கிங் கோலியின் புதிய சாதனை; நிற்காது இந்த ரன் மெஷின்

author img

By

Published : Sep 2, 2021, 6:47 PM IST

virat kholi

இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், விராட் கோலி, ஆண்டர்சன் பந்துவீச்சில் பவுண்டரி அடித்து, புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார்.

லண்டன் (இங்கிலாந்து): இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஐந்துப் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது.

முதலாவது போட்டி வெற்றி, தோல்வியின்றி சமநிலையில் முடிந்த நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும், மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றிபெற்றது. இதனால், 1-1 என்ற கணக்கில் இத்தொடர் சமநிலைப் பெற்றுள்ளது.

திணறும் இந்தியா

இந்நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டி லண்டன் நகரின் ஓவல் மைதானத்தில் (செப். 2) தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது.

அதன்படி, களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கே.எல். ராகுல், ரோஹித் சர்மா ஆகியோர் களமிறங்கினர்.

ராகுல் 17 ரன்களுக்கும், ரோஹித் சர்மா 11 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த புஜாரா 31 பந்துகளைச் சந்தித்து 4 ரன்களில் வெளியேறினார்.

முடிந்தது முதல் செஷன்

இதனால், மதிய உணவு இடைவேளைக்கு முன்னர்வரை, இந்திய அணி 25 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 54 ரன்களை எடுத்துள்ளது.

இந்தியா சார்பில் விராட் கோலி 18 ரன்களுடனும், ஜடேஜா 2 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். கிறிஸ் வோக்ஸ், ராபின்சன், ஆண்டர்சன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியுள்ளனர்.

ஆண்டர்சன் பந்தில் சாதனை

இப்போட்டியில், விராட் கோலி சச்சினின் சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். அதாவது, சர்வதேச அரங்கில் குறைந்த இன்னிங்ஸில் 23,000 ரன்களைக் கடந்தவர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார்.

கோலி இப்போட்டியில், ஒரு ரன் எடுத்தால் இந்த மைல்கல்லை எட்டுவார் என்றிருந்த நிலையில், ஆண்டர்சன் பந்தில் பவுண்டரி அடித்து இந்த மைல்கல்லை அடைந்துள்ளார்.

கோலி 490 இன்னிங்ஸில் இந்தச் சாதனையை செய்து, இந்த மைல்கல் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இதற்குமுன் சச்சின் 522 இன்னிங்ஸிலும், ரிக்கி பாண்டிங் 544 இன்னிங்ஸிலும் 23 ஆயிரம் ரன்களை கடந்திருந்தனர்.

விராட் கோலி, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சதம் அடிக்கவில்லை என விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில், விளையாடும் ஒவ்வொரு தொடரிலும் ஒரு புதிய சாதனையைப் படைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கோலியை முந்தினார் ரோஹித்; மீண்டு(ம்) வருவாரா ஃபேப் ஃபோரில்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.