T20 WORLDCUP: மில்லரால் த்ரில் வெற்றிபெற்ற தென் ஆப்பரிக்கா!

author img

By

Published : Oct 30, 2021, 10:28 PM IST

T20 WORLDCUP

டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 12 சுற்றுப்போட்டியில் இலங்கை அணியை தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது.

சார்ஜா: ஏழாவது ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றுப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், முதல் பிரிவில் இடம்பெற்றுள்ள தென் ஆப்பரிக்கா, இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று மாலை நடைபெற்றது.

சார்ஜாவில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி, களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்க வீரர் பதும் நிஷான்கா மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இலங்கை நிதான ஆட்டம்

பிற பேட்டர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, இலங்கை அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்களை எடுத்தது. பதும் நிஷான்கா 58 பந்துகளில் 6 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 72 ரன்களைச் சேர்த்தார். தென் ஆப்பிரிக்கா சார்பில் பிரிடோரியஸ், ஷம்ஷி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், நோர்க்கியா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணிக்கு தொடக்க பேட்டர்கள் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால், அந்த அணி பவர்பிளே முடியில் 2 விக்கெட்டுகளை இழந்து 40 ரன்களை எடுத்தது.

மிடில் ஆர்டர் சொதப்பல்

இதன்பின்னர் மிடில் ஆர்டர் பேட்டர்களான பவுமா, மார்க்ரம் இருவரும் நிதானமாக ஆடியதால் 17 ஓவர்களில் 112 ரன்களை மட்டும் எடுத்தது. இதனால், கடைசி ஐந்து ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா வெற்றிக்கு 31 ரன்கள் தேவைப்பட்டது.

ஆட்டத்தின் 18ஆவது ஓவரை வீசிய ஹசரங்கா, முதல் இரண்டு பந்துகளில் பவுமா, பிரிடோரியஸ் ஆகிய இருவரின் விக்கெட்டை வீழ்த்தி ஆட்டத்தை சூடுபிடிக்கச் செய்தார். இதையடுத்து, களமிறங்கிய ரபாடா 19ஆவது ஓவரில் ஒரு சிக்ஸரை அடித்து தென் ஆப்பிரிக்காவின் அழுத்தத்தை சிறிது தணித்தார். இதனால், கடைசி ஓவரில் 15 ரன்கள் வேண்டிய நிலை ஏற்பட்டது.

மில்லர் காட்டிய த்ரில்லர்

லஹிரு குமாரா வீசிய அந்த ஓவரில், டேவிட் மில்லர் தொடர்ந்து இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டு தனது அணியை வெற்றி நோக்கி அழைத்துச்சென்றார். இறுதியில், ரபாடா ஒரு பவுண்டரி அடிக்க, தென் ஆப்பிரிக்கா அணி 19.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து தனது வெற்றி இலக்கை கடந்தது.

மில்லர் 23 (13) ரன்களுடனும், ரபாடா 13 (7) ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை சார்பில் ஹசரங்கா 3 விக்கெட்டுகளையும், துஷ்மந்தா சமீரா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இப்போட்டியில், 4 ஓவர்களில் 17 ரன்களை மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய தென் ஆப்பிரிக்க அணி சுழற்பந்துவீச்சாளர் ஷம்ஷி ஆட்டநாயகனாக தேர்வுசெய்யப்பட்டார்.

இந்த வெற்றி மூலம் தென் ஆப்பிரிக்க அணி முதல் பிரிவு புள்ளிப்பட்டியில் மூன்றாவது இடத்திலும், அடுத்த இடத்தில் இலங்கை அணியும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

முட்டிபோட்டார் டி காக்

இந்த உலகக்கோப்பை தொடரில், கருப்பின மக்களுக்கு துணைநிற்கும் (Blacks Lives Matters) பரப்புரையின் ஒரு வடிவமாக, வீரர்கள் முட்டிபோடுவது ஒரு வழக்கமாக பின்பற்றப்படுகிறது. இந்த நடைமுறைக்கு தென் ஆப்பிரிக்கா வீரர் குவின்டன் டி காக் மறுப்பு தெரிவித்திருந்தால் கடந்த போட்டியில் சேர்க்கப்படவில்லை.

குவின்டன் டி காக்கின் இந்த முடிவு பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், இன்றைய போட்டியின் போது குவின்டன் டி காக் முட்டிப்போட்டு கருப்பின மக்களுக்கான ஆதரவு பரப்புரையில் தன்னையும் இணைத்துக்கொண்டார்.

இதையும் படிங்க: ஆப்கானிஸ்தான் அணியை புகழ்ந்து தள்ளிய பாக். பிரதமர் இம்ரான் கான்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.