சிறுமியின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் தவறாக சித்தரிப்பு - இளைஞர் போக்சோவில் கைது!

சிறுமியின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் தவறாக சித்தரிப்பு - இளைஞர் போக்சோவில் கைது!
Youth arrested under POCSO Act: அரியலூரில் 16 வயது சிறுமியின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் தவறாக பதிவு செய்த கூலித் தொழிலாளியை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.
அரியலூர்: சிறுமியின் புகைப்பத்தை சமூக வலைத்தளங்களில் தவறாக பதிவு செய்த நபரை, ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர், கூலி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், இவர் தனது பகுதியைச் சேர்ந்த 16 வயதான சிறுமி ஒருவரின் கண்களை தவறாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனையறிந்த சிறுமியின் பெற்றோர், இளைஞரின் பெற்றோரிடம் கூறி அவரைக் கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், மீண்டும் அந்த சிறுமியின் முதல் எழுத்தையும், தன் பெயரின் முதல் எழுத்தையும் சேர்த்து எடிட் செய்ததாக கூறப்படுகிறது.
மேலும், சிறுமியின் முகம் உள்ள புகைப்படத்தை ஹார்ட்டில் வைத்து டிசைன் செய்து, அதனை தன் புகைப்படத்துடன் இணைத்து, தான் பயன்படுத்தி வரும் சமூக வலைத்தள குரூப்பில் பதிவிட்டதாகத் தெரிகிறது. இதனை அறிந்த சிறுமி, தன் பெற்றோரிடம் இது குறித்து கூறியுள்ளார். இதனால், மீண்டும் சிறுமியின் பெற்றோர் அந்த இளைஞரின் பெற்றோரிடம் கூறி, அவரை கண்டிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், அந்த இளைஞரை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மேலும் ஆத்திரமடைந்த இளைஞர், சிறுமியின் வீட்டுக்குச் சென்று, அவரது பெற்றோரிடம் ‘உங்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சிறுமியின் எதிர்காலத்தை அழித்து, வாழ்க்கையை சின்னாபின்னமாக்கி விடுவேன்’ என மிரட்டியும், தகாத வார்த்தைகளால் திட்டியும் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில், அனைத்து மகளிர் போலீசார் அந்த இளைஞரை அழைத்து, அவரது செல்போனில் உள்ள பதிவுகளை சோதனை செய்து சம்பவத்தை உறுதி செய்துள்ளனர். இதையடுத்து, இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
