பென் ஸ்டோக்ஸால் வரலாற்று வெற்றியைப் பெற்ற இங்கிலாந்து!

author img

By

Published : Aug 26, 2019, 7:13 AM IST

லீட்ஸ்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி பென் ஸ்டோக்ஸின் வரலாற்று சிறப்புமிக்க அபாரமான ஆட்டத்தால் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது.

வரலாற்று புகழ்மிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றிருந்த நிலையில், இரண்டாவது போட்டி டிராவில் முடிந்தது. இதனால் மூன்றாவது போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடயே பன்மடங்கு உயர்ந்தது.

இதையடுத்து, 22ஆம் தேதி நடைபெற்ற மூன்றாவது போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட், பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 179 ரன்களுக்கும், இங்கிலாந்து அணி 67 ரன்களுக்கும் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 246 ரன்கள் எடுத்ததால் இங்கிலாந்து அணி வெற்றிபெற 359 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 156 ரன்களுக்கு மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்தது.

பென் ஸ்டோக்ஸ்
விக்கெட் வீழ்த்திய கொண்டாட்டத்தில் ஆஸ்திரேலியா

பின்னர் நேற்று தொடங்கிய நான்காவது நாள் ஆட்டத்தை ரூட் - ஸ்டோக்ஸ் ஜோடி தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே கேப்டன் ரூட் 77 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேற, தொடர்ந்து வந்த பெயர்ஸ்டோவ் சிறப்பாக ஆடினார்.

பெயர்ஸ்டோவ் பவுண்டரிகளை அடிக்கத் தொடங்கியபோது, ஸ்டோக்ஸ் மறுமுனையில் சிங்கிள்களைத் தட்டி ரன்களை எடுக்கத் தொடங்க, இங்கிலாந்து அணியின் ஸ்கோர் உயரத் தொடங்கியது. இந்தக் கூட்டணி தொடர்ந்து அனைத்து ஓவர்களிலும் ஒரு பவுண்டரியை விளாச, ஆஸ்திரேலிய அணி வீரர்களின் நம்பிக்கை சிறிது சிறிதாக தளர்ந்தது.

ஆனால், அந்த நம்பிக்கையை மீட்டெடுக்கும் விதமாக ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஹெசல்வுட் பெயர்ஸ்டோவ் விக்கெட்டை கைப்பற்றினார். அதையடுத்து இங்கிலாந்து அணியின் கடைசி நம்பிக்கையான பட்லர் களம் புக, ஆட்டத்தில் பதற்றம் பற்றிக்கொண்டு அதன் எல்லைக்கே சென்றது.

ஆனால், ஸ்டோக்ஸின் கவனக்குறைவால் பட்லர் அனாயசமாக ஒரு ரன்னில் ரன் அவுட்டாகி வெளியேறினார். தொடர்ந்து வந்த கிறிஸ் வோக்ஸ் ஒரு ரன்னிலும் வெளியேற ஆஸ்திரேலியா ரசிகர்கள் வெற்றி உறுதியாகிவிட்டது என கொண்டாடத் தொடங்கினர்.

பென் ஸ்டோக்ஸ்
பெயர்ஸ்டோவ்

ஆனால் உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில் நாயகன் ஸ்டோக்ஸ் களத்திலிருப்பது ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு சிறிய அச்சத்தையும் கொடுத்தது. பின்னர் ஆர்ச்சர் 15 ரன்களில் ஆட்டமிழக்க, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ப்ராட் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

கிட்டதட்ட இங்கிலாந்து அணி ஒன்பது விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் எல்லையில் இருந்தது. சரித்திர புகழ் வாய்ந்த ஆஷஸ் தொடர் கைவிட்டு செல்லப்போகிறது என இங்கிலாந்து ரசிகர்களின் முகம் வாடத் தொடங்கியது. ஆனால் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு தேவையோ 73 ரன்கள். களத்திலிருப்பது ஸ்டோக்ஸ் என்ற பேட்ஸ்மேன் மட்டுமே. அவருடன் நைட் வாட்ச்மேன் என அழைக்கப்படும் லீச் என்ற பந்துவீச்சாளர்.

ஆர்ச்சர் கொடுத்த கேட்ச்சை அபாரமாக பிடித்த ஆஸ்திரேலியாவின் ஹெட்
ஆர்ச்சர் கொடுத்த கேட்ச்சை அபாரமாகப் பிடித்த ஆஸ்திரேலியாவின் ஹெட்

வாழ்வா? சாவா? நிலை தான் இங்கிலாந்து அணிக்கு ஏற்பட்டது. ஆட்டத்தை சரியாக புரிந்துகொண்ட ஸ்டோக்ஸ் சிங்கிள்களை தவிர்த்துவிட்டு பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசத் தொடங்கினார். அதிலும் லயன் வீசிய ஓவர்களில் ஆக்ரோஷம் கூடியது. அதனையடுத்து ஆஸ்திரேலிய வீரர் ஹெசல்வுட் கைகளில் பந்து ஒப்படைக்கப்பட்டது.

பென் ஸ்டோக்ஸ்
பென் ஸ்டோக்ஸ்

ஹெசல்வுட் இந்த போட்டியில் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தி பத்தாவது விக்கெட்டுக்காக பந்தை வீசுகிறார். ஆனால் களத்தில் இருந்த ஸ்டோக்ஸ், எதனையும் கண்டுகொள்ளாமல் முதல் பந்தில் பவுண்டரி விளாசி டெஸ்ட் போட்டியில் தனது 8ஆவது சதத்தை ஸ்டோக்ஸ் பூர்த்தி செய்தார்.

வரலாற்று இன்னிங்ஸை ஆடிய பென் ஸ்டோக்ஸ்
வரலாற்று இன்னிங்ஸை ஆடிய பென் ஸ்டோக்ஸ்

அதையடுத்து அந்த ஓவரில் தொடர்ந்து இரு சிக்ஸர்களை விளாச, இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 18 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அதனையடுத்து, ஸ்டோக்ஸ் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஆஸ்திரேலிய அணி வீரர் தவறவிட, அதைப் பயன்படுத்தி இரு பவுண்டரிகளை ஸ்டோக்ஸ் விளாசினார். தொடர்ந்து கிடைத்த ரன் அவுட் வாய்ப்பையும் ஆஸ்திரேலிய வீரர் லயன் தவறவிட்டார். இறுதியாக கம்மின்ஸ் வீசிய 125ஆவது ஓவரின் நான்காவது பந்தில் கவர் திசையில் பவுண்டரி விளாசி இங்கிலாந்து அணிக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை ஸ்டோக்ஸ் தேடிக் கொடுத்தார். மேலும் 359 ரன்கள் என்ற இலக்கை முதன்முதலாக விரட்டி இங்கிலாந்து சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஆஷஸ் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் இருக்கிறது.

Intro:Body:

Ben Stokes century seals historic one-wicket win to keep Ashes alive


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.