சிரஞ்சீவி என்னைத் தேர்தலில் இருந்து விலகச் சென்னார் - நடிகர் விஷ்ணு மஞ்சு

author img

By

Published : Oct 12, 2021, 6:19 PM IST

maa

தெலுங்கு திரைப்பட நடிகர்கள் சங்கத் தேர்தலில் இருந்து தான் விலகுமாறு சிரஞ்சீவி கூறியதாக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் விஷ்ணு மஞ்சு தெரிவித்துள்ளார்.

தெலுங்கு திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்வுசெய்வதற்கான தேர்தல் அக்டோபர் 10ஆம் தேதி நடைபெற்றது.

இதில் தலைவர் பதவிக்கு நடிகர் பிரகாஷ் ராஜூம் நடிகர் விஷ்ணு மஞ்சுவும் போட்டியிட்டனர். இந்தப் போட்டியில் நடிகர் விஷ்ணு மஞ்சு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். விஷ்ணு மஞ்சு, நடிகர் மோகன் பாபுவின் மகன் ஆவார்.

தெலுங்கு நடிகர் சங்கத்தில் இருந்து விலகிய பிரகாஷ் ராஜ்

இந்தத் தேர்தலில் தோல்வியடைந்ததையடுத்து பிரகாஷ் ராஜ் தெலுங்குத் திரைப்பட நடிகர்கள் சங்கமான 'மா'வில் இருந்து விலகினார். இத்தனை ஆண்டுகளாக சாதாரண முறையில் நடைபெற்று வந்த இந்தத் தேர்தலை, இந்த முறை அரசியல் பொதுத் தேர்தல் போன்று ஊடகங்களும் சமூக வலைதளங்களும் கவனித்து வந்தன.

தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டபின் செய்தியாளர்களைச் சந்தித்த விஷ்ணு மஞ்சு கூறியதாவது, "அனைவரும் ஏகமனதாக பிரகாஷ்ராஜை தேர்ந்தெடுப்போம் என்று சொல்லி என்னைத் தேர்தலில் இருந்து விலகுமாறு, நடிகர் சிரஞ்சீவி கூறினார். ஆனால், அதில் எனக்கும் என் அப்பாவிற்கும் உடன்பாடு இல்லை. எனவே, நான் பின் வாங்கவில்லை.

'பிரகாஷ் ராஜின் எண்ணம் தவறு'

பிரகாஷ்ராஜ் தனது தோல்விக்குக் காரணம், தன்னை எல்லோரும் வெளியிலிருந்து வந்த அந்நியராகப் பார்ப்பதே என்று கூறினார். ஆனால், அவருக்கு 274 வாக்குகள் கிடைத்துள்ளன. இந்த வாக்குகளில் பெரும்பாலானோர் தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர்களே. எனவே, பிரகாஷ்ராஜ் அப்படி நினைப்பது தவறு.

சிரஞ்சீவியின் குடும்பத்தினர் பிரகாஷ்ராஜுக்கு தான் ஆதரவு தந்தனர். அதனால், ராம் சரண் கண்டிப்பாக அவருக்குத்தான் வாக்களித்திருப்பார். தேர்தல் பரப்புரையில் பேசியதெல்லாம் கடந்த காலம். அது முடிந்துவிட்டது.

எனக்கு பிரகாஷ் ராஜைப் பிடிக்கும். இனி, சங்கத்தின் தேர்தல்களில் தெலுங்கை தாய்மொழியாக கொள்ளாதவர்கள் போட்டியிட முடியாதவாறு, புதிய விதிகளை நாங்கள் கொண்டுவரப்போவதாக எந்த வாக்குறுதியும் தரவில்லை.

மோகன்பாபுவின் மகனுக்கு வாக்களிப்போம் என்று எல்லோரும் நினைத்ததால்தான் நான் வெற்றி பெற்றேன். முன்னாள் சங்கத் தலைவர் நரேஷின் ஆதரவுக்கு நன்றி" என விஷ்ணு மஞ்சு தெரிவித்தார்.

இவரின் இந்தச் சந்திப்பிற்குப்பின், தெலுங்கு திரையுலகில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க:நடிகர் சங்கத் தேர்தல்: பிரகாஷ்ராஜை தோற்கடித்த நடிகர் விஷ்ணு மஞ்சு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.