'இளைஞர்களின் தீராத வேட்கைதான் தயான் சந்திற்கான சிறந்த நினைவஞ்சலி' - மோடி

author img

By

Published : Aug 29, 2021, 5:25 PM IST

Updated : Aug 29, 2021, 7:04 PM IST

மேஜர் தயான் சந்த்

இளைஞர்கள் தீராத வேட்கையோடு விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுப்பதுதான் மேஜர் தயான் சந்த் அவர்களுக்கு நாம் அளிக்கும் சிறந்த நினைவஞ்சலியாக இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லி: இந்திய ஹாக்கி விளையாட்டின் பிதாமகனான தயான் சந்தின் 116ஆவது பிறந்தநாள் இன்று (ஆக. 29) கொண்டாட்டப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும், அவரது பிறந்தநாள் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி, மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுடன் உரையாற்றுவார். இந்நிலையில், இன்று (ஆக. 29) நடைபெற்ற 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் மேஜர் தயான் சந்த் பிறந்த தினத்தைப் பற்றி பிரதமர் மோடி உரையாற்றினார்.

’தயான் சந்த் மகிழ்ந்திருப்பார்’

அப்போது பேசிய அவர், "நான்கு தசாப்தங்களுக்கு (40 ஆண்டுகளுக்கு) பிறகு ஒலிம்பிக் தொடரில் இந்திய ஹாக்கி அணி பதக்கம் வென்றுள்ளது. இந்தத் தருணத்தில் மறைந்த மேஜர் தயான் சந்த் இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பார். இதுபோன்று விளையாட்டுகளில் நாம் தீராத வேட்கையோடு செயல்படுவதுதான் அவருக்கு நாம் அளிக்கும் சிறப்பான நினைவஞ்சலியாக இருக்கும்.

இளைஞர்களிடம் காணப்படும் இந்த ஆர்வத்தையும் வேட்கையையும் நாம் வீணடிக்காமல், கிராமங்கள், நகரங்கள் என நாட்டின் மூலை முடுக்கெல்லாம் உள்ள விளையாட்டுக் கூடங்கள் நிறைந்திருக்கும் அளவுக்கு நாம் தயாராக வேண்டும். தொடர்ந்து, இதுபோன்று பல போட்டிகளில் கலந்துகொள்வதன் மூலம் விளையாட்டுத் துறையில் நாம் பல உயரங்களை அடையலாம்" எனக் கூறியுள்ளார்.

விருதின் பெயர் மாற்றம்

முன்னதாக, ஆகஸ்ட் 5ஆம் தேதி இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வெண்கலம் வென்ற தினத்தில், 'ராஜிவ் காந்தி கேல் ரத்னா' விருதின் பெயரை 'தயான் சந்த் கேல் ரத்னா' எனப் பெயர் மாற்றி ஒன்றிய அரசு அறிவித்தது.

1928, 1932, 1936ஆம் ஆண்டிகளில் நடைபெற்ற ஒலிம்பிக் ஹாக்கி போட்டிகள் மூன்றிலும் இந்தியா தங்கம் வென்றது. இந்த மூன்று தொடர்களிலும் தயான் சந்த் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஹிட்லர் வியந்த மேஜர் தயான் சந்த்!

Last Updated :Aug 29, 2021, 7:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.