சௌக்கார் ஜானகிக்கு பத்மஸ்ரீ விருது - நன்றி தெரிவித்து நடிகர் நாசர் அறிக்கை!

author img

By

Published : Jan 28, 2022, 3:09 PM IST

சவுக்கார் ஜானகிக்கு விருது - நடிகர் நாசர் நன்றி!

பழம்பெரும் நடிகை சௌக்கார் ஜானகிக்கு பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் நாசர் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகையும் திரையுலகின் பல சாதனைகள் படைத்திட்ட வரலாற்று புகழ் நடிகையுமான சௌக்கார் ஜானகிக்கு மத்திய அரசு கடந்த சில நாள்களுக்கு முன் பத்மஶ்ரீ விருதை அறிவித்து கௌரவித்துள்ளது. இதற்காக தமிழ் சினிமா நடிகர், நடிகைகள் வாழ்த்துகள் தெரிவித்து வந்தனர்.

சௌக்கார் ஜானகி தன் 14 வயதிலேயே மேடை நாடகம் மூலம் நடிப்புத் துறையில் கால்பதித்தவர், தன் 18 வயதில் 1949 ஆம் ஆண்டில் ‘சௌக்கார்’ எனும் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் 450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

3000க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் பங்கேற்றிருக்கிறார். கலையுலகிற்கு அவர் செய்திட்ட அறப்பணிகள், சாதனைகள் ஏராளம். மொழிகள் தாண்டி கணக்கிலடங்கா வெள்ளிவிழா வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

81 வயதைக் கடந்தும் சமீபத்தில் வெளியான நடிகர் கார்த்தியின் “தம்பி”, கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடித்த ‘பிஸ்கோத்’ படம் வரையிலும் நடிப்பைத் தொடர்ந்து வருகிறார். கலையுலக பொக்கிஷமான நடிகை சௌக்கார் ஜானகிக்கு பத்மஶ்ரீ விருது கௌரவம் கிடைத்துள்ளதை தமிழ் சினிமா நடிகர் நடிகைகள் சார்பில் நடிகர் நாசர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து நடிகர் நாசர் வெளியிட்ட அறிக்கையில், ”ஓ எங்கள் ‘சௌக்கார்’ அம்மா..,அத்தனை மொழிகளிலும் மறக்க முடியாத எத்தனை நூறு படங்கள்! ஒவ்வொன்றும் முத்தாய்! ஒன்றில் கண்டது.. இன்னொன்றில் இல்லை. புதிது புதிதாய் கண்டு ரசிக்க கண்கோடி! ‘புதிய பறவையில்’ மிரட்டியதும் மிரண்டு போனதும் ஒரே ஜோடிக்கண்களா? ஆச்சர்யம்!.

கண்களை மிஞ்சும் உங்கள் முத்துசிரிப்பு! அச்சிரிப்பினும் வழிந்தோடும் உண்மையான உங்கள் அன்பும் பாசமும்!,தாங்கள் எங்களுக்கு தந்த கதாப்பாத்திரங்கள் ஒவ்வொன்றையும் முத்தாய் கோர்த்து அழகு பார்த்து மனமகிழ்ந்து விம்மிய எங்களுக்கு அம் முத்துமாலைக்கு பதக்கமாய் இன்று “பத்மஶ்ரீ” உங்களுக்கு கிடைத்திருப்பது எங்களுக்கு பெருமை. தமிழ் திரையுலகிற்கு கிடைத்த கொடை நீங்கள், என்றென்றும் நீடுடி வாழ நடிகர், நடிகைகள் சமூகம் சார்பில் வாழ்த்தி வணங்குகிறோம். “பத்மஶ்ரீ” விருது அறிவித்த மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்“என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:Polytechnique - சாவை விட சாவைக் கண்டவரின் வாழ்வே கொடுமையானது..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.