SMAT Champions 2021-22: தமிழ்நாடு அணிக்கு ஸ்டாலின் வாழ்த்து

author img

By

Published : Nov 23, 2021, 11:04 AM IST

SMAT Champions 2021-22, Chief Minister MK Stalin congratulates the winning Tamil Nadu cricket team, தமிழ்நாடு அணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

சையத் முஷ்டாக் அலி டிராபி (SMAT - Syed Mushtaq Ali Trophy) தொடரை தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்ற தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

டெல்லி: உள்ளூர் டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பை (SMAT - Syed Mushtaq Ali Trophy) லீக் போட்டிகள் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றன. இந்தப் போட்டியின் கால் இறுதியில் தமிழ்நாடு அணி கேரளத்தை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

அரையிறுதியில் ஹைதராபாத் அணியைத் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு தமிழ்நாடு அணி முன்னேறியது. நேற்று (நவம்பர் 22) இறுதிப் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் கர்நாடகா - தமிழ்நாடு அணிகள் மோதின.

இரண்டாவது முறை

இப்போட்டியில், டாஸ் வென்ற தமிழ்நாடு கேப்டன் விஜய் சங்கர் பந்துவீச்சைத் தேர்வுசெய்தார். முதலில் பேட்டிங் செய்த கர்நாடகா 6 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை எடுத்தது. தமிழ்நாடு தரப்பில் சாய் கிஷார் 4 ஓவர்களுக்கு 12 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தலாகப் பந்துவீசினார்.

SMAT Champions 2021-22, Chief Minister MK Stalin congratulates the winning Tamil Nadu cricket team, தமிழ்நாடு அணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து
தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து

இதையடுத்து, 154 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய தமிழ்நாடு அணி மிகவும் நிதானமாக விளையாடியதால் கடைசி ஓவருக்கு 16 ரன்களும், கடைசிப் பந்தில் 5 ரன்களும் தேவைப்பட்டன.

இறுதியில், ஷாருக் கான் சிக்சர் அடிக்க, கர்நாடக அணியை நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி வீழ்த்தியது. இதன்மூலம், தமிழ்நாடு அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக சையத் முஷ்டாக் அலி கோப்பையை வென்றுள்ளது.

உயரங்களை அடைய வாழ்த்துகள்

இந்நிலையில், சையத் முஸ்டாக் அலி கோப்பையை வென்ற தமிழ்நாடு அணிக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். மேலும், "தமிழ்நாடு ஷாருக் கான், சாய் கிஷார் உள்ளிட்ட இளம் திறமையாளர்கள் சிறப்பான - துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். எல்லோரும் மேலும் உயரங்களை அடைய வாழ்த்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு அணி இதற்கு முன்னர், தினேஷ் கார்த்திக் தலைமையில் 2006-07, 2020-21 இரண்டு தொடர்களிலும் கோப்பை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சையத் முஷ்டாக் அலி கோப்பை: கர்நாடகத்தை பழிதீர்த்து தமிழ்நாடு சாம்பியன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.