தங்கையை பெண்கேட்டு தகராறு.. அண்ணனை வெட்டிக் கொன்ற இளைஞர்!

தங்கையை பெண்கேட்டு தகராறு.. அண்ணனை வெட்டிக் கொன்ற இளைஞர்!
தங்கையை பெண் கேட்டு தகராறு செய்த இளைஞர், அண்ணனை வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்: நத்தம் அருகே காசம்பட்டியைச் சேர்ந்த கணேசனின் மகனான ஜோதி(27) துபாயில் கட்டிட வேலை செய்து வந்தார். தனது தங்கை பிரியா(20) வின் திருமணத்திற்காக கடந்த 6 மாதங்களுக்கு முன் சொந்த ஊர் வந்திருந்தார். மதுரையைச் சேர்ந்த மணமகன் ஒருவருக்கு தனது தங்கைக்கு திருமணம் பேசிய ஜோதி, கடந்த 15 நாட்களுக்கு முன் நிச்சயதார்த்தத்தையும் முடித்துள்ளார்.
இரண்டு வாரங்களாக திருமண வேலைகளில் பரபரப்பாக இருந்த ஜோதி, அழகர் கோவில் மலையடிவாரத்தில் உள்ள தங்களின் தோட்டத்தில் செவ்வாய்க்கிழமையன்று (நவம்பர் 29) சடலமாக கண்டெடுக்கப்பட்டார். கழுத்தின் பின் பகுதியில் வெட்டுக்காயத்துடன் ரத்த வெள்ளத்தில் ஜோதி உயிரிழந்து கிடந்ததால் அவரது உறவினர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
ஜோதியின் தந்தை கணேசன் அளித்த தகவலின் பேரில் நத்தம் போலீசர் விசாரணையை தொடங்கினர். ஜோதியுடன் முன்விரோதத்தில் இருப்பதாக கூறப்படும் பிரபாகரன் (30) என்ற நபரைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ஜோதியின் தங்கையை திருமணம் செய்ய தான் பெண் கேட்டதாகவும், ஆனால் தன்னுடைய சாதியை காரணம் காட்டி மறுத்த ஜோதி, வேறொரு நபருடன் வரும் 5ம் தேதி திருமணத்திற்கு நிச்சயம் செய்திருப்பதாகவும், இது தனக்கு ஆத்திரமூட்டியதாகவும் பிரபாகரன் தெரிவித்ததாக போலீசார் கூறியுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை இரவும் தோட்டத்தில் தனியாக இருந்த ஜோதியிடம் பிரபாகரன் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போதும் சாதியை காரணம் காட்டி ஜேழதி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற பிரபாகரன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஜோதியை பின்புறமாக தாக்கி வெட்டிக் கொன்றதாகவும் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து பிரபாகரனை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:
