ராக்கி - கோலிவுட் கேங்ஸ்டர் சினிமாக்களின் புதியதோர் அலை

author img

By

Published : Dec 24, 2021, 7:14 AM IST

ராக்கி - கோலிவுட் கேங்ஸ்டர் சினிமாக்களின் புதியதோர் அலை

கோலிவுட் சினிமா, பல்வேறு பரிணாமங்களைக் கடந்துவந்துள்ளது. பல காலகட்டத்தில் புதிய படைப்பாளிகளின் வருகை, கால மாற்றம், தொழில்நுட்ப மாற்றங்கள் ஆகியவற்றைப் பொருத்து தமிழ் சினிமாவின் ஜானர்களும், படைப்புகளும் பல்வேறு புதிய பரிணாமங்களைக் கண்டது. அந்த வகையில் ’கேங்ஸ்டர் சினிமா’ என்ற ஜானரும் பல்வேறு பரிணாமங்களைக் கடந்துவந்துள்ளது.

1960, 1970 காலகட்டங்களில் தமிழ் சினிமாக்களின் கதைக்களங்கள் உறவுகளின் சிக்கல்களை மையப்படுத்தியோ அல்லது வழக்கமான கமர்ஷியல் சண்டைப் படங்களாகவோ அல்லது பக்திக் கதைக்களமாகவோதான் இருக்கும்.

அந்தக் காலக்கட்டங்களில், படங்களில் காட்டப்பட்ட கேங்ஸ்டர் கதாபாத்திரமோ அல்லது ரவுடிக் கதாபாத்திரமோ பெரும்பாலும் உண்மைக்கு முரணாகவோ அல்லது மிகுந்த செயற்கைத் தன்மையுடனே காண்பிக்கப்பட்டிருக்கும்.

கோலிவுட்டின் முதல் கேங்ஸ்டர் சினிமா அலை

அதன்பின் 1980-கள் வரை வந்த கேங்ஸ்டர் திரைப்படங்கள், பெரும்பாலும் ஹாலிவுட் காட்சிகளைத் தழுவியேதான் இருக்கும். நிஜ கேங்ஸ்டர்களைப் பிரதிபலிக்கும் படங்கள் ஏதும் வரவில்லை. 1987இல் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான ’நாயகன்’ திரைப்படம் கோலிவுட் கேங்ஸ்டர் திரைப்படங்களில் ஒரு முதல் அலை என்று சொல்லலாம்.

இத்திரைப்படமும் பிரான்சிஸ் கொப்பல்லா இயக்கத்தில் வெளியான ’காட் ஃபாதர்’ திரைப்படத்தின் தழுவல்தான் என்றாலும் திரை மொழியிலும், கதை சூழல் காண்பிக்கும் முறையிலும் ’நாயகன்’ தனித்தே இருக்கும். நாயகனைத் தொடர்ந்து அதைப் போல பல படங்கள் வெளியாகின.

இத்திரைப்படத்தை இயக்கிய மணிரத்னமே மற்றொரு முக்கிய கேங்ஸ்டர் படமான ’தளபதி’யை 1991ஆம் ஆண்டு வெளியிட்டார். இவ்விரண்டு திரைப்படங்களைத் தொடர்ந்து பல திரைப்படங்கள் இவ்விரண்டு திரைப்படங்களைத் தழுவியே வந்தன. ஆனால் அவை அனைத்தும் கமர்ஷியல் சினிமாக்களாகவே மட்டுமே வந்தன.

புதுப்பேட்டை - ’கோலிவுட்டின் முதல் பின்நவீனத்துவ கேங்ஸ்டர் சினிமா’

தமிழ் சினிமாவில் இனி எந்த கேங்ஸ்டர் திரைக்கதைகளை யோசித்தாலும் இந்தத் திரைப்படத்தைத் தாண்டி சிந்திக்க முடியாது என்றே சொல்லலாம். இனி எடுக்கப் போகும் அனைத்து கேங்ஸ்டர் சினிமாக்களுக்கும் ஆதிமூல டிக்ஸ்னரியாகத் திகழ்வது 2006இல் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ’புதுப்பேட்டை’.

இதுவரை தமிழ் சினிமாக்களில் கட்டமைக்கப்பட்ட நாயகனுக்கான விதிமுறைகளை உடைத்து, இதுவரை தமிழ் சினிமாவில் கையாளப்பட்ட செயற்கையான, தவறான பிரதிபலிப்புகள் கொண்ட கேங்ஸ்டர் கதாபாத்திரங்களை உடைத்து ஒரு நேர்த்தியான கேங்ஸ்டர் திரைப்படமாக வெளியானது.

திரை மொழியிலும், காட்சி அமைப்பிலும், ஒளிப்பதிவிலும் இதுவரைக் காணாதொரு யுக்தியைக் கையாண்டு, இன்றும் பிரம்மிக்கவைக்கிறது. தமிழ் சினிமாவில் முதன்முதலில் ’நியோ நோயர்’ என்னும் ஜானரைக் கையாண்டத் திரைப்படமும் புதுப்பேட்டைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி, தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் இல்லாத பல யுக்திகளையும், திரைக்களத்தையும் கையாண்டதால்தான் இத்திரைப்படத்தை ’பின்நவீனத்துவ கேங்ஸ்டர் சினிமா’ என்கிறோம்.

சுப்ரமணியபுரம் - ’தென் மாவட்ட கேங்ஸ்டர் கலாசாரத்தின் பிரதிபலிப்பு’

பல தமிழ்த் திரைப்படங்களில் ரவுடிகளையோ அல்லது யாராலும் வெல்ல முடியாத நாயகர்களையோ தென் மாவட்டக்காரர்களாகக் காட்டிருப்பார்கள். ஆனால், ஒரு கேங்ஸ்டர் உருவாவதும், பரிணமிப்பதும், அவர்களின் வாழ்க்கை முறையும் இவர்கள் திரையில் காட்டுவதுபோல் அவ்வளவு சாதாரணமாக இருந்துவிடுவதில்லை.

’சுப்ரமணியபுரம்’ 2009ஆம் ஆண்டு சசிகுமார் இயக்கத்தில் வெளியானது. மீண்டும் அவரே நினைத்தாலும் இப்படி ஒரு திரைப்படத்தை எடுக்க முடியாது என்று சொல்லலாம். அப்படி ஒரு யதார்த்தமான திரைக்களம்; ஆனால் மிகுந்த ஜனரஞ்சகம் வாய்ந்த திரைக்கதையாகவும் இது திகழ்கிறது.

இப்படிப்பட்டத் திரைக்கதையை அமைப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. ஒரு ஊரில் உருவாகும் கேங்ஸ்டர்கள், அவர்களின் கலாசாரம், அவர்கள் ஊரின் வாழ்வியல், அவர்களின் உளவியல் என்று கேங்ஸ்டர்களின் பல்வேறுக் கூறுகளை ஆராய்ந்து திரையில் காண்பித்திருப்பார் இயக்குநர்.

அதனால்தான் பாலிவுட் இயக்குநர் ‘அனுராக் காஷ்யப்’பிற்கு ‘கேங்ஸ் ஆஃப் வசிபூர்’ திரைப்படத்தை உருவாக்குவதற்கு சுப்ரமணியபுரமே காரணமாக இருந்திருக்கிறது. இதை அவரே பல இடங்களில் பதிவுசெய்ததை நாம் பார்த்திருப்போம். தென் மாவட்டங்களின் கேங்ஸ்டர் கலாசாரத்தைச் சரியாகக் கையாண்டிருப்பதில், இன்றுவரை சுப்ரமணியபுரம் திரைப்படம் தனியாக மிளிர்கிறது.

ராக்கி - ’தமிழ் சினிமாவின் புதிய அலை’

ஒரு திரைப்படம் வெளியாகும் முன்னரே அதற்கு ஏகோபித்த பட்டங்களையும், பாராட்டுகளையும் தருவது சற்று நியாயமற்றச் செயலாகக் கருதப்படலாம். ஆனால் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கி வெளியாகவுள்ள, ‘ராக்கி’ திரைப்படத்தைப் பொறுத்தவரையில், இப்பட்டங்களுக்கெல்லாம் நிச்சயம் பொருத்தமாகவே இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

இதுவரை வெளிவந்த இத்திரைப்படத்தின் டீசர், ட்ரெய்லர் காட்சிகளே இப்பட்டங்கள் வழங்க சான்றாகவும், உகந்தவையாகவும் திகழ்கின்றன. இப்படி ஒரு நேர்த்தியான ஒளிப்பதிவிலும், திரை மொழியிலும் ஒரு அறிமுக இயக்குநர் செய்திருப்பதே பெரும் வியப்புதான். வன்முறைகளைக் கையாளுவதில் உலகளாவிய இயக்குநர்கள் பலர் பலவிதமாகக் கையாளுவதுண்டு.

அமெரிக்க இயக்குநர் ‘குவண்டின் டாரண்டினோ’ வன்முறையைக் கொண்டாடும் வகையில் திரைப்படத்தில் காட்சிப்படுத்துவார். ஃபிரான்ஸ் இயக்குநர் ’காஸ்பர் நோ’ வன்முறையைக் கையாளும்விதம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உளவியல் அணுகுமுறையாக இருக்கும்.

தமிழ் சினிமாவில் 'ராக்கி' ஒரு விதிவிலக்கு!

ஆஸ்டிரிய இயக்குநரான ‘மைக்கல் ஹானெக்’ எந்த ஆரவாரமிக்க காட்சி அமைப்புகள் இல்லாமல், மிக அழுத்தமான வன்முறைகளைப் போகின்றபோக்கில் கடத்திச் செல்வார். இப்படி, வன்முறைகளைக் கையாளுவதில் பல இயக்குநர்கள் பல பாணிகளைக் கொண்டுள்ளனர்.

நிச்சயமாக இந்த ராக்கி திரைப்படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரனும் புதியதோர் பாணியில் கையாண்டிருப்பார் என்பது இத்திரைப்படத்தின் ட்ரெய்லர்களைப் பார்க்கையில் உறுதியாகிறது. வன்முறை என்பது மிக ஆழமான மனித உணர்வு; அதற்குப் பல்வேறு கோணங்களும், தனித்தனி நியாயங்களும் இருக்கும்.

பெரும்பான்மையான தமிழ் சினிமாவில் அதை முழுதாகக் காட்டிவிடவில்லை என்பதே நிதர்சனம். நிச்சயம், ’ராக்கி’ அதற்கொரு விதிவிலக்காக அமையும். இரண்டாண்டு காலமாக வெளியிடும் தேதி தள்ளிப்போயினும், ’ராக்கி’ திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பும், வரவேற்பும் மக்களிடையே சற்றும் குறையவில்லை.

திரைத் துறையினரிடமும், சினிமா ரசிகர்களிடமும் இத்திரைப்படத்திற்கான மிகுந்த எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன. நிச்சயமாக ’ராக்கி’ கோலிவுட்டின் கேங்ஸ்டர் சினிமாக்களின் புதிய அலையாகத் திகழும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

இதையும் படிங்க:அண்ணாத்த 50ஆவது நாள்: 'பாட்ஷா' டயலாக் பேசிய ரஜினிகாந்த்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.