அரியலூர்: உடையார்பாளையம் தாலுகா, காசான்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தன்னுடைய மாமா செம்புலிங்கம் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அப்பாவி விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். செம்புலிங்கத்தின் மருமகன் அருண்குமார் மீது விக்கிரமங்கலம் காவல்நிலையத்தில் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் கடந்த நவ.25ம் தேதி அருண்குமாரை தேடி விக்கிரமங்கலம் காவல் ஆய்வாளர் வேலுச்சாமி, உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், சிறப்பு உதவி ஆய்வாளர் பழனிவேல் மற்றும் 5 காவலர்கள் செம்புலிங்கம் வீட்டிற்கு வந்து அவரை பற்றி விசாரித்துள்ளனர்.
அவர் வீட்டில் இல்லை என்று கூறியதால், செம்புலிங்கத்தை காலில் உதைத்தும், அடித்தும் தாக்கியுள்ளனர். பின்னர் லத்தியால் கடுமையாக தாக்கியுள்ளனர். வீட்டில் இருந்த டி.வி. உள்ளிட்ட பொருட்களை அடித்து உடைத்தது மட்டுமல்லாமல், வீட்டில் இருந்த என் அத்தை, அவரது மகனையும் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
உடைகளை கிழித்தும், பிறப்பு உறுப்புகளில் கொடூரமாக தாக்கியும் சித்ரவதை செய்துள்ளனர். மேலும் 3 பேரையும் அடித்தே கொன்று விடுவோம் என காவல்துறையினர் மிரட்டியுள்ளனர்.
ரத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் 3 பேரும் சேர்க்கப்பட்டனர். பின் இவரது வாக்கு மூலத்தை பதிவு செய்ய வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் அன்பழகன், காயமடைந்த 3 பேரையும் மிரட்டியது மட்டுமல்லாமல், தன் விருப்பம் போல வாக்குமூலத்தை எழுதி சென்று விட்டார். பின்னர் காவல்துறையினர் கொடுத்த நெருக்கடியால், 3 பேரையும் மருத்துவமனையிலிருந்து டாக்டர்கள் அவசரமாக வெளியேற்றியுள்ளனர்.
இதையடுத்து திருச்சி தனியார் மருத்துவமனையில் 3 பேரும் சிகிச்சை பெற்றனர். காவல்துறை தாக்குதலில் படுகாயம் அடைந்த செம்புலிங்கம் சிகிச்சை பலனின்றி கடந்த 8 ஆம் தேதி உயிரிழந்தார். என் மாமா கொலை வழக்கில் காவல்துறை அதிகாரிகள் குற்றவாளிகள் என்பதால், உள்ளூர் காவலர்கள் விசாரித்தால் சரியாக இருக்காது. எனவே சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். உடலை பிரேத பரிசோதனை செய்யும்போது, எங்கள் தரப்பு டாக்டரையும் இடம் பெற செய்ய வேண்டுமென மனுவில் கூறியிருந்தனர்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று நீதிபதி சந்திரசேகரனிடம் மனுதாரர் தரப்பு வக்கீல்கள் கே.பாலு, இளவரசன், திவ்யா முறையிட்டனர். இதை ஏற்றுக்கொண்டு, விடுமுறை தினமான இன்று மாலை நீதிபதி விசாரித்தார்.
விசாரணைக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதி, விவசாயி செம்புலிங்கம் உடலை திருச்சி, மதுரை, தஞ்சாவூர் மருத்துவனை முதல்வர்களில் தலா ஒரு பிரேத பரிசோதனை நிபுணத்துவம் பெற்ற ஒரு மருத்துவரை நியமிக்க வேண்டும். இவர்கள் நாளை (டிச.11) நண்பகல் 12 மணிக்குள் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்.
மனுதாரர் தரப்பில் மருத்துவர் அல்லாத ஒரு பிரதிநிதியை பிரேத பரிசோதனையின் போது அனுமதிக்க வேண்டும் என காவல்துறை மற்றும் மருத்துவமனைக்கு உத்தரவிட்டார். உறவினர்கள் உடலை பெற்று அமைதியான முறையில் அடக்கம் செய்ய வேண்டும்.
பிரேத பரிசோதனை முழுவதையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, விவசாயி செம்புலிங்கம் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரிய மனு மீது காவல்துறை பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி விசாரணை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க: மாண்டஸ் புயல் காரணமாக தரங்கம்பாடி மீன் பிடி துறைமுகம் சேதம்!