தனிமரமான 90's கிட்ஸ்- சட்டத்தை மாற்றிய சீனா!

author img

By

Published : Jun 9, 2021, 8:02 AM IST

Updated : Jun 9, 2021, 3:43 PM IST

சீனா  குழந்தை பிறப்பு கட்டுபாடு  தொழிலாளர்கள்  விஷ்ணு பிரகாஷ்  சீனத் தம்பதியர்  ஒரே ஒரு குழந்தை  Ambassador Vishnu Prakash

சீனத் தம்பதியர் ஒரே ஒரு குழந்தை மட்டும் பெற்றுக்கொள்ளும் திட்டத்தை அந்நாட்டு அரசு தற்போது முடிவுக்கு கொண்டுவந்துள்ளது. இந்தத் திட்டத்தால் கிராமப் புறங்களில் பல ஆண்கள் பாதிக்கப்பட்டு வெற்றுக்கிளைகளாக மாறியுள்ளனர். மணமகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. திருமண பந்தமும் வியாபாரம் ஆகிவிட்டது. மணமகளின் வீடுகளுக்கு பரிசுப் பொருள்கள் அள்ளி அள்ளி கொடுக்கும் அவலமும் நிகழ்கிறது.

பெய்ஜிங்: மக்கள் தொகையில் சீனா மிக வேகமாக வளர்ந்த ஒரு நாடு. தற்போதுள்ள நிலையில் சீனாவை எட்டிப் பிடிக்கும் நிலையில் இந்தியா உள்ளது. இதுவும் அடுத்த 5 அல்லது 10 ஆண்டுகளில் சாத்தியமாகிவிடும் என்றே பலரும் கூறுகின்றனர்.

இந்நிலையில் சீனா நாம் இருவர் நமக்கொருவர் என்ற குழந்தை பிறப்பு திட்டத்துக்கு மூடுவிழாவை அறிவித்துள்ளது. இனிவரும் காலங்களில் சீனாவில் ஒருவர் மூன்று குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம்.

6 பேரில் ஒரு சிறுவன்

தற்போதுள்ள நிலையில் சீனாவில் 6 பெரியவர்களுக்கு ஒரு சிறுவர் என்ற நிலை உள்ளது. அதாவது, மக்கள் தொகையில் தந்தை- தாய், இரு தாத்தா- பாட்டி என 6 பேருக்கு ஒரு சிறுவர் மட்டுமே உள்ளனர். பொதுவாக சீனா மக்கள் தொகையை கட்டுக்குள் கொண்டுவந்தபோது மக்கள் ஆடம்பரமான நிலைக்கு வந்தனர்.

பாரம்பரிய கலாசாரங்களை மறந்தனர், மேற்கத்திய கலாசாரத்தில் திளைத்தனர். விளைவு, தற்போது திருமணம், குடும்பம் என்ற கலாசாரத்துக்குள் அவர்கள் பெரும்பாலும் வருவதில்லை. தொழில், தனிநபர் உயர்வு காரணமாக அவர்கள் திருமணத்தை வெறுக்கின்றனர்.

கலாசார சிதைவு

இதையெல்லாம் சீனா ஆதரிக்கவில்லையென்றாலும் அங்குள்ள கலாசார மாற்றத்தை கண்கூடாக பார்க்க முடிகிறது. இளம்பெண்கள் செயற்கை கருத்தரித்தல் மையத்தை நாடும் சூழலும் உருவாகிவிட்டது.

இதற்கிடையில் அண்மையில் அந்நாட்டில் மக்கள் தொகை பெருக்கம் வெகுவாக சரிந்தது. இதற்கு மக்கள் சுயநலவாதிகளாக மாறியதும் ஒர் காரணம். அது எப்படி என்பதை பார்க்கலாம். முன்னதாக கம்யூனிசத் தலைவர் மாவோ சீனர்களின் தனிநபர் வருமானம் மற்றும் வாழ்வியலில் கவனம் செலுத்தினார். அவரின் மறைவுக்கு பின்னர்வந்த தலைவர்களும் அவரின் கொள்கைகளையை தூக்கிப்பிடித்தனர்.

குழந்தை பிறப்பு கட்டுப்பாடு

விளைவு, சீனா தனிநபர் வருமானம் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியது. ஆனால் கருவுறுதல் விழுக்காடு 1970ஆம் ஆண்டுகளில் இருந்து சீராக சரிய ஆரம்பித்தது. இதற்கிடையில், சீனத் தலைவர் டெங், நாட்டு மக்கள் ஒரே ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற திட்டத்தை அறிவித்தார்.

இந்தத் திட்டத்தில் சில தளர்வுகள் இருந்தன. அதாவது கிராமத்து பெண் என்றால் முதல் குழந்தை பிறந்த 5 ஆண்டுக்கு பிறகு மற்றுமொரு குழந்தை பெற்றுக்கொள்ளலாம். சிறுபான்மையின பெண்கள், ஆண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் கிடையாது. பெரும் தளர்வுகள் கொடுக்கப்பட்டிருந்தன. அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள கால இடைவெளி ஏதுவும் இல்லை. பொதுவாக மூன்று குழந்தைகள் வரை பெற அனுமதிக்கப்பட்டனர்.

பெண் குழந்தை பிறப்பு சரிவு

இந்த ஒரு குழந்தை திட்டம் சீனாவில் பெரும் கலாசார புரட்சியை ஏற்படுத்தியது. பெரும்பாலான பெண்கள் பாதிக்கப்பட்டனர். பல்வேறு இடங்களில் கட்டாய கருக்கலைப்புகள் நடந்தன. ஏனெனில், சட்டத்தை மீறியவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் பெரும் அபராதங்கள் விதிக்கப்பட்டன.

இது சமூக பராமரிப்பு கட்டணம் என்றழைக்கப்பட்டன. இச்சட்டம் அமலுக்கு வந்த காலம் முதல் 2012ஆம் ஆண்டு முற்பகுதி வரை கிட்டத்தட்ட 314 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் 31 ஆயிரத்து 400 கோடி ரூபாய்) வசூலிக்கப்பட்டன.

இதற்கிடையில் சிறுமிகளுக்கும் ஒரு குறிப்பிட்ட வரி விதிக்கப்பட்டது. இதனால், கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை முன்கூட்டியே அறிந்துகொள்ளும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். மேலும், ஆண் குழந்தைகள் பெற்றுக்கொள்ளவே தாய்மார்கள் விரும்பினர். இதனால் பெண்கள் பிறப்பு விகிதிம் சீனாவில் வெகுவாக குறைந்தது.

தனிமரமான ஆண்கள்

இந்தப் பாலின இடைவெளி காரணமாக 2000ஆவது ஆண்டில் 100 சிறுமிகளுக்கு 110 சிறுவர்கள் மட்டுமே காணப்பட்டனர். இது 2010ஆம் ஆண்டில் 118 ஆக உயர்ந்திருந்தது. இதன் காரணமாக மணமகளுக்கு சரியான மணமகன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. மொத்தம் 1.4 பில்லியன் (140 கோடி) மக்கள் தொகையில் 33 கோடி மட்டுமே பெண்கள் காணப்படுகின்றனர். இதனால் கிராமப் புற ஏழை-எளிய இளைஞர்களுக்கு உரிய துணை கிடைப்பதில் பெரும்சிக்கல் ஏற்பட்டது.

இதன்காரணமாக திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்த இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. இந்த ஆண்களை “வெற்றுக் கிளைகள்” என அம்மக்கள் அழைத்தனர்.

மணமகளுக்கு கடும் கிராக்கி

இந்தப் பாகுபாடு சமூகத்திலும் எதிரொலித்தது. மணமகளின் விலை சமூகத்தில் அதிகரிக்க தொடங்கியது. மணமகனின் குடும்பத்தினர் தாமாக முன்வந்து தங்களது வருங்கால மருமகளுக்கு பரிசுகளை அள்ளிக்கொடுத்தனர். இதற்காக அவர்கள் 11 ஆயிரம் சீன யான் ரென்மின்பி பணத்தை செலவிட்டனர். இது இந்திய மதிப்பில் ரூ.1.25 லட்சம் ஆகும்.

தனது மகளை திருமணம் செய்ய அனுமதித்ததற்கு நன்றியின் வெளிப்பாடாக மணமகள் மற்றும் அவளின் குடும்பத்துக்கு அளிக்கப்பட்ட இந்தப் பரிசுகள் சிவப்பு உறைகள் என அழைக்கப்பட்டன. இது அந்நாட்டில் புனிதமாக கருதப்படுகிறது.

வணிகமயமான திருமண உறவு

இதுவும் பிராந்தியத்துக்கு பிராந்தியம் வேறுபடுகிறது. இது சாதாரண சீனரின் வருமானத்துக்கு மிக அதிகமாகும். இதற்கிடையில் சமீபத்தில் மணமகளின் பெற்றோர் கார், வீடு உள்ளிட்ட பரிசு பொருள்கள் கோருவதும் அதிகரித்துவருகிறது. மணமகளின் மதிப்பு கூடிக்கொண்டே போவதற்கு பின்னால் வறுமை என்றவொரு காரணியும் உள்ளது.

சீனா பெரும் கலாசார பூர்விகம் கொண்ட நாடு. ஆனால் தற்போது கன்பூசிய கலாசாரத்திலிருந்து தடம் மாறி வணிக நாடாக மாறிவிட்டது. இதனால், மணமகள் உள்பட அனைத்தும் சந்தை விதிகளுக்கு கீழ் நிர்ணயிக்கப்படுகிறது.

தாமதமாக உணர்ந்த சீனா

இந்த கசப்பான உண்மையை 60 ஆண்டுகளுக்கு பிறகு சீனா உணர்ந்துள்ளது. ஆகவே வருங்காலத்தில் இதுமேலும் பிரச்சினையை உருவாக்கும் என்பதால் அந்நாடு ஒரு தம்பதியர் மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு பின்னால் மற்றுமொரு உண்மையும் உள்ளது.

சீனா மிகப்பெரிய மனிதவளம் கொண்ட நாடு, ஆனால் தற்போது அதற்கும் சிக்கல் வந்துள்ளது. அந்நாட்டில் தொழிலாளி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பெரும் நகரங்களில் உழைக்கும் மக்கள் சுருங்கிவிட்டனர்.

தொழிலாளிகள் தட்டுப்பாடு

இதனால் வெளிப்புறங்களில் இருந்து தொழிலாளர்கள் கொண்டுவரும் நிலைக்கு சீனா தள்ளப்பட்டுள்ளது. இதனால் செலவுகள் வேறு ஒருபுறம் தாறுமாறாக அதிகரித்துள்ளது. இந்த விஷயத்தையும் சீனா மறுபரீசிலனை செய்ய வேண்டியுள்ளது. அதாவது சீனாவில் 60 வயதை கடந்த முதியோர்கள் அதிகமாக உள்ளனர்.

இவர்களின் எண்ணிக்கை வருடந்தோறும் அதிகமாக பெருகிவருகிறது. இதை புள்ளிவிவர தகவல் ஒன்றும் உறுதிப்படுத்தியுள்ளது. அதாவது சீனாவில் 2011இல் 925 மில்லியன் (92.5 கோடி) ஆக இருந்த இளைஞர்கள் 2020ஆம் ஆண்டில் 894 மில்லியனாக (89.4 கோடி) ஆக சுருங்கியுள்ளனர். இது 2050 ஆம் ஆண்டில் மொத்த மக்கள்தொகையில் பாதிக்கு குறைந்துவிடும். இது சீனாவை வெகுவாக பாதிக்கும், ஏனெனில் சீனாவின் வளர்ச்சி திறமையான மனிதவளத்தில் உள்ளது.

விலகிய இரும்புத் திரை

இதையெல்லாம் கவனத்தில் கொண்டு, கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்கள் அமலில் இருந்து நாம் இருவர் நமக்கு ஒருவர் திட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்துள்ளது சீனா.

இதற்கிடையில் மற்றுமொரு கேள்வியும் எழுந்துள்ளது. சீனர்கள் வேறு ஒரு கலாசாரத்துக்கு மாறிய பின்னர் அவர்களால் மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ள முடியுமா? என்பதே அந்தக் கேள்வி. மேலும், இந்தத் தளர்வுகள் மக்கள் தொகையை பெருக்கத்தை அதிகரிக்குமா? என்பதும் சந்தேகமே.

கட்டளை

ஏனெனில் முன்னதாக 2016ஆம் ஆண்டு சீனா அரசு திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது. அதாவது நகர்புறவாசிகள் இரு குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். எனினும் இத்திட்டத்தை பயன்படுத்திக்கொண்டவர்கள் மிக மிக குறைவு.

மேலும், மக்கள் தொகை பெருக்கம் என்பது கலாசாரம் மற்றும் தம்பதியரின் உடல் மற்றும் உள்ளத்தின் விருப்பத்தால் கிடைப்பது. மாறாக, “பேச்சை நிறுத்தி உற்பத்தியை பெருக்குங்கள்” என கட்டளையிட இது தொழில்துறை உற்பத்தி அல்ல. இந்தச் சிறிய இடைவெளியை சீனா புரிந்துகொள்ள வேண்டிய தருணம் இது!

(கட்டுரையாளர் முன்னாள் கனடா தூதர் விஷ்ணு பிரகாஷ்)

Last Updated :Jun 9, 2021, 3:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.