ஜூடோவில் இந்தியாவுக்கு 2 பதக்கம்; பளு தூக்கும் போட்டியிலும் பதக்கம்

author img

By

Published : Aug 2, 2022, 9:01 AM IST

ஜூடோவில் இந்தியாவுக்கு 2 பதக்கம்; பளு தூக்குதலில் மற்றொன்று!

காமன்வெல்த் 2022 தொடரின் நான்காம் நாளான நேற்று (ஆக.1), இந்தியா சார்பில் மகளிர் ஜூடோவில் சுஷிலா தேவி வெள்ளியும், ஆடவர் ஜூடோவில் விஜய் குமார் யாதவ் வெண்கலமும் பெற்று அசத்தினர். மேலும், மகளிர் பளு தூக்குதலில் ஹர்ஜிந்தர் கௌர் வெண்கலம் வென்றுள்ளார்.

பர்மிங்ஹாம்: 22ஆவது காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்று வருகிறது. 72 நாடுகள் பங்கேற்றுள்ள இத்தொடரில், இந்தியாவிலிருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 215 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர்.

ஜூடோ, பளு தூக்குதல், லான் பால், பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், ஹாக்கி என பல்வேறு போட்டிகளில் இந்தியா சிறப்பாக விளையாடியுள்ளது. தொடரின் நான்காவது தினமான நேற்று (ஆக. 1) மட்டும் 1 வெள்ளி, 2 வெண்கலம் என 3 பதக்கங்களை பெற்றுள்ளது. மேலும், பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், லான் பால் ஆகியவற்றில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி பதக்கங்களை உறுதிசெய்துள்ளது.

ஆடவர் ஜூடோ: இதில், ஆடவர் மற்றும் மகளிர் ஜூடோ போட்டிகள் நேற்று (ஆக. 1) நடைபெற்றது. ஜூடோ ஆடவர் 60 கிலோ எடைப்பிரிவின் வெண்கலத்திற்கான போட்டியில் இந்திய வீரர் விஜய் குமார் யாதவ், சைப்ரஸ் நாட்டின் பெட்ரோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ் உடன் மோதினார். அவர் பெட்ரோஸை வீழ்த்தி வெண்கலம் வென்று அசத்தினார். ஜூடோ ஆடவர் 66 கிலோ எடைப்பிரிவின் வெண்கலத்திற்கான போட்டியில் இந்தியா சார்பாக விளைாயடிய ஜஸ்லீன் சிங் சைனி தோல்வியடைந்து பதக்கத்தை தவறவிட்டார்.

மகளிர் ஜூடோ: தொடர்ந்து, ஜூடோ மகளிர் 48 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை சுஷிலா தேவி, தென்னாப்பிரிக்காவின் மைக்கேலா வைட்பூய் உடன் மோதினார். இதில், சுஷிலா தோல்வியடைந்து வெள்ளி பதக்கம் வென்றார். ஜூடோ மகளிர் 57 கிலோ எடைப்பிரிவின் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில், இந்திய வீராங்கனை சுசிகா தாரியல் தோல்வி அடைந்தார்.

பளு தூக்குதல்: இதையடுத்து, பளு தூக்குதல் மகளிர் 71 கிலோ எடைப்பிரிவு போட்டியில் இந்திய வீராங்கனை ஹர்ஜிந்தர் கௌர் மொத்தம் 212 கிலோ பளுவை தூக்கி (ஸ்னாட்ச் - 93 கிலோ + கிளீன் & ஜெர்க் - 119 கிலோ) வெண்கலப் பதக்கத்தை பெற்றார். முன்னதாக, பளு தூக்குதல் ஆடவர் 81 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் அஜய் சிங் 4ஆம் இடத்தைப்பிடித்து பதக்க வாய்ப்பைத் தவறவிட்டார்.

டேபிள் டென்னிஸ்: டேபிள் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவின் அரையிறுதிப்போட்டியில், இந்தியாவின் சத்தியன் - ஹர்மித் தேசாய் ஜோடி, நைஜிரிய ஜோடியை 3-0 செட் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதன்மூலம், ஒரு பதக்கம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இறுதிப்போட்டியில், இந்திய அணி, சிங்கப்பூரை சந்திக்கிறது.

பேட்மிண்டன் & ஹாக்கி: பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் பிரிவின் அரையிறுதிப் போட்டியில், இந்திய அணி 3-0 கணக்கில் சிங்கப்பூரை வீழ்த்தியது. பதக்கத்தை உறுதிசெய்த இந்திய அணி இறுதிப்போட்டியில் மலேசியாவை சந்திக்கிறது. ஆடவர் ஹாக்கி போட்டியில் 'பி' பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா - இங்கிலாந்து அணிகள் நேற்று மோதின. இப்போட்டி, 4-4 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

லான் பால்: தொடர்ந்து, லான் பால் விளையாட்டின் அரையிறுதியில், நியூசிலாந்து அணியை வீழ்த்தி, இந்தியாவின் மகளிர் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. மேலும், இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றதால், இந்தியாவுக்கு ஒரு பதக்கம் உறுதியாகியுள்ளது.

காமன்வெல்த் வரலாற்றில், லான் பால் விளையாட்டில் இந்தியா பெறும் முதல் பதக்கம் இதுவாகும். லான் பால் விளையாட்டின் இறுதிப்போட்டி இன்று (ஆக. 2) நடைபெறுகிறது.

ஸ்குவாஷ்: ஸ்குவாஷ் ஆடவர் ஒற்றையர் காலிறுதிப்போட்டியில் இந்தியாவின் சௌரப் கோஷல், ஸ்காட்லாந்து வீரர் கிரேக் லோபனை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். ஸ்குவாஷ் மகளிர் ஒற்றையர் காலிறுதியில், கனடாவின் ஹோலி நாட்டனிடம், இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா தோல்வியடைந்தார்.

காம்ன்வெல்த் தொடரின் நான்காம் நாள் முடிவில், இந்தியா 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என 9 பதக்கங்களை பெற்று பதக்கப்பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. 31 தங்கப் பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், தொடரை நடத்தும் இங்கிலாந்து 21 தங்கப் பதக்கங்களுடன் 2ஆம் இடத்திலும், நியூசிலாந்து 13 தங்கப் பதக்கங்களுடன் 3ஆம் இடத்திலும் உள்ளன.

இதையும் படிங்க: IND vs WI: மந்தமாக ஆடிய இந்தியா - கடைசி ஓவரில் மே.இ. தீவுகள் வெற்றி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.