நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம் - ஓடோடி சென்று கர்ப்பிணிக்கு உதவிய பெண் போலீஸ்

author img

By

Published : Sep 18, 2022, 1:52 PM IST

Updated : Sep 18, 2022, 2:27 PM IST

பிரசவம் பார்த்த பெண் போலீஸ்

வேலூர் அருகே நள்ளிரவில் பிரசவ வலியால் துடித்த ஆதரவற்ற பெண்ணிற்கு பெண் காவலர் ஒருவர் உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர்: அண்ணா சாலையில் அமைந்துள்ள தெற்கு காவல் நிலையம் அருகே நள்ளிரவு சுமார் 2.30 மணி அளவில் ஒரு பெண்ணிண் அலறல் சத்தம் கேட்டுள்ளது. ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் பெண்ணின் அலறலைக் கேட்டபோது, இரவு பணிக்கு வந்துகொண்டிருந்த பெண் தலைமைக்காவலர் இளவரசி ஓடிச்சென்று பார்த்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அங்கு நிறைமாத கர்ப்பிணி பிரசவ வலியால் துடித்துள்ளார். அருகில் 10 வயதில் ஒரு சிறுவனும் இருந்துள்ளார். இந்த நிலையில் செய்வதறியாது திகைத்து நின்ற பெண் காவலர் இளவரசி, உதவிக்கு சக காவலர்களை அழைக்கச்சென்ற நேரம் அப்பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது.

இதனையடுத்து உடனடியாக 108 ஆம்புலென்ஸிற்குப்போன் செய்து பெண்ணையும், சிசுவையும் மீட்டு அருகில் உள்ள வேலூர் பெண்ட்லெண்ட் அரசு மருத்துவமனையில் அனுமதித்து, தேவையான உதவியும் செய்துள்ளனர். அங்கு அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர். நள்ளிரவில் பெண் காவலரின் இச்செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பின்னர் இதுகுறித்து அப்பெண்ணிடம் விசாரித்தபோது, ' தன் பெயர் ஹபானா(30); குடியாத்தம் சித்தூர் கேட் பகுதியைச்சேர்ந்தவள்; இதே பகுதியைச்சேர்ந்த சானு(40) என்ற டீக்கடை நடத்தி வந்தவருடன் திருமணம் ஆகிய நிலையில், 10 வயதில் ஒரு மகன் உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் கணவர் என்னை விட்டுச்சென்றுவிட்டார். பெற்றோரும் இல்லை. எனது அண்ணனும் கண்டுகொள்ளவில்லை.

தங்க வீடு இல்லாத நிலையிலும், உறவினர்கள் யாரும் உதவவில்லை. அண்ணா சாலையின் ஓரம் தனது மகனுடன் படுத்து உறங்கி வருகிறேன். அங்கு சிலர் கொடுக்கும் உணவை உண்டு வருகிறேன். மழைக்காலத்தில் பேருந்துநிலையத்தில் வாழ்ந்து வருகிறேன்' எனவும் கூறினார்.

உடன் பிறந்தவரும், உறவினர்களும் கைவிட்ட நிலையில், ஆதரவற்று இருக்கும் இப்பெண்ணிற்கும், அவரது குழந்தைகளுக்கும் அரசு உதவ வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: எனது பிறந்த நாளில் லட்சக்கணக்கான தாய்மார்களின் ஆசிர்வாதம் கிடைப்பதில் மகிழ்ச்சி... பிரதமர் மோடி உருக்கம்...

Last Updated :Sep 18, 2022, 2:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.