ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோல், டீசல் கொண்டுவரப்பட வேண்டும்

author img

By

Published : May 22, 2021, 5:11 PM IST

ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோல் கொண்டுவரப்பட வேண்டும்

யார் ஆட்சிக்கு வந்தாலும், சர்வதேச எண்ணெய் சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப பெட்ரோலியப் பொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படும். ஆனால், ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் நடந்து கொண்டிருக்கும்போது விலை உயர்வு ஏற்படாதது அரசியல் சாமர்த்தியத்தை காட்டுகிறது. தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு, ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் விலை அதிகரிக்கத் தொடங்கி, மக்களுக்கு தேவையற்ற செலவு வைக்கிறது.

ஹைதராபாத்: பெட்ரோல், டீசல் விலை கடந்த ஒரு மாத காலத்திற்குள் பத்து முறை திருத்தப்பட்டது. இதன் விளைவாக, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய பல நகரங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 100ஐ தாண்டியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 69 அமெரிக்க டாலர்களாக அதிகரித்ததன் விளைவாக ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய, விலைகள் தவிர்க்க முடியாமல் உயர்த்தப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் வழக்கமான நியாயப்படுதலை கூறுகின்றன.

2014ஆம் ஆண்டில் பாஜக அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது, ​​சர்வதேச கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 110 அமெரிக்க டாலர்கள். ஆனால், அப்போது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.71 ஆகவும் டீசல் லிட்டருக்கு ரூ.57 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 110 அமெரிக்க டாலரா இருந்தபோது இருந்த விலையுடன் ஒப்பிடும்போது,​ ​தற்போதைய பெட்ரோல் விலையின் பின்னணியில் உள்ள காரணத்தை சாதாரண மனிதர் கேள்வி எழுப்புவது நியாயமானதே.

ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோல் கொண்டுவரப்பட வேண்டும்
ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோல் கொண்டுவரப்பட வேண்டும்

இந்தியாவின் எரிசக்தி இறக்குமதி, தற்சார்பு மீது கவனம் செலுத்தத் தவறியதற்கு முந்தைய அரசாங்கங்கள் மீது குற்றம் சாட்டியபோது பிரதமர் பாதி உண்மையை மட்டுமே பேசினார். கோவிட் பரவலுக்கு முன்பு பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு வெறும் 19.98 ரூபாயாக இருந்தது, பின்னர் அது லிட்டருக்கு ரூ.32.98 ஆக உயர்த்தப்பட்டது. இதேபோல் டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ. 15.83 லிருந்து ரூ.31.83 ஆக உயர்ந்தது. எரிபொருள் விலையில் வாட்(VAT) சேர்த்ததன் மூலம் மாநில அரசுகளும் இதற்கு பங்களித்தன.

எரிபொருள் விலையில் மூன்றில் இரண்டு பங்கு மத்திய, மாநில அரசுகளால் விதிக்கப்படும் கலால் வரிகளை உள்ளடக்கியது. பெட்ரோலிய எரிபொருளை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவந்தால், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75 ஆகவும், ஒரு லிட்டர் டீசலுக்கு லிட்டருக்கு ரூ.68 ஆகவும் இருக்கும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். அவர்களின் ஆலோசனையைச் செயல்படுத்துவது நல்லது.

மோடி ஆட்சியின் ஏழு ஆண்டுகளில், நாட்டின் வரவு செலவுத் திட்டத்தின் அளவு கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்தது. இதேபோல் இந்த காலகட்டத்தில் பெட்ரோலிய எரிபொருட்கள் மூலமாக அரசாங்கத்தின் வருமானம் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. 2014-15ஆம் ஆண்டில் பெட்ரோலியம் மீதான கலால்வரி வருவாய் ரூ.74,158 கோடியாக இருந்தது. 2020-21ஆம் ஆண்டு வாக்கில், பெட்ரோலிய எரிபொருட்களின் கலால்வரி வருவாய் ரூ.2.95 லட்சம் கோடியை எட்டியுள்ளது என்று மத்திய அரசே நாடாளுமன்றத்தில் கூறியது.

ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோல்
ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோல்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்தபோது, மத்திய அரசு கலால் வரியை ஒன்பது மடங்கு உயர்த்தியது. தனக்கு போதுமான வருவாயை உறுதி செய்வதற்கான அதன் தேடலில், மத்திய அரசு பெட்ரோலியம் தொடர்பான உலகிலேயே மிக அதிகமான கலால் வரிகளை வசூலிக்கிறது. இந்த விஷயத்தில் எந்தவொரு முன்முயற்சியையும் எடுக்கக்கூடிய நிலையில் இல்லை என்று மத்திய அரசு மறைமுகமாக கூறினாலும், அது அனைத்து விதமான தியாகங்களையும் செய்ய தயாராக இருப்பதாக மாநிலங்களுக்குத் தெரிவித்தது. இதைத் தெளிவுபடுத்திய மத்திய நிதியமைச்சர், பெட்ரோலிய விலையில் ஒரு இக்கட்டான நிலையை எதிர்கொள்வதாக கூறினார்.

மத்திய, மாநில அரசுகள் பெட்ரோலியம் மீதான வரி என்ற பெயரில் மக்களிடமிருந்து ரூ.5 லட்சம் கோடிக்கு மேல் வசூலித்து வருகின்றன. பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவருவதற்கான எந்தவொரு திட்டத்தையும் பரிசீலிக்கவில்லை என்று மத்திய அரசு கூறும் அதே வேளையில், மாநிலங்கள் விரும்பினால் மாநிலங்களுடன் கலந்தாலோசித்து ஒரு முடிவு எடுக்கப்படும் என்று ஏமாற்று வார்த்தைகளை கூறியது.

ஏழு மாத இடைவெளிக்குப் பிறகு ஜிஎஸ்டி கவுன்சில் அடுத்த வாரம் கூடப் போகிறது. கோவிட் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளதால், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், மருத்துவ சேவைகள் மீதான வரி விலக்குகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே வேலையின்மை, பணவீக்கம், மருத்துவ செலவினங்கள் போன்றவற்றின் அதிகரிப்பு ஆகியவற்றால் கடும்சுமையை எதிர்கொள்ளும் மக்களுக்கு, அரசாங்கங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டிய நேரம் இது. டீசல், பெட்ரோல் ஜிஎஸ்டியின் வரம்பிற்குள் கொண்டுவரப்பட்டால் மட்டுமே, பெட்ரோலிய எரிபொருள் விலை உயர்வின் தொடர்ச்சியான தாக்குதல்களிலிருந்து நாட்டு மக்கள் விடுதலை பெறமுடியும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.