புதிய தொழில்நுட்பங்கள் - கரோனா வைரஸ் காலத்திலும் அதற்கு பின்பும்

author img

By

Published : May 24, 2021, 5:08 PM IST

பேராசிரியர் பாலாஜி ரெட்டி

தற்போதைய உலகில் கண்காணிப்பு, வைரஸ் கண்காணிப்பு, தடுப்பு, கட்டுப்பாடு, சிகிச்சை, வள ஒதுக்கீடு, தடுப்பூசி மேம்பாடு, பரலை முன்னறிவித்தல் மற்றும் பாதிப்புகள் ஆகியவற்றில் புதிய தொழில்நுட்பங்கள் அவசரமாக தேவைப்படுகின்றன என பேராசிரியர் பாலாஜி ரெட்டி கூறுகிறார்.

1998ஆம் ஆண்டு மே 11ஆம் தேதி நடைபெற்ற போக்ரான் அணுசக்தி சோதனையின் நினைவு தினமாக இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் மே 11ஆம் தேதி தேசிய தொழில்நுட்ப தினமாக அனுசரிக்கப்படுகிறது. பொதுவாக, இது நமது அன்றாட வாழ்க்கையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கை எடுத்துக்காட்டுகிறது. கரோனா வைரஸின் தற்போதைய சூழலில், கரோனாவின் தற்போதைய மாறுபட்ட பிறழ்வுகள் பற்றிய அச்சமும், வரவிருக்கும் மூன்றாவது மற்றும் நான்காவது அலைகளைப் பற்றிய அச்சமூட்டும் செய்திகளும், தொழில்நுட்பத்தின் முக்கியத்துவமும், அன்றாட வாழ்க்கையில் கரோனாவுக்கு எதிராகப் போராட அதன் பயன்பாடும் மனித வாழ்க்கையில் முன்பை விட மிகவும் முக்கியமானதாகிவிட்டது.

இது போன்ற பேரழிவு காலங்களில் தொழில்நுட்பத்தின் பங்கை நாம் மறுபரிசீலனை செய்ய தேசிய தொழில்நுட்ப நாள் சரியான சந்தர்ப்பமாகும். உண்மையில், தொழில்நுட்பம் தொற்றுநோயிலிருந்து நம்மைத் காப்பது மட்டுமல்ல நாம் எவ்வாறு செயல்பட வேண்டும், வாழவேண்டும் என்பதை மறுவரையறை செய்கிறது.

ஒவ்வொரு ஆண்டும், புதுப்புது தொழில்நுட்பங்கள் விரைவாக தோன்றும். ஆனால் கோவிட்-19 தொற்றுநோய் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மற்றும் ஒருங்கிணைப்பை நாம் இதற்கு முன்பு பார்த்திராத வகையில் அதிகரித்துள்ளது. இப்போது, ​​புதிய தொழில்நுட்பங்கள் ஊரடங்கு நேரத்தில் நமது சமுதாயத்தை செயல்பட வைப்பதிலும், கரோனா வைரஸின் தீவிர பரவலைக் கட்டுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. கோவிட்-19 நாம் வேலை செய்யும் முறை மற்றும் வாழும் முறையை புதுமைப்படுத்தவும் மாற்றவும் மனிதகுலத்தை கட்டாயப்படுத்துகிறது.

கை பயன்பாடற்ற கதவு திறப்பான் முதல் புதுமையான ஆக்ஸிஜன் வென்டிலேட்டர்கள் வரை, COVID-19 தொற்றுநோய் அவசர தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்கான தேவையைக் கொண்டு வந்தது. டிஜிட்டல் பரிவர்த்தனை, டெலி-மெடிசின், ஆன்லைன் கல்வி, மெய்நிகர் கூட்டங்கள், தொடர்புஇல்லா விநியோகம், ரோபோக்கள் மற்றும் ட்ரோன்களின் பயன்பாடு போன்ற பல தொழில்நுட்பங்களை இது விரைவுபடுத்தியுள்ளது.

கரோனாவுக்கு எதிராகப் போராட புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பையும் அவசியத்தையும் கோவிட்-19 தொற்றுநோய் முன்வைத்துள்ளது. கண்டறிதல், கண்காணித்தல், திரையிடல், மேற்பார்வையிடல், தடமறிதல், கரோனா வைரஸைக் கண்காணித்தல் மற்றும் விழிப்புணர்வை உருவாக்குதல் ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவு (AI), இணைய பயன்பாடு, பெரிய தரவுகள், பிளாக்செயின், 5ஜி, ரோபாட்டிக்ஸ், ட்ரோன்கள், மரபணு எடிட்டிங் போன்ற தொழில்நுட்பங்கள் உதவுகின்றன.

தற்போதைய உலகில் கண்காணிப்பு, வைரஸ் கண்காணிப்பு, தடுப்பு, கட்டுப்பாடு, சிகிச்சை, வள ஒதுக்கீடு, தடுப்பூசி மேம்பாடு, பரலை முன்னறிவித்தல் மற்றும் பாதிப்புகள் ஆகியவற்றில் புதிய தொழில்நுட்பங்கள் அவசரமாக தேவைப்படுகின்றன.

தற்போதைய தொழில்நுட்பங்கள்

டெலிமெடிசின் - நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பிற நோயாளிகளுக்கு இடையிலான நேரடி தொடர்பைக் குறைக்கிறது. அணியக்கூடிய சாதனங்கள் மூலமாக வீட்டில் இருக்கும் நோயாளியின் தரவு குறித்த நிகழ்நேர தகவல்களை வழங்க உதவுகின்றன.

வெப்ப பரிசோதனை

வெப்ப பரிசோதனை என்பது கதிர்வீச்சைக் கண்டறியும் ஒரு செயல்முறையாகும். ஒரு பொருளால் வெளிப்படும் கதிர்வீச்சின் அளவு அதன் வெப்பநிலையுடன் அதிகரிக்கிறது; எனவே, வெப்பப் பதிவியல் ஒருவரின் வெப்பநிலையில் உள்ள மாறுபாடுகளைக் காண உதவுகிறது. வெப்ப பரிசோதனை ஒருவருக்கு காய்ச்சல் உள்ளதா என கண்டறிய பயன்பட்டு, அதன்மூலம் அவை கரோனா வைரஸுக்கு சோதிக்கவும் பயன்படுகிறது.

முகக்கவசங்களுடன் முகமறிதல்

முகமறியும் தொழில்நுட்பத்தில் ஆழமான ஆராயும் அமைப்புகள் 95% துல்லியம் வரை முககவசம் அணிந்த நபர்களை அடையாளம் காணும் அளவுக்கு மேம்பட்டுள்ளன. இந்த செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் சமூகத்தின் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் பயங்கரவாதத்திற்கு மட்டுமல்ல, சுகாதாரத்துறைக்கும் மிகவும் அவசியமானது

மருத்துவ துறையில் செயற்கை நுண்ணறிவு

தகவல் செயலாக்கம் மற்றும் முடிவெடுக்கும் திறன் கொண்ட செயற்கை நுண்ணறிவு மூலம் வைரஸைக் கண்டறிவதற்கான துல்லியம், வேகம் மற்றும் செயல்திறனை மேம்படுத்த முடியும். சரியான அணுகுமுறையைக் கண்டறிய சுகாதாரதுறையினருக்கு உதவக்கூடிய செயற்கை நுண்ணறிவு பகுப்பாய்வு மூலம் குறிப்பட்ட நோயாளிக்கு ஆரம்பகட்ட சிகிச்சையை அளிக்க முடியும். இயந்திர கற்றல் வழிமுறைகள் மூலம், வேதியியல் மற்றும் உயிரியல் தொடர்புகளுக்கான தேடலை முன்னேற்றுவதன் மூலம் மருந்து வளர்ச்சியை மேம்படுத்த முடியும். இதன் மூலம் புதிய தடுப்பூசிகளை விரைவாக சந்தைக்குக் கொண்டு வர உதவும்.

தொற்றுநோய்களின் போது விண்வெளி சேவைகள்

தொற்றுநோய்களின் போது பயன்பாட்டில் உள்ள புவியியல் சேவைகளில் மிக முக்கியமானது இருப்பிடம் அறியும் சேவையாகும். இது குளோபல் நேவிகேஷன் சேட்டிலைட் சிஸ்டம் (GNSS) சார்ந்துள்ளது. ஊரடங்கின்போது, பொருட்கள்,மருத்துவ சேவைகள் மற்றும் கோவிட்-தடமறிதல் போன்றவற்றை மேற்கொள்ள இருப்பிடத்தை அடையாளம் காண அத்தியாவசிய சேவையாக மாறியுள்ளது.

குவாண்டம் கம்ப்யூட்டிங்

இந்த புதிய வகையான கணினியின் ஒரு முக்கிய பயன்பாடு சிக்கலான இரசாயன எதிர்வினைகளின் உருவகப்படுத்துதலாக இருக்கும், இது மருந்து வளர்ச்சியில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கும் ஒரு மிகச்சிறந்த கருவியாக இருக்கும். குவாண்டம் கணினிகள் இதை விரைவில் மாற்றக்கூடும். அவை தயாரிப்பு மேம்பாட்டு சுழற்சிகளை கணிசமாகக் குறைப்பது மட்டுமல்லாது, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செலவினங்களைக் குறைக்கும்.

கோவிட்-19 தொற்றுநோயுடன் போராட புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள்

"ப்ளாட்" நிறுவனம் ஒரு நபரை வீட்டின் உள்ளே அனுமதிப்பதற்கு முன்பு அவர்களின் வெப்பநிலையை எடுக்கக்கூடிய "எட்டி" என்று அழைக்கப்படும் ஒரு அழைப்புமணியை உருவாக்கியது. மற்றொரு நிறுவனமான, “அலாரம்.காம்”, தொடும் இடங்களில் அடிக்கடி விட்டுச்செல்லும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களின் பரவலைக் குறைக்கும் முயற்சியில் “தொடுதல்இல்லா காணொளி அழைப்புமணி” ஒன்றை உருவாக்கியது. நீங்கள் அலாரம்.காம் மூலம் அழைப்புமணியை அழுத்த வேண்டாம். நீங்கள் ஒரு வரவேற்பு மிதியடி மீது நின்றாலே போதும்..

பெருநிறுவன அலுவலகம், சில்லறை கடை அல்லது உணவகத்தில் அதிக தொடுதல், அதிக போக்குவரத்து உள்ள பகுதிகளை கிருமி நீக்கம் செய்ய புற ஊதா கதிரை வெளிப்படுத்தும் “ரோபோக்கள்” இப்போது கிடைக்கின்றன. மருத்துவமனை-தர துல்லியத்துடன் காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் கண்டறிய உங்கள் உடலில் பொருத்தக்கூடிய உணரிகள் (Sensors) உள்ளன.

உள்ளமைக்கப்பட்ட மைக்ரோஃபோனைக் கொண்ட முகக்கவசம் உள்ளது, எனவே நீங்கள் முகக்கவசம் அணிந்திருக்கும்போதும் அழைப்பை எடுக்கலாம் எளிதாகக் கேட்கலாம். அதன் பெயர் மாஸ்க்ஃபோன். உங்களையும் நீங்கள் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள் மற்றும் மாசுபாடு ஆகியவற்றைக் கடந்து செல்லும் அனைவரையும் பாதுகாக்க "மாஸ்க்ஃபோன்" என்பது இன்றியமையாதது.

இதுபோன்ற மற்றொரு முகக்கவசம் “ஏர்பாப் ஆக்டிவ் +”, ஒரு ஸ்மார்ட் மாஸ்க், இது உங்கள் சுவாசத்தைக் கண்காணிக்கும் உணரியுடன், உள்ளூர் காற்று தர தரவுகளுடன் உங்கள் வடிப்பானை மாற்ற வேண்டிய நேரத்தை தெரிவிக்கும். அமாஸ்ஃபிட், ஒரு கிருமிநாசினி முகக்கவசத்தை உருவாக்கியுள்ளது, இது 10 நிமிடங்களுக்குள் புற ஊதா கதிர்கள் மூலம் அதன் வடிப்பான்களை சுத்தம் செய்வதாகக் கூறுகிறது.

ஃப்ளூ லேப்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள சாதனம் ஃப்ளூ, இது தூசி மற்றும் பிற ஒவ்வாமை பொருட்கள் உங்கள் உடலில் நுழையும் போது உங்கள் உடலை ஹிஸ்டமைன்களை வெளியிடுவதைத் தடுக்கும். உங்கள் நாசிக்குள் ஃப்ளூ ஐ செருகி அதை 10 விநாடிகள் இயக்கவும், மற்ற நாசியில் மீண்டும் செய்யவும். ஃப்ளூ சிவப்பு மற்றும் என்.ஐ.ஆர் (அகச்சிவப்பு போன்ற) ஒளியைப் பயன்படுத்தி, அலைநீளம், அளவு, மற்றும் துடிப்பு ஆகியவற்றின் துல்லியமான அளவில் ஹிஸ்டமைன்களின் வெளியீட்டை நிறுத்தி, எரிச்சலை குறைக்க உதவுகிறது.

ஈ.சி.ஜி, வெப்பநிலை உணரி, துடிப்பு ஆக்சிமீட்டர், இதயம் மற்றும் நுரையீரல் ஒலிகளைப் பதிவுசெய்ய மைக்ரோஃபோன்கள், இதய துடிப்பு மானிட்டர் மற்றும் இரத்த அழுத்த சென்சார் ஆகியவற்றை கொண்ட, GoPro கேமரா அளவில், வீட்டிலிருந்தவாறே முழுமையான இதய கண்காணிப்பு பெற எச்டி மெடிக்கல் “ஹெல்தியு” என்ற சாதனத்தை கண்டுபிடித்துள்ளது. இதனை பயன்படுத்த தொழில்நுட்ப ஆர்வமுள்ளவராக இருக்கவேண்டிய அவசியமில்லை. அனைவரும் எளிதாக பயன்படுத்தலாம்.

“ஓம்ரான்”. உங்கள் மருத்துவருக்கு தரவை அனுப்பும் இரத்த அழுத்த சுற்றுப்பட்டை. உங்கள் இரத்த அழுத்தத்தை வீட்டிலேயே எடுத்து அந்த தரவை உங்கள் மருத்துவருக்கு அனுப்புவதை முன்பை விட எளிதாக்கியுள்ளது. ஓம்ரான் நிறுவனத்தின் புதிய “வைட்டல்சைட் கிட்” ஒரு இரத்த அழுத்த சுற்று, அளவுமானி, மோடம் இணைக்கப்பட்ட பொருத்தப்பட்ட தரவு மையத்துடன் உங்கள் இரத்த அழுத்த அளவீடுகளை தானாகவே உங்கள் மருத்துவரிடம் பதிவேற்றுகிறது.

இந்தியாவின் சமீபத்திய தொழில்நுட்பங்கள் - இந்தியாவில் கோவிட் தொற்றுநோய், இந்தியாவில் தொழில்முனைவோர், நெருக்கடியைச் சமாளிக்க அதிக தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். அவற்றில் ஒன்று, வாட்ஸ்அப் போன்ற “வெர்லூப்’ ஆகும், இது ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வாங்குவதற்கும் விநியோகிப்பதற்கும் உதவுகிறது, மேலும் இது தடுப்பூசி மையங்களை கண்டறிய உதவும் வலைத்தளமாகவும் செயல்படுகிறது.

ஒருவரின் மாநில மற்றும் மாவட்டத்துடன் இணையதளத்தில் விரைவான ஒற்றைகடவுச்சொல் சரிபார்ப்புடன் மொபைல் எண்ணை உள்ளிடுவதன் மூலம், கணினி சரியான தகவலுடன் பதிவுசெய்தவருக்கு அறிவிக்கும். பெங்களூரை தளமாகக் கொண்ட ஆட்டோமேஷன் தளமான வெர்லூப் தொற்றுநோய்க்கு எதிராகப் போராடுவதற்கான போரில் இணைந்துள்ளது.

நகரத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களைக் கண்டுபிடிப்பதற்கான வாட்ஸ்அப் குழுவை அது உருவாக்கியுள்ளது.. அடிப்படையில், வெர்லூப் தனிநபர்கள் மற்றும் மருத்துவமனைகள் உட்பட ஆக்ஸிஜன் தேவைப்படுபவர்களுக்கும் அதை வைத்திருப்பவர்களுக்கும் இடையே ஒரு தகவல்தொடர்புகளை உருவாக்குகிறது.

கரோனா ஓவன் - பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட நானோ தொழில்நுட்ப நிறுவனமான லாக் 9 மெட்டீரியல்ஸ், கரோனா ஓவன் என்ற பெயரில் முதன்முதலில் UV-C ஒளியைப் பயன்படுத்துகிறது (இது 253.7 என்.எம் அலைநீளம் கொண்டது). இந்த சாதனம் எந்தவொரு மேற்பரப்பின் பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் உள்ளிட்ட கிருமிகளை 4 நிமிடங்களுக்குள் (பல்வேறு பொருள்கள், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் போன்றவை) கிருமி நீக்கம் செய்கிறது.

விஸ்டார் ஏர் பியூரிஃபையர்ஸ் - டெல்லியை மையமாகக் கொண்ட ஏர்ஒக், காற்று சுத்திகரிப்பான்களை உற்பத்தி செய்கிறது, இது முக்கிய மாசுகள் மற்றும் வாயு பொருட்களை வடிகட்ட EGAPA எனப்படும் காப்புரிமை பெற்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.

மிலாக்ரோ சீகல் - இந்திய நுகர்வோர் பிராண்ட் மிலாக்ரோவால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு துப்புரவு ரோபோ. இந்த சாதனத்தின் மூலம் சுத்தம் செய்யும் போது இது நிகழ்நேர செயல்பாட்டையும் வரைபடத்தையும் காட்டுகிறது. நேரத்தைக் குறைக்க ஒவ்வொரு பகுதியிலும் நிகழ்நேர பாதையை ரோபோ திட்டமிடுகிறது. இந்த ரோபோ வெற்றிடத்தில் பாக்டீரியா எதிர்ப்பு, நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் வைரஸ் தடுப்பு பண்புகள் உள்ளன, அவை மருத்துவமனைகள் போன்ற இடங்களில் தொற்றுநோய்கள் பரவுவதைக் குறைக்க உதவும் என்று கூறுகிறது.

டோஸி - டோஸி என்பது டர்டில் ஷெல் டெக்னாலஜிஸ் உருவாக்கிய ஒரு சாதனமாகும், இது நிலைமைகளை துல்லியமாக கண்டறிவதன் மூலம் சிறந்த சுகாதார சேவையை அணுக உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த சாதனம் பல்வேறு நோய்களைக் கண்டறிவதற்கு பயன்படுவதால் மருத்துவமனைக்கு செல்லுதல், பல சோதனைகளுக்குச் செல்லுதல் போன்றவற்றிக்கு ஆகும் நேரத்தைக் குறைக்கிறது.

இது ஒரு ஸ்மார்ட் தொடர்பு இல்லாத சுகாதார மானிட்டர், ஒருவர் அவர்களின் மெத்தையின் கீழ் வைத்திருக்க முடியும். இது இதய ஆரோக்கியம், மன அழுத்தம், தூக்கத்தின் தரம் போன்ற அளவீடுகள் மூலம் தனிநபரின் உடல்நிலையை கண்காணிக்கும். ஸ்மார்ட்போன்களில் நிறுவக்கூடிய டோஸி செயலி மூலம் விரிவான பகுப்பாய்வு அறிக்கையை காண முடியும்.

முடிவுரை

நாட்டில் பரவலான கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தவும் நிர்வகிப்பதிலும், சமூக இடைவெளி பராமரிப்பது, முகக்கவசம் அணிவது, வீட்டிலிருந்து வேலை செய்வது மற்றும் வீட்டில் இருப்பது போன்றவை தவிர தொழில்நுட்பம் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. தொழில்நுட்பத்துடன் கூடிய “உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு” இன் நோக்கம், அனைத்து இடங்களிலும் சரியான, மலிவு, அளவிடக்கூடிய மற்றும் நிலையான டிஜிட்டல் தொழில்நுட்ப சுகாதாரத் தீர்வுகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் அனைவருக்கும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகும்.

நமது தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப எவ்வளவு விரைவாக புதிய தொழில்நுட்பங்களை வடிவமைக்கிறோம், மாற்றியமைக்கிறோம், புதுமைப்படுத்துகிறோம், உருவாக்குகிறோம் என்பது முக்கியம். கரோனா வைரஸுக்கு எதிராக போராட உலகெங்கிலும், நிலையான தடுப்பூசிகள், மூளையில் உள்ள ஹாலோகிராம், ஆப்டோஜெனெடிக்ஸ், மூளை உயிரணுக்களின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் நுட்பங்கள், மூலக்கூறு உயிரியலில் சமீபத்திய முன்னேற்றங்களுடன் சிறந்த ஆன்டிபாடிகளை உருவாக்குதல் போன்ற புதிய தொழில்நுட்பங்கள் வலுவான ஆராய்ச்சி நிலையில் உள்ளன.

மருத்துவ மற்றும் அறிவியல் சமூகம் உலக அளவில் ஒருவருக்கொருவர் சிறந்த ஒத்துழைப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இறுதியில், கோவிட்-19 க்கு எதிரான போராட்டம் ஒரு ஓட்டப்பந்தயம் அல்ல. இது ஒரு மராத்தான். இது மேலும் தொடர்ந்தால், மக்களை பாதுகாப்பாகவும் உயிருடனும் வைத்திருக்க கிடைக்கக்கூடிய ஒவ்வொரு தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.