இ-சேவை மையம் தொடங்க விருப்பமா? உடனே விண்ணப்பியுங்கள்..

author img

By

Published : Mar 22, 2023, 4:49 PM IST

இ-சேவை மையம் தொடங்க விருப்பமா? உடனே விண்ணப்பியுங்கள்..

இ-சேவை மையம் தொடங்க விருப்பம் உள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அரியலூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் ‘அனைவருக்கும் இ-சேவை மையம்’ என்ற திட்டத்தின் கீழ் இ-சேவை மையம் அமைத்து நடத்த ஆர்வம் உள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டமானது படித்த இளைஞர்களையும், தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையிலும், இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்களை ஏற்படுத்திடவும் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் (TACTV), தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் (PACCS), தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், மீன்வளத் துறை, கிராமப்புறத் தொழில் முனைவோர்கள் (CSC VLEs) ஆகிய நிறுவனங்களின் மூலம் இ-சேவை மையங்களை செயல்படுத்தி, மக்களுக்கான அரசின் சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே வழங்கி வருகின்றது.

மேலும், அரசின் இணையதள சேவைகளை குடிமக்களுக்கான பொது இணையதளம் வாயிலாகவும் வழங்கி வருகின்றது. இதனை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது, ‘அனைவருக்கும் இ-சேவை மையம்’ என்ற திட்டத்தின் மூலம் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்கள் தொடங்கி, பொதுமக்களுக்கான அரசின் இணைய வழி சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே வழங்குவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் நோக்கமானது, அனைத்து ஊராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் இ-சேவை மையங்களை ஏற்படுத்திடவும், மாவட்டங்களில் இ-சேவை மையங்களின் எண்ணிக்கையினை அதிகரித்து, இ-சேவை மையங்களில் பொதுமக்கள் காத்திருக்கும் நேரத்தினைக் குறைத்து, மக்களுக்கு சிறந்த மற்றும் நேர்த்தியான சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே வழங்குவதே ஆகும்.

எனவே, அரியலூர் மாவட்டத்தில் ‘அனைவருக்கும் இ-சேவை மையம்’ என்ற திட்டத்தின் கீழ் இ-சேவை மையம் அமைத்து நடத்த ஆர்வம் உள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இணைய முறையில் மட்டுமே இதற்கான விண்ணப்பங்களைப் பதிவு செய்ய இயலும். இந்தத் திட்டத்தைப் பற்றிய கூடுதல் தகவல் பெறவும், ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் https://www.tnesevai.tn.gov.in/ / https://tnega.tn.gov.in/ என்ற இணையதள முகவரிகளைப் பயன்படுத்தவும்.

மேலும் இதற்கான விண்ணப்பங்களை மார்ச் 15ஆம் தேதி காலை 11.30 மணி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி இரவு 8 மணி வரை மட்டுமே பதிவு செய்ய இயலும். கிராமப்புறங்களில் இ-சேவை மையம் செயல்படுத்துவதற்கான விண்ணப்பக் கட்டணம் 3,000 ரூபாய் ஆகும். மற்றும் நகர்ப்புறத்திற்கான கட்டணம் 6,000 ரூபாய் ஆகும்.

இந்த விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும். மேலும், விண்ணப்பதாரருக்கு உரிய பயனர் பெயர் (Username) மற்றும் கடவுச்சொல் (Password) ஆனது விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி பெற இலவச வகுப்பு - அரியலூர் ஆட்சியர் அழைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.