ஜவுளிக்கடை காவலாளியை தாக்கி ஆடைகளை லாரியில் ஏற்றி சென்ற கும்பல்..

ஜவுளிக்கடை காவலாளியை தாக்கி ஆடைகளை லாரியில் ஏற்றி சென்ற கும்பல்..
பழனியில் ஜவுளிக்கடை காவலாளியை தாக்கிய மர்ம நபர்கள், அங்கு இருந்த ஆடைகளை லாரிகளில் ஏற்றி சென்ற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்: பழனியில் பொதுப்பணித்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே தனியார் துணிக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த துணிக்கடையில் இரவு காவலில் இருந்த தேவேந்திரன் என்பவரை நேற்று இரவு மர்மநபர்கள் சிலர் தாக்கி கட்டிப்போட்டு, கடையில் இருந்த புதிய துணிகளை லாரிகளில் ஏற்றி கடத்தி சென்றதாகவும், காவலாளி தேவேந்திரனையும் லாரியில் கடத்திச்சென்று பொள்ளாச்சி அருகே இறங்கிவிட்டுச் சென்றதாகவும் பழனி நகர் காவல்நிலையத்தில் கடையின் உரிமையாளர் ஜோதிகணேஷ் என்பவர் புகார் அளித்துள்ளார்.
காவலாளி தேவேந்திரனை கடத்திச்சென்ற கும்பல் பொள்ளாச்சி அருகே செல்போனை பிடுங்கிவிட்டு இறக்கி விட்டதாகவும், அங்கிருந்து பழனி வந்து உரிமையாளரிடம் தகவல் கொடுத்ததாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திருட்டு நடந்ததாக புகார் எழுந்துள்ள நிலையில், துணிக்கடை உரிமையாளர் ஜோதிகணேஷ் தங்களிடம் வாங்கிய பொருட்களுக்கு பணம் தராமல் இருப்பதாக வெளியூர் வியாபாரிகள் பலரும் கடை உரிமையாளர் ஜோதிகணேஷ் மீது பழனி நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
எனவே ஜோதிகணேஷிற்கு பொருட்கள் வழங்கிய வெளியூர் வியாபாரிகள் இந்த செயலில் ஈடுபட்டார்களா? அல்லது வேறு யாரேனும் செய்தார்களா? என்ற கோணத்தில் பழனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: போலி திருமண தளங்களில் சிக்கும் இளைஞர்கள்.. நூதன மோசடியில் இளம்பெண்கள்!
