மிஸ் யுனிவர்ஸ் 2023 பட்டத்தை வென்றார் நிகரகுவாவின் ஷெய்னிஸ் பலாசியோஸ்!

மிஸ் யுனிவர்ஸ் 2023 பட்டத்தை வென்றார் நிகரகுவாவின் ஷெய்னிஸ் பலாசியோஸ்!
Miss Universe 2023: இந்த ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் 2023 இறுதிப்போட்டியில் நிகரகுவாவைச் சேர்ந்த ஷெய்னிஸ் பலாசியோஸ் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றுள்ளார்.மிஸ் யுனிவர்ஸ் 2023 பட்டத்தை தட்டிச் சென்றார் நிகரகுவாவைச் சேர்ந்த ஷெய்னிஸ் பலாசியோஸ்
எல் சல்வடோர்: இந்த ஆண்டு 72வது மிஸ் யுனிவர்ஸ் போட்டி எல் சால்வடாரின் சான் சால்வடாரில் உள்ள ஜோஸ் அடோல்போ பினெடா அரங்கில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் 90 நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். மிஸ் யுனிவர்ஸ் 2023 போட்டி, இதுவரை இல்லாத வகையில் இந்த ஆண்டு தனித்துவமான கவனத்தைப் பெறும் வகையில் அமைந்தது.
இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் இரண்டு திருநங்கைகள், இரண்டு தாய்மார்கள் மற்றும் ஒரு பிளஸ் சைஸ் மாடல் ஆகியோர் கலந்து கொண்டனர். மிஸ் நேபாளம் கிரீடத்தை வென்ற ஜேன் தீபிகா காரெட், சர்வதேச அழகிப் போட்டியில் நுழைந்திருக்கும் முதல் பிளஸ் சைஸ் மாடலாக மாறியுள்ளார். மேலும், மிஸ் போர்ச்சுகல் மெரினா மச்சேட் மற்றும் மிஸ் நெதர்லாந்து ரிக்கி கோலே ஆகியோரும், மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் போட்டியிடும் முதல் திருநங்கைகள் ஆவர்.
இதற்கிடையே, மிஸ் குவாத்தமாலா மிச்செல் கோன் மற்றும் மிஸ் கமிலா அவெல்லா ஆகியோர் இந்த போட்டியில் போட்டியிட அனுமதிக்கப்பட்ட முதல் திருமணமான பெண்கள் மற்றும் தாய்மார்கள் ஆவர். ஸ்வேதா ஷர்தா, இந்தியா சார்பில் இப்போட்டியில் கலந்து கொண்டார். இவர் அரையிறுதிக்கு தகுதி பெற்று, முதல் 20 இடங்களுக்குள் நுழைந்தார். இந்நிலையில், நீச்சலுடைச் சுற்றில் அவர் தகுதி பெறாததால், மாலை கவுன் போட்டிக்கு அவரால் முன்னேற முடியவில்லை.
72வது மிஸ் யுனிவர்ஸ் இறுதி மூன்று இடங்களுக்குள் நிகரகுவா, ஆஸ்திரேலியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் நுழைந்தன. இதில் நிகரகுவாவைச் சேர்ந்த ஷெய்னிஸ் பலாசியோஸ், இந்த ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை தட்டிச் சென்றார். மிஸ் யுனிவர்ஸ் 2022, அமெரிக்காவின் ஆர் போனி கேப்ரியல், பார்வையாளர்களின் கரவொலிக்கு மத்தியில் மேடையில் ஷெய்னிஸ் பலாசியோஸூக்கு கிரீடத்தைச் சூட்டினார். இந்த வெற்றி குறித்து மிஸ் யுனிவர்ஸ் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
