ்பி கோமதியும் நியமிக்கப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.

இதையும் படிங்க: கள்ள சாராய விற்பனையை தடுக்க தவறிய எஸ்ஐ உட்பட ஐந்து போலீசார் தற்காலிக பணியிடை நீக்கம்!

இதனனை அடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 11 நபர்கள் கைது செய்யப்பட்டனர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 6 நபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் இதன் தொடர்ச்சியாக விழுப்புரம் மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட 11 நபர்களை சிபிசிஐடி அதிகாரிகள் மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது செங்கல்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள், விஷச்சாராயம் விவகாரம் தொடர்பான வழக்குகளில் இரண்டு வழக்குகளை கொலை வழக்காக மாற்றி விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மீதமுள்ள 4 வழக்குகளை மாற்ற வேண்டி ஏடிஎஸ்பி மகேஸ்வரி டிஜிபி சைலேந்திரபாபுவிடம் அனுமதி கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அடுத்தக்கட்டமாக விஷசாராயம் விற்கப்பட்ட பாட்டிலை சிபிசிஐடி அதிகாரிகள் கைப்பற்றி தடயவியல் அலுவலகத்திற்கு அனுப்ப இருப்பதாகவும், விஷச்சாராயம் விவகாரத்தில் அடுத்தடுத்து கைது நடவடிக்கைகள் தொடரும் எனவும் சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுவாக மது விலக்கு அமலில் இருக்கும் மாநிலங்களில் தான் கள்ளச்சாராய பிரச்சனை தலை தூக்கும். ஆனால் தமிழ்நாட்டில் டாஸ்மாக் மூலம் முறைப்படுத்தப்பட்ட மது விற்பனை நடைபெறும் போதே கள்ளச்சாராய விற்பனை நடைபெறுவது விமர்சன்த்திற்கு ஆளாக்கியுள்ளது.

அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் உதவியுடன் நடைபெறும் இது போன்ற கள்ளச்சாராயம், குறைந்த விலைக்கு கிடைப்பதால் குடிமகன்கள் இதனை நாடுகின்றனர். இந்த விற்பனையை தடுக்க தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: கள்ளச்சாராய மரணங்கள்; கல்லா கட்டித் தரும் அமைச்சர் மீது யார் நடவடிக்கை எடுப்பது? சீமான் கேள்வி

Last Updated :May 25, 2023, 1:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.