பொருளாதார நெருக்கடி: இலங்கையில் அதிகரிக்கும் பாலியல் தொழில்... அத்தியாவசிய பொருள்களுக்காக நடக்கும் அவலம்...

author img

By

Published : Jul 30, 2022, 5:52 PM IST

Updated : Jul 30, 2022, 6:48 PM IST

இலங்கையின் பொருளாதார நெறுக்கடி: பாலியல் தொழிலாளர்களாகி வரும் பெண்கள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பாலியல் தொழில் அதிகரித்துவருகிறது. அத்தியாவசிய பொருள்களுக்காக பல பெண்கள் பாலியல் தொழிலுக்கு செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

கொலும்பு: பொருளாதார நெருக்கடியால் இலங்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருள்களின் விலையேற்றம், எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்துவிட்டது. பல தொழில்களும் முடங்கிவிட்டன. குறிப்பாக ஜவுளி துறை முடங்கியதால் அங்கு வேலை பார்த்த ஏராளமான பெண்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டது.

இதனால் வேலை இழந்த பெண்கள் அத்தியாவசிய பொருள்களுக்காக பாலியல் தொழில் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் அந்த நாட்டில் பாலியல் தொழில்கள் அதிகரித்துவிட்டன. இரண்டு மூன்று மாதங்களில் மட்டும் ஏறத்தாழ 30 விழுக்காடு பாலியல் தொழில்கள் அதிகரித்துள்ளது. உண்ண உணவின்றி தவிக்கும் குடும்பத்தையும் குழந்தைகளையும் காக்க பெண்கள் பாலியல் தொழில்களுக்கு தள்ளப்பட்டுவருவதாக பாலியல் தொழிலார்கள் உரிமைக்காக குரல் கொடுக்கும் அமைப்பான ‘SUML’ தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ‘SUML' அமைப்பின் இயக்குநர் அஷிலா தந்தேனியா கூறுகையில், “கரோனா ஊரடங்கால் ஜவுளி சார்ந்த தொழில்கள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து வந்த இந்த பொருளாதார நெருக்கடியால் பலரது வேலைகள் பறிபோகின. இதன் காரணமாக பல பெண்கள் பாலியல் தொழில் செய்யத் தொடங்கிவிட்டனர்" என்றார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் ரெஹானா (21) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கூறுகையில்,” கடந்தாண்டு டிசம்பர் மாதம் வேலை இழந்தேன். அதன் பின் தினக்கூலியாக வேலை செய்துவந்தேன். இந்த வேலையும் அவ்வப்போதுதான் கிடைக்கும். குடும்பத்தை பாதுகாத்துக்கொள்ளும் அளவிற்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை.

இந்த நிலையிலேயே ஓர் ஸ்பா உரிமையாளர் என்னை பாலியல் தொழில் செய்ய அழைத்தார். இதை என் மனம் துளியும் ஏற்காவிட்டாலும், எனது குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு உள்ளதால் வேறு வழிதெரியவில்லை என்று கண்ணீர் மல்க தெரிவித்தார். இதையடுத்து ரோஸி (42) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் கூறுகையில், “இந்த பொருளாதார நெருக்கடியில் குடும்பத்தை நடத்த வருமானம் கிடையாது. இதனால் பாலியல் தொழிலைத் தேர்வு செய்தேன். இதில் வருமானம் கிடைக்கிறது. ஓர் கடையை வாடகைக்கு எடுத்து தொழில் செய்துவருகிறேன்" என் நிலைமை பல பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது" என்றார்.

சராசரியாக மாதம் ரூ. 20,000 முதல் ரூ.30,000 ரூபாய் வரை சம்பாதிக்கும் பெண்கள், ஒரே நாளில் ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை பாலியல் தொழிலில் சம்பாதிக்கின்றனர். இதனாலேயே பல பெண்கள் பாலியல் தொழிலுக்குத் தள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:1963ல் இருந்து மூன்றில் ஒரு பங்கு மிக்-21 போர் விமானங்கள் விபத்து!

Last Updated :Jul 30, 2022, 6:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.