MI vs SRH: கேமரூன் க்ரீன் ருத்ர தாண்டவம்: மும்பை அணி அபார வெற்றி!

author img

By

Published : May 21, 2023, 8:57 PM IST

Mumbai won

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், கேமரூன் க்ரீனின் அதிரடி சதத்தால் மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மும்பை: 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 69வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி சன்ரைசர்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக விவ்ராந்த் சர்மா, மயங்க் அகர்வால் ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசினர்.

இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் மும்பை பந்து வீச்சாளர்கள் திணறினர். விவ்ராந்த் சர்மா 69 ரன்கள் (9 பவுண்டரி, 2 சிக்ஸர்) எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 140 ரன்களை சேர்த்தது. கிளாசன் 18, பிலிப்ஸ் 1 ரன்னில் ஆட்டமிழந்தனர். மறுமுனையில் அதிரடியை தொடர்ந்த மயங்க் அகர்வால் 83 ரன்களில் (8 பவுண்டரி, 4 சிக்ஸர்கள்) ஆட்டமிழந்தார்.

ஹேரி ப்ரூக் டக் அவுட்டாகி ஏமாற்றினார். 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்தது. கேப்டன் மார்க்ரம் 13, சன்வீர் சிங் 4 ரன்களுடன், கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சைப் பொறுத்தவரை மத்வால் 4 விக்கெட்களும், ஜோர்டான் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து 201 ரன்கள் வெற்றி இலக்குடன் மும்பை அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் 14 ரன்களில் வெளியேறினார். இதைத்தொடர்ந்து கேப்டன் ரோஹித் சர்மாவுடன், கேமரூன் க்ரீன் ஜோடி சேர்ந்தார். ரோஹித் சர்மா நிதானமாக விளையாடிய நிலையில், கேமரூன் க்ரீன் அதிரடியாக விளையாடினார். சன்ரைசர்ஸ் அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். இதற்கிடையே அரைசதம் விளாசிய ரோஹித் சர்மா, 56 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் கேமரூன் க்ரீனுக்கு, சூர்யகுமார் யாதவ் கம்பெனி கொடுக்க இருவரும் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றனர். அத்துடன் 47 பந்துகளை சந்தித்த க்ரீன் சதம் விளாசி (8 பவுண்டரி, 8 சிக்ஸர்கள்) அசத்தினார். இதன் மூலம் மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்துக்கு (ரன் ரேட் -0.044) முன்னேறியது. ஆட்டநாயகன் விருதை, மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் கேமரூன் க்ரீன் தட்டிச்சென்றார். சன்ரைசர்ஸ் அணியில் புவனேஸ்வர் குமார், மயங்க் தாகர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

ராஜஸ்தான் வெளியேற்றம்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றதால், புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் இருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ளது.

இதையும் படிங்க: RCB vs GT: குஜராத் டைட்டன்ஸ் டாஸ் வென்று பந்துவீச்சு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.