நெடுமுடி வேணு குறித்து நினைவோடையை பகிர்ந்த மம்முட்டி

author img

By

Published : Oct 13, 2021, 2:28 PM IST

நெடுமுடி வேணு, மம்முட்டி, Mammootty pays tributes to Nedumudi Venu

நடிகர் நெடுமுடி வேணு மறைவிற்கு இரங்கல் தெரிவித்து மம்முட்டி அஞ்சலி குறிப்பொன்றை எழுதியுள்ளார்.

திருவனந்தபுரம்: மலையாள திரைப்பட நடிகர் நெடுமுடி வேணு (73) உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், அவர் கடந்த அக்டோபர் 11ஆம் தேதி காலமானார். அவரது மறைவிற்குத் திரையுலகினர் பலரும் தங்களின் இரங்கலைத் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், கேரள முன்னணி நடிகர் மம்முட்டி, நெடுமுடி வேணு மறைவிற்கு எழுதிய அஞ்சலி குறிப்பில், "1981இல் 'கோமரம்' என்கிற சினிமாவின் படப்பிடிப்பில்தான் நாங்கள் அறிமுகமானோம். எங்கள் நட்பு அங்கேதான் தொடங்கியது.

தொடக்க கால நட்பு

சென்னையில் ஒன்றாக நாங்கள் ரஞ்சித் ஹோட்டலில் தங்கினோம். பின்னர் உட்லாண்ட்ஸ் ஹோட்டல் காட்டேஜ் வாசம்... 1985 வரை இது தொடர்ந்தது. வேணுவின் நட்பில் எனக்கு நினைவுகூர நிறைய விஷயங்கள் உண்டு.

புதிய காட்சிகளுக்கு, புதிய உலகத்திற்கு, புதிய புரிதலுக்கான வாசலை திறந்தது வேணுதான். நாடகம், சங்கீதம், நாட்டுப்புற கலைகள், கதகளி, கூடியாட்டம் எனப் புதிதுபுதிதாக வாசல்களைத் திறந்து காண்பித்துக் கொண்டே இருந்தார். வேணுவுடன் இருந்த காலத்தில் நான் துக்கத்தை அறிந்ததே இல்லை. எப்போதும் புதிதாகச் சொல்ல வேணுவிடம் விஷயங்கள் இருந்துகொண்டே இருக்கும். எனக்கு அப்படியான விஷயங்கள் எதுவும் வேணுவிடம் பகிர இருந்ததில்லை.

சென்னை வாசம்

1982இல் நல்ல நடிகர் விருது அவருக்கும், துணை நடிகர் விருது எனக்கும் கிடைத்தது. நாங்கள் இருவரும் ஒன்றாக திருவனந்தபுரம் போய் விருது வாங்கி, எர்ணாகுளம் வந்து உணவை முடித்து திருச்சூர் ஷூட்டிங் சென்றது இன்றும் நினைவில் இருக்கிறது.

சென்னையில் நாங்கள் ஒன்றாக வசித்த காலங்கள்தாம் என் வாழ்க்கையின் மிக சந்தோஷமான காலங்கள் என எனக்குத் தோன்றும். அப்போது நிறைய ஷூட்டிங்குகள் சென்னையில் தொடர்ச்சியாக இருந்தன. 1983, 1984 காலத்தில் மாதக் கணக்கில் நாங்கள் ஒரே அறையில் தொடர்ந்து வசித்ததுண்டு.

அக்காலத்தில் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை ஷூட்டிங்கில் விடுமுறை உண்டு. ஊருக்குப் போக முடியாது. ஒரு சைக்கிள் ரிக்‌ஷாவை தின வாடகைக்கு அழைத்து காலையில் கிளம்புவோம். சின்ன ஷாப்பிங், மலையாளி ஹோட்டலில் மூக்குமுட்ட உணவு, மேட்னி, செகண்ட் ஷோ சினிமா முடித்து அறைக்கு வருவோம்.

எனக்கு எல்லாமுமாக இருந்தவர்

இரண்டு மூணு சினிமாக்கள் ஒரே நேரத்தில் நடித்த காலம் அது. மதிய இடைவேளையில், கிடைக்கும் இடத்தில் நியூஸ் பேப்பரில் படுத்து உறங்குவோம். வெயில் வரும் நேரம், வேணு என் தலையை எடுத்து தலையணையில் படுக்கவைத்த பல நேரங்கள் உண்டு.

ஒரு நாள் மதிய நேரம் கிடைத்த பாறையின் மேல் படுத்து தூங்கிக் கொண்டிருந்தேன். விழிக்கும்போது காரின் பின்சீட்டில் இருந்தேன். என்னைத் தூக்கி காரில் படுக்கவைப்பதற்கான ஆரோக்கியம் வேணுவிற்கு இருந்தது. நான் அன்று இத்தனை கனமாக இல்லை.

இப்படியாக வேணு என் நண்பரானார். சினிமாவில் அவர் எனக்கு அண்ணன், அப்பா, மாமா எனப் பல கதாபாத்திரங்கள் செய்திருக்கிறார். கதாபாத்திரங்களுக்கு இடையேயான உறவு, சொந்த வாழ்க்கையிலும் தொடர்ந்ததாக எனக்குத் தோன்றியதுண்டு. அந்தக் கதாபாத்திரங்களுக்கு அப்புறமும் அவர் எனக்கு எல்லாமுமாக இருந்தார்.

கடந்த என் பிறந்தநாளிலும் எனக்கு வாழ்த்து அனுப்பியிருந்தார். வாணவேடிக்கை போன்ற பிரமாண்ட பிறந்தநாள் வாழ்த்துகளால் நிரம்பிய நாளாக அது இருந்தது. அதற்கு இடையிலும், அந்த சிறு தீபத்தின் ஒளியை நான் கையில் வாங்கினேன்.

என்னால் அவருக்கு விடை தர முடியாது

என்றும் அந்த வெளிச்சம், என் வழிகாட்டியாய் இருந்திருக்கிறது; இருக்கும். கடந்த என் பிறந்தநாளைக்கும் சுசீலா அம்மாவிடமிருந்து (வேணுவின் மனைவி) புதிய வேட்டியும், கடிதமும் எனக்கு வந்திருந்தது.

நான் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் பீஷ்மபர்வம், புழு ஆகிய இரு படங்களிலும் வேணு என்னுடன் நடித்துக் கொண்டிருந்தார். வேணு என் சகோதரன், என் வழிகாட்டி, என் நண்பன், எனக்கு அறிவுரை சொன்ன என் தாய்மாமன்... நிறைய நேசித்த என் தகப்பன்.

அதற்கு அப்புறமும் நான் சொற்களால் சொல்ல முடியாத எல்லாமுமாயிருந்தார். என்னால் அவருக்கு விடை தர முடியாது... என்றும் என் நெஞ்சில் அவர் இருப்பார். ஒவ்வொரு மலையாளி நெஞ்சிலும் மங்காத நட்சத்திரமாக ஜொலித்து நிற்பார். நான் கண்களை மூடி, கைகளை கூப்பி நிற்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வாலியையும் நாகேஷையும் காப்பற்றியவர் ஸ்ரீகாந்த் - சிவக்குமார் உருக்கம்

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.