IPL 2021: ராஜஸ்தானை வீழ்த்தி டாப் டக்கரான டெல்லி!

author img

By

Published : Sep 25, 2021, 9:00 PM IST

DC vs RR

ஐபிஎல் தொடரின் 36ஆவது லீக் போட்டியில், ராஜஸ்தான் அணியை 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, டெல்லி அணி மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

அபுதாபி: கரோனா தொற்று காரணமாக தடைப்பட்ட ஐபிஎல் 2021 சீசனின் இரண்டாம் கட்டப்போட்டிகள் கடந்த 19ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இத்தொடரில் இன்று (செப். 25) நடைபெற்ற 36ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

டெல்லி 154

இதன்படி, டெல்லி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஸ்ரேயஸ் ஐயர் 43, ரிஷப் பந்த் 24 ரன்கள் எடுத்தனர். ராஜஸ்தான் அணி தரப்பில் முஸ்தபிஷூர், சக்காரியா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஓரளவுக்கு எளிதான இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணிக்கு, தொடக்கமோ பேரதிர்ச்சியாக இருந்தது. தொடக்க வீரர்கள் லியம் லிவிங்ஸ்டன் 1 (3) ரன்னிலும், ஜெய்ஸ்வால் 5 (4) ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

சாம்சன் அரைசதம்

சற்று நேரத்திலேயே, டேவிட் மில்லரும் 7 (10) ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து வந்த மஹிபால் லோம்ரோர் 19 (24) ரன்களிலும், ரியான் பராக் 2 (7) ரன்களிலும் அவுட்டானார்கள். மறுமுனையில், கேப்டன் சஞ்சு சாம்சன் விக்கெட்டை இழக்காமல் நிலைத்து நின்று ஆடினார். சஞ்சு சாம்சன் தான் சந்தித்த 40ஆவது பந்தில் அரை சதத்தை பதிவு செய்தார்.

கடைசி ஐந்து ஓவர்களில் 73 ரன்கள் தேவைப்பட்டது. இருப்பினும், சாம்சனுக்கு துணையாக யாரும் நின்று ஆடாததால் ஸ்கோர் பெரிய அளவில் உயரவில்லை.

சற்றுநேரம் களத்தில் இருந்த திவாத்தியாவும் 9 (15) ரன்களில் வெளியேறினார். ரபாடா, நோர்க்கியா, ஆவேஷ் கான் ஆகியோரின் கட்டுக்கோப்பான கடைசிக்கட்ட ஓவர்களினால், ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முழுவதுமாக பேட்டிங் செய்தும் இலக்கை எட்ட முடியவில்லை.

ராஜஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம், ராஜஸ்தான் அணியை 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி மீண்டும் புள்ளிபட்டியில் முதலிடத்திற்கு முன்னேறியது.

ஆட்டநாயகன் ஸ்ரேயஸ்

டெல்லி அணி பந்துவீச்சு தரப்பில், நோர்க்கியா 4 ஓவர்களுக்கு 18 ரன்களை மட்டும் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ராபாடா, அக்சர் படேல், ஆவேஷ் கான், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

ராஜஸ்தான் அணியில் சஞ்சு சாம்சன் 70 (53) ரன்களுடனும், ஷம்ஸி 3 (2) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். டெல்லி அணிக்காக 43 ரன்கள் குவித்த ஸ்ரேயஸ் ஐயர் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.ட

இதையும் படிங்க: IPL 2021: ஹைதராபாத் பந்துவீச்சு; பஞ்சாப் அணியில் மூன்று மாற்றங்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.