ETV Bharat / sports

VK 100: 'இலங்கைக்கு தண்ணி காட்டிய இந்தியா'; தொடரும் விராட்டின் துரதிர்ஷ்டம்

author img

By

Published : Mar 4, 2022, 7:28 PM IST

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 357 ரன்களை எடுத்துள்ளது, இந்தியா. தனது 100ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் விராட் கோலி, முதல் இன்னிங்ஸில் 45 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

VK 100
VK 100

மொஹாலி: இலங்கை அணி இந்தியாவுக்குத் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றிய நிலையில், டெஸ்ட் தொடர் இன்று (மார்ச் 4) தொடங்கியுள்ளது.

மொஹாலி ஐ.எஸ் பிந்தரா மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் இந்திய அணி, டாஸ் வென்று பேட்டிங் செய்து வருகிறது. இப்போட்டி, விராட் கோலிக்கு 100ஆவது டெஸ்ட் போட்டி என்பதால், அதிக எதிர்பார்ப்பு எழுந்திருந்தது.

ஆறுதல் தொடக்கம்

இந்திய அணிக்கு ரோஹித் சர்மா, மயாங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்த இணை ஆரம்பத்தில் இருந்தே சீராக ரன்களைச்சேர்த்து வெறும் 59 பந்துகளில் 52 ரன்களைக் குவித்தது.

அப்போது பந்துவீசி வந்த லஹிரு குமாரா, ரோஹித் சர்மாவுக்கு பெரும்பாலும் ஷார்ட் - லெந்த் பந்துகளையே வீசினார். இருப்பினும், ரோஹித் தனது கிளாஸிக்கான புல்-ஷாட்டையும், ஆன்-டிரைவ் ஷாட்டையும் அடித்து பவுண்டரிகளைக் குவித்தார்.

செட்டிங்கில் சிக்கிய ரோஹித்

10ஆவது ஓவரின் ஐந்தாவது பந்தை இடுப்புக்கு மேல் சற்று பவுன்சராக குமாரா வீச, ரோஹித் பைன்-லெக் திசையில் தூக்கி அடித்தார். அதை ஆடாமல் அசையாமல் அற்புதமாக சுரங்கா லக்மல் கேட்ச் பிடிக்க, கேப்டன் ரோஹித் 29 ரன்களில் நடையைக்கட்டினார். மூன்றாவது வீரராக, ஹனுமா விஹாரி களத்திற்கு வந்தார்.

மறுமுனையில், நிதானமாக ஆடிவந்த மயாங்க் அகர்வால் 33 ரன்களில், லசித் எம்புல்தெனியா பந்துவீச்சில் எல்.பி.டயிள்யூ முறையில் வெளியேறினார். இதையடுத்து, தனது 100ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸை ஆட விராட் கோலி களம் புகுந்தார்.

விராட் 8000

விராட் கோலி - மயாங்க் அகர்வால் ஜோடி இலங்கை பந்துவீச்சினை லாவகமாக எதிர்கொண்டனர். மதிய உணவு இடைவேளை முன்னர், இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்களை எடுத்தது. இடைவேளைக்குப் பின்னரும், இந்த இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. விஹாரி அரைசதம் கடந்த நிலையில், விராட் கோலி நிதானம் காட்டி வந்தார்.

விராட் கோலி 32 ரன்கள் எடுத்தபோது, டெஸ்ட் அரங்கில் தனது 8000 ரன்களைக் கடந்தார். இதன்மூலம், 8000 ரன்களைக் கடக்கும் ஆறாவது இந்தியர் என்ற பெருமையை கோலி பெற்றார்.

மீண்டும் மிஸ்ஸானது 71*

அப்போது 44ஆவது ஓவரை எம்புல்தெனியா வீச வந்தார். சமீப காலமாக சுழற்பந்துவீச்சில் விராட் கோலி தனது விக்கெட்டை இழந்துவருவதால் தடுப்பாட்டத்தைத் தான் மேற்கொண்டு வந்தார். இருப்பினும், அந்த ஓவரின் மூன்றாவது பந்து சற்று திரும்பியது. இதனால், விராட் கோலி பந்தை தவறாக கணிக்க, பந்து ஸ்டெம்பை பதம்பார்த்தது.

45 ரன்களில் அவுட்டான கோலி, மிகுந்த அதிர்ச்சியுடனும் ஏமாற்றத்துடனும் பெவிலியன் திரும்பினார். அவர் வெளியேறிய சில ஓவர்களிலேயே, விஹாரி 58 ரன்களில் அவுட்டானார். இதனால், இந்திய அணி தேநீர் இடைவெளி வரை, 4 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களை எடுத்தது.

மிரட்டிய பந்த்

இதன்பின் மூன்றாவது செஷனை ரிஷப் பந்த், ஸ்ரேயஸ் ஐயர் ஜோடி ஆரம்பித்தது. 27 ரன்கள் எடுத்த ஸ்ரேயஸ் டி செல்வா பந்துவீச்சில் ஆட்டமிழக்க ஜடேஜா கிரீஸுக்குள் வந்தார்.

ரிஷப் பந்த், 73 பந்துகளில் அரைசதம் கடந்தார். அரைசதம் அடித்த வேகத்திலேயே எம்புல்தெனியாவின் 76ஆவது ஓவரில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட மொத்தம் 22 ரன்களைக் குவித்தார். அதற்கடுத்து வீசிய தனஞ்செயா ஓவரிலும் தலா ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்து ரிஷப் அதிரடி காட்டினார்.

இதனால், எளிதாக சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரிஷப் பந்த் 96 ரன்களில் லக்மலிடம் விக்கெட்டைப் பறிகொடுத்தார். தொடர்ந்து, ஜடேஜாவுடன், அஸ்வின் இணைந்தார். இந்நிலையில், முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 357 ரன்களை இந்திய அணி எடுத்துள்ளது.

ஜடேஜா 45 ரன்களுடனும், அஸ்வின் 10 ரன்களுடனும் ஆட்டமிழக்கமால் உள்ளனர். எம்புல்தெனியா 2 விக்கெட்டுகளையும், தனஞ்செயா, லக்மல், விஷ்வ பெர்ணான்டோ, லஹிரு குமாரா தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

முதல் நாள் ஆட்டம்

முதலாவது செஷன்: 26 ஓவர்கள் - 109/2

இரண்டாவது செஷன்: 27 ஓவர்கள் - 90/2

மூன்றாவது செஷன்: 32 ஓவர்கள் - 158/2

இதையும் படிங்க: IND vs SL: கோலிக்கு 100ஆவது, ரோஹித்துக்கு முதலாவது டெஸ்ட்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.